Published : 12 Jan 2023 05:14 PM
Last Updated : 12 Jan 2023 05:14 PM
பாலகிருஷ்ணா ரசிகர்களுக்காக... பாலகிருஷ்ணாவால்... பாலகிருஷ்ணாவை நேசிக்கும் இயக்குநர் ஒருவர் இயக்கியிருக்கும் படம்தான் ‘வீர சிம்ஹா ரெட்டி’.
துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் அம்மா மீனாட்சி (ஹனி ரோஸ்) உடன் வசித்து வருகிறார் ஜெய் சிம்ஹா ரெட்டி (நந்தமுரி பாலகிருஷ்ணா). அம்மா ரெஸ்டாரன்டை கவனித்துக்கொள்ள, மகன் ஜெய் சிம்ஹா கார் டீலர்ஷிப் செய்து பிழைப்பை நடத்துகிறார். அப்போது ஈஷா (ஸ்ருதி ஹாசன்) உடன் ஜெய் சிம்ஹாவுக்கு காதல் ஏற்பட, திருமணத்திற்கு இரண்டு வீட்டு தரப்பில் சம்மதம் வருகிறது. அம்மாவுடன் வாழும் ஜெய், ‘எனக்குதான் அப்பா இல்லையே’ என்று சொல்ல, உடனே தாய் மீனாட்சி ‘உனக்கு அப்பா இருக்காரு’ என அவர் பேர் ‘வீர சிம்ஹா ரெட்டி’ என கூற, ஆச்சரியமடைகிறார் ஜெய். அதையடுத்து யார் இந்த வீர சிம்ஹா ரெட்டி? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மீனாட்சி தன் மகனுடன் தனித்து வாழ என்ன காரணம்? - இதையெல்லாம் மாஸாக சொல்கிறது திரைக்கதை.
இயற்பியல் விதிகள் எதுக்கும் அகப்படாமல் களமாடும் பாலகிருஷ்ணா எதிரிகளை தரையில் தங்க விடுவதேயில்லை. தன்னை நோக்கி வரும் எதிரிகளை பாதி நேரத்துக்கும் மேல் காற்றிலேயே மிதக்கவிடுகிறார். அப்பா - மகன் என்ற இரண்டு வேடங்களில் தனது முழுமையான உழைப்பைக் கொட்டி நடிப்பில் ‘மாஸ்’ காட்டுகிறார்.
‘நாட் ஒன்லி ஃபேமஸ்; பட் ஆல்சோ டேன்ஜரஸ்’ (Not only famous but also danger), ‘பயம்ங்குறது என் பயோடேட்டாவுலேயே இல்லடா’ போன்ற பஞ்ச வசனங்களை அவர் உச்சரிக்கும்போது ரசிகர்கள் ‘ஜெய் பாலையா’ என குதூகலிக்கின்றனர். கூலிங் க்ளாஸை ஸ்டைலாக பாக்கெட்டுகள் தூக்கி போடுவது, சிகரெட்டை வாயில் கேட்ச் செய்வது, கம்பீரமான அந்த நடை, ஆக்ரோஷமான பஞ்ச் வசனங்கள், எதிரிகளை அடித்து ஹேங்கரில் மாட்டிவைப்பது, ஒவ்வொரு முறையும் ஒரு ‘மாஸ்’ பிஜிஎம்முடன் கூடிய இன்ட்ரோ என திரை முழுக்க நிறைந்திருக்கிறார் பாலகிருஷ்ணா.
தவிர, நடனத்திலும் சில சிக்னேச்சர் ஸ்டெப்களை பதிய வைக்கிறார். ஸ்ருதி ஹாசனுக்கு நடிப்பில் பெரிய வேலையில்லை என்றாலும் நடனத்தில் ஸ்கோர் செய்கிறார். வரலட்சுமி சரத்குமார் எதிர்மறை கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமான நடிப்பில் ‘சர்கார்’ பட கோமளவள்ளியை நினைவூட்டுகிறார். ஹனிரோஸ், லால், நவீன் சந்திரா, துனியா விஜய் உள்ளிட்டோர் தேவையான நடிப்பை பதிவு செய்கின்றனர்.
முதல் பாதியை ரசிகர்களுக்கான ‘மாஸ்’ பீஸாகவும், இரண்டாம் பாதியை குடும்பங்களின் சென்டிமென்ட்க்காகவும் தனியே பிரித்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி. இடைவேளைக்கு முன்பு வரையிலேயே 5 சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள், இரண்டு பாடல்களால் நிரம்பியிருக்கிறது. ஸ்ருதி ஹாசனுக்கும், பாலகிருஷ்ணாவுக்கும் காதல் வர சொல்லும் காரணம், ஆந்திராவிலிருந்து இஸ்தான்புல்லுக்கு சென்று அவர்கள் வசிப்பதற்கான பின்புலம் இல்லாமை போன்ற தர்க்கப் பிழைகள் தலைவிரித்து ஆடினாலும் அதையெல்லாம் யோசிக்க நேரம் கொடுக்காமல் சண்டைக் காட்சிகளால் அடுத்தடுத்து நகரும் முதல் பாதியை ரசிகர்களின் விசில் சத்ததின் உதவியுடன் கடந்துவிட முடிகிறது.
ஆனால், இரண்டாம் பாதியில் சண்டைக் காட்சிகளின் காலி இடங்களை அண்ணன் - தங்கை சென்டிமென்ட் ஆக்கிரமித்துகொள்வதால் முதல் பாதியில் கிடைத்த ரசிகர்களின் உதவி இரண்டாம் பாதியில் நமக்கு இல்லாமல் போகிறது. கனெக்ட் ஆகாத பழைய சென்டிமென்ட் காட்சிகள் திரையில் வறட்சியை கூட்டுகின்றன. இடையே காலால் உதைத்து காரை பின்னோக்கி நகர்த்துவது, நாற்காலியில் அமர்ந்து கொண்டு 40 பேரை காலி செய்வது, இரண்டு இரண்டு, மூன்று மூன்று பேராக அடித்து பறக்கவிட்டு, கசாப்புக் கடையில் கறியை மாட்டிவைப்பது போல அடியாட்களை மாட்டிவைப்பது, உள்துறை அமைச்சரின் முன்பாக அமர்ந்து ‘‘உன் பாஷைல G.O-ணா Government order; அதே என் பாஷைல G.Oணா ‘Gods order” என 2023-லும் இப்படியான காட்சிகள் திரைக்கதையில் மாற்றங்களை கோருகிறது.
தவிர, தமன் இசையில் ‘மாஸ்’ காட்சிகளுக்கான பின்னணி இசை படத்திற்கு பலம். ‘ஜெய் பாலையா’ பாட்டு படத்துடன் ஒன்றி வருவது முணுமுணுக்க வைக்கிறது. ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவில் விரியும் காட்சிகள் குவாலிட்டியை கூட்டுகின்றன. ஒவ்வொரு முறை பாலகிருஷ்ணாவின் இன்ட்ரோவையும் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது நவீன் நூலி படத்தொகுப்பு.
மொத்தத்தில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ முழுக்க முழுக்க ‘மாஸ்’ தருணங்களைக்கொண்டு பாலகிருஷ்ணா ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட படமாக திரையில் விரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT