Published : 14 Jan 2023 11:18 AM
Last Updated : 14 Jan 2023 11:18 AM
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட காவலரின் நேர்மையை உலகறியச் செய்ய வீரய்யா எடுக்கும் வீர தீர சாகசங்களின் அவதாரமே ‘வால்டர் வீரய்யா’ படத்தின் ஒன்லைன்.
சர்வதேச போலீசாரால் தேடப்படும் சாலமன் சீஸர் (பாபி சிம்ஹா) ‘ரா’ பிரிவு உளவுத் துறையால் கைது செய்யப்பட்டு தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார். அப்போது வழியில் விமானம் கோளாறாகி நின்றுவிட, காவல் நிலையம் ஒன்றில் தற்காலிகமாக ஓரிரவு மட்டும் அடைத்து வைக்கப்படுகிறார். பின்னர், அங்கிருக்கும் காவலர்களை கொன்றுவிட்டு மலேசியா தப்பிச்செல்லும் சாலமனை பழிதீர்க்க, வால்டர் வீரய்யாவின் (சிரஞ்சீவி) உதவியை நாடுகிறார் காவல் ஆய்வாளர் ஒருவர்.
இறுதியில் மலேசியா செல்லும் வால்டர் வீரய்யா, சாலமன் சீஸரை கண்டறிந்து பழிதீர்த்ததா? இல்லையா? என்பதுடன் சில ப்ளாஷ்பேக், பல ட்விஸ்டுகளை கலந்து சொல்லியிருக்கும் படம் ‘வால்டர் வீரய்யா’.
‘கடலோட அரசன்’, ‘வங்காள விரிகுடாவின் தகப்பன்’ என பில்டப்புகளால் ஹைப் ஏற, கொந்தளிக்கும் ஆழ்கடலில் கொட்டும் மழையில் பீடியும், லுங்கியுமாய் ‘மாஸ்’ என்ட்ரி கொடுக்கிறார் சிரஞ்சீவி. கண்ணைப் பறிக்கும் கலர்களில் சட்டை, அதற்கேற்ற லுங்கி, கூடவே ஒரு கூலிங் க்ளாஸ், ரசிக்கவைக்கும் உடல்மொழி, கிச்சுகிச்சு மூட்டும் ஒன்லைன் காமெடிகளில் ஈர்க்கும் சிரஞ்சீவியின் நடிப்பு அவரது ரசிகர்களுக்கு உண்மையில் ‘சங்கராந்தி’ விருந்து.
அவருக்கு இணையான ஸ்கிரீன் ப்ரசன்ஸ் இல்லாவிட்டாலும் இறுக்கமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தாலும், இறுதியில் சில சென்டிமென்டிலும் ஈர்க்கிறார் ரவி தேஜா. காதலுக்காகவும், ரொமான்ஸுக்கும், பாடல்களுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரமாக ஸ்ருதிஹாசன் வந்தாலும், சில ஆறுதல் ஆக்ஷன்காட்சிகளில் கவனம் பெறுகிறார்; கேத்ரின் தெரசாவுக்கு பெரிய அளவில் வேலையில்லை.
ஸ்டைலிஷ் வில்லனாக பாபிசிம்ஹா நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். பிரகாஷ்ராஜ் தனக்கு பழக்கப்பட்ட வில்லன் ஏரியாவில் தூசி பறக்க களமாடுகிறார். வலுவாக எழுதப்பட்ட அவரது கதாபாத்திரம் இறுதியில் நீர்த்துப்போகிறது. சத்யராஜ், நாசர் உள்ளிட்ட நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.
மசாலா டெம்ப்ளேட்டில் இன்ட்ரோ பாடல், கண்டதும் காதல், பஞ்ச் டையலாக், ‘மாஸ்’ சண்டைகள் என மெகாஸ்டாரிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் ஒருசேர மிக்ஸ் செய்து படத்தை தொடங்குகிறார் இயக்குநர் பாபி. ஆங்காங்கே சிரஞ்சீவியின் காமெடி பலனளிக்கிறது. முதல் பாதி முழுவதும் ஜாலியாக நகரும் படத்தை தனது உடல்மொழி, நையாண்டியால் தாங்குகிறார் சிரஞ்சீவி. ஆனால், அதுவும் ஒருகட்டத்திற்கு பிறகு அயற்சி கொடுக்க படம் இடைவேளையை நெருங்கும்போது சூடுபிடிக்கிறது.
இரண்டாம் பாதியில் ரவி தேஜாவின் வருகை நிமிர்ந்து அமர வைக்க, பிரகாஷ்ராஜ் + சிரஞ்சீவி என மூன்று பெரிய நடிகர்களை மையமிட்டு நகரும் கதை நெருடலில்லாமல் பயணிக்கிறது. சிரஞ்சீவிக்கும் - ரவி தேஜாவுக்குமான கெமிஸ்ட்ரியும், அவர்களுக்குள்ளான சில சென்டிமென்ட் காட்சிகளும் பொருந்துகின்றன.
ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவில் பிரமாண்டமான காட்சிகள் ஒட்டுமொத்த படத்துக்கும் அழகூட்டுகின்றன. ‘பூனகாலு லோடிங்’, ‘வீரய்யா’ பாடல்கள் தேவிஸ்ரீபிரசாத் இசையில் கவனம் ஈர்க்கின்றன. சண்டை, சென்டிமென்ட், சில நையாண்டி காட்சிகளுக்கும் டிஎஸ்பியின் இசை வலு சேர்க்கிறது. நிரஞ்சனின் படத்தொகுப்பு காட்சிக்கு காட்சி ‘மாஸ்’ கூட்ட உதவுகிறது.
சீரியஸான இடங்களிலும், சென்டிமென்ட் தருணங்களுக்கும் சம்பந்தப்பட்ட காட்சிகள் நியாயம் சேர்க்காதது பெரும் சிக்கல். இதனாலேயே உணர்வுபூர்வமான காட்சிகள் அதன் அடர்த்தியிலிருந்து விலகி நிற்கின்றன. அதேபோல பிரச்சினையை மையமாக கொண்டு படம் நகரும்போது, நடுவில் வரும் ரொமான்ஸ் பாட்டு பிரியாணிக்கு நடுவில் வரும் ஏலக்காய் போல தொந்தவரவு. மொக்கையான ‘ரா’ உளவுப் பிரிவு, பலவீனமான க்ளைமாக்ஸ், தேவையில்லாத டூயட், பல இடங்களில் கனெக்டாகாத சென்டிமென்ட், ஆங்காங்கே தலைதூக்கும் லாஜிக் மீறல்கள் சோர்வு.
மொத்தத்தில் நீங்கள் சிரஞ்சீவி, ரவி தேஜா ரசிகர்களாக இருந்தால் ‘வால்டர் வீரய்யா’ உங்களை ரசிக்க வைக்கும். பொதுப் பார்வையாளர்களுக்கு வழக்கமான வெகுஜன மசாலா சினிமாவாக சில ஏமாற்றங்களைக் கொடுக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT