Published : 12 Jan 2023 04:31 AM
Last Updated : 12 Jan 2023 04:31 AM
தொழிலதிபர் ராஜேந்திரனுக்கு (சரத்குமார்) 3 மகன்கள். மூத்த மகன் ஜெய் (மேகா ஸ்ரீகாந்த்), நடு மகன் அஜய் (ஷாம்) இருவரும் அப்பா சொல் கேட்டுத் தொழிலை கவனித்துக் கொள்ளும் பொம்மைகள். கடைசி மகன் விஜய் (விஜய்), சொந்தத் திறமையால் முன்னேற விரும்புகிறார். அதை அப்பா விரும்பாததால் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். 7 ஆண்டுக்குப் பின் மீண்டும் வீட்டுக்கு வர வேண்டிய சூழல். அப்பாவின் தொழில் எதிரி ஜெயப்பிரகாஷால் (பிரகாஷ் ராஜ்) சரியும் குடும்பத்தின் தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், குடும்பத்தின் சிக்கல்களையும் சரி செய்ய விஜய் என்ன செய்கிறார், ராஜேந்திரனின் தொழில் வாரிசாகும் தகுதி விஜய்க்கு வந்ததா, இல்லையா? என்பது கதை.
பார்த்துப் பழகிய கதைதான். அதை பெரும் தொழிலதிபர் கூட்டுக் குடும்பத்தில் நுழைத்தது, அம்மா - அப்பா - அண்ணன் - அண்ணி - அவர்கள் குழந்தைகள் என சென்டிமென்டாக மாற்றியது, அதன்வழி தொழிலுக்கும் குடும்பத்துக்கும் இருக்கும் பிணைப்பை ஆழமாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தும் குடும்பக் காவியமாகக் கொடுத்தது ஆகியவற்றில் வெற்றிப் பெற்றிருக்கிறார் இயக்குநர் வம்சி.
மாஸ் ஹீரோ படங்களில் துணைக் கதாபாத்திரங்கள் என்பவை பெரும்பாலும் நாயகனின் திறமைகளை வெளிச்சம்போட்டுக் காட்டவே பயன்படுத்தப்படும். இதிலும் அந்த சொதப்பல் ‘டெம்பிளேட்’ இருக்கவே செய்கிறது. அதைத் தாண்டி, முதன்மை துணை பாத்திரங்களுக்குத் தனித் தனி சிக்கல், வீழ்ச்சி மற்றும் எழுச்சியை எழுதி அவற்றை முழுமைப்படுத்திய வகையில் இயக்குநரின் கதாபாத்திர அணுகுமுறையைப் பாராட்டலாம். அதேநேரம், நாயகன் - நாயகி காதல், பாடல்கள் ஆகியவற்றை திரைக்கதையில் ஒட்டியதைத் தவிர்த்திருக்கலாம்.
விதி மீறி இயங்கும் சுரங்கங்கள் சுற்றுச் சூழலின் ஆன்மாவைச் சிதைப்பவை. அவற்றை மூலாதாரமாகக் கொண்டுள்ள தனது தந்தையின் தொழிலைக் காக்க, அவற்றை ஏலம் எடுத்து மீண்டும் சுரண்டுவதற்கு போராடுகிறார் விஜய்.‘கத்தி’ போன்ற படத்தில் தண்ணீர் சுரண்டலுக்கு எதிராகப் போராடும் இளைஞனாக வந்த விஜய், இந்த முரண்பாட்டை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்.
தான் நிராகரித்த தொழில் திட்டத்தை, ரூ.400 கோடி கடன் வாங்கி மகன் ரகசியமாக நடத்துவதும், மற்றொரு மகன், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் சக்தி வாய்ந்த அப்பாவுக்குத் தெரியாமல் இருப்பது உட்பட திரைக்கதையில் தர்க்கப் பிழைகள் நிறைய.
அதை, ஒற்றை ஆளாக மறக்கடித்துவிடும் ‘என்டர்டெயின’ராக படம் முழுவதையும் தாங்கிப் பிடிக்கிறார் விஜய். அவரது நக்கல் கலந்த நகைச்சுவை நடிப்பும், யோகி பாபுவுடனான கூட்டணியும் ரசிகர்களை உற்சாகப் படுத்துகிறது. ராஷ்மிகாவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் ஈர்க்கும் தோற்றம், நடனம், நடிப்பில் திறமையை வெளிப்படுத்தத் தவறவில்லை.
வெற்றிகரமான தொழிலதிபராக சரத்குமாரும், குடும்பத்துக்காக தன் கனவுகளை உதறிவிட்ட அவர் மனைவியாக ஜெயசுதாவும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
வில்லனாக வரும் பிரகாஷ் ராஜ் வழக்கமான கார்ப்பரேட் எதிரியாக கடந்துபோகிறார். தமனின் இசையில் பாடல்கள் இனிமையாகவும் விஜய் ரசிகர்களுக்கு நடன விருந்தாகவும் அமைந்துள்ளன. திலீப் சுப்பராயன் - பீட்டர் ஹெய்ன் இணைந்து அமைத் துள்ள சண்டைக் காட்சிகள் மாஸ் ரசிகர்களின் பசிக்கு பெரும் தீனி.
சொந்தக் காலில் நின்று தொழில் தொடங்க நினைக்கும் நாயகனை தற்காலத்தின் பிரதிபலிப்பாக எழுதிய இயக்குநர், ஒரு தொழில் குடும்பத்தில் இருக்கும் உள்ளடி உறவுச் சிக்கல்களையும் மோதல்களையும் கூட தற்கால பிரதிபலிப்பாக எழுதியிருந்தால் ‘வாரிசு’வின் கம்பீரம் இன்னும் கூடியிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT