Published : 10 Jan 2023 08:24 AM
Last Updated : 10 Jan 2023 08:24 AM

கே.பாக்யராஜ் சொன்ன விநாயகர் கதை

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல் முராட், சக்திவேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். சுதிர் நாயகனாக நடித்துள்ளார். மது, ஹரிணி, நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் உட்பட பலர் நடித்துள்ளனர். நந்தா ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் செல்வா இசை அமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பாக்யராஜ் பேசும் போது கூறியதாவது: படத்தின் இயக்குநர் இங்கு பேசும்போது, பல்வேறு சிரமங்களை சந்தித்துதான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. 3 திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டி விட்டு திருடப்போவார்கள். ஒன்றும் கிடைக்காவிட்டால் சண்டை போடுவார்கள். அப்படிப் பல நாள் எதுவும் கிடைக்கவில்லை.

ஒரு நாள், இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள். அன்றும் கிடைக்காமல் போக, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள். மூன்றாவது திருடன் மட்டும் தயங்கினான். விநாயகர் தண்டித்து விட்டால் என்ன செய்வது? என்று பயந்து கோயிலுக்கு வெளியே இருந்த மரத்தின் மீது வீசினான். அதே நேரத்தில் எதிரே விநாயகர் நின்றார், தலையில் ரத்தத்தோடு. நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றுதான் மரத்தின் மீது ஏறி உட்கார்ந்திருந்தேன் என்றார் விநாயகர். அதுபோல இடையூறுகள் வருவது என்றால், எப்படியென்றாலும் வந்தே தீரும். இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x