Published : 28 Dec 2022 08:26 PM
Last Updated : 28 Dec 2022 08:26 PM

Rewind 2022 | மொழி கடந்து இன்ஸ்டா ரீல்ஸ்களை இமைக்காமல் பார்க்கவைத்த 10 பாடல்கள்

டிக் டாக் தடைக்குப் பின்னர் 2K கிட்ஸ்கள் மட்டுமின்றி தாத்தா, பாட்டி வரை லூட்டி அடிக்கும் சமூக வலைதள செயலிகளில் இன்ஸ்டாகிராம் தவிர்க்க முடியாததாக இருந்து வகிக்கிறது. 'இன்ஸ்டா உலகத்தார் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகும் நேரங்களில் மட்டுமே உறங்குவார்களோ?' என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு அது மொபைல் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்கள் பதிவிடுவது இன்றையச் சூழலில் காணப்படும் மிகப் பெரிய சமூக அங்கீகாரமாக கருதப்படுகிறது. இதில் பலரும் விதவிதமான அவர்களது விருப்பம் சார்ந்த ரீல்ஸ்களை பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். பல்வேறு திரைப்படப் பாடல்களுக்கு நடனம் ஆடியும், அதுவும் அந்தத் திரைப்படத்தில் வரும் அதே ஸ்டெப்ஸ்களை ஆடியும், இனஸ்டாவில் ரீல்ஸ்கள் பதிவிடுவதெல்லாம் தனிக் கலை.

அந்த வகையில், 2022-ம் ஆண்டு வெளியான தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி சார்ந்த பாடல்களும், நடனங்களும், இன்ஸ்டாகிராம் உலகத்தாரை வெகுவாகவே ஈர்த்திருந்தன. பொதுவாக ரசனையும், விருப்பமும் ஒவ்வொரு தனிநபர் சார்ந்தும் மாறுபடும். ஆனால், இன்ஸ்டா ரீல்ஸ்களில் ஒரு வித்தியாசம். இன்ஸ்டாவில் ட்ரெண்டாகும் ஏதாவது ஒரே பாடலுக்கு, அந்த செயலியின் ஆக்டிவாக இருக்கும் அனைவருமே ஒரு ஆட்டத்தைப் போட்டு ரீல்ஸ்களைப் பதிவிடும் முறையை காண முடிகிறது.

Nattu Nattu - எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், கடந்த மார்ச் 25-ம் தேதி வெளியான பான் இந்தியா திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த பிரமாண்ட படத்தில் எம்.எம்.கீரவாணியின் இசையில் வந்த அனைத்துப் பாடல்களுமே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும், ராம் சரணும், ஜூனியர் என்டிஆரும் சேர்ந்து ஆட்டம் போட்ட நாட்டு நாட்டு பாடல்களுக்கு இன்ஸ்டாவில் ஆட்டம் போட்டதே கால்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்ஸ்டா ரீல்ஸ்களில் காண முடிந்தது.

Halamithi Habibo -நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியானது. நடிகர் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பலருக்கும் அவரது நடனத்திற்கு அனைவரிடத்திலும் ஒரு வரவேற்பு இருக்கும். அந்த வகையில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனுடன் ஜொனிதா காந்தி சேர்ந்து பாடிய ஹலமிதி ஹபீபோ என்று தொடங்கும் அரபிக்குத்துப் பாடல் கடந்தாண்டு முழுவதும் ஒரு கலக்கு கலக்கியது. இந்தப் பாடலுக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் ஆட்டம் போட்ட ரீல்ஸ்கள் வெகுவாக பரவியது.

Ra Ra Rakamam - இயக்குநர் அனுப் பண்டாரி இயக்கத்தில், கடந்த ஜூலை 28-ம் தேதி வெளியான கன்னட திரைப்படம் விக்ராந்த் ரோனா. அஜனேஷ் லோக்நாத் இசையில் வெளிவந்த இத்திரைப்படத்தில், வெளிவந்த ரா ரா ராக்கம்மா பாடலுக்கு இன்ஸ்டாவில் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்திருந்தது. இளம்பெண்கள் தொடங்கி பலரும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ்களைப் பதிவிட்டிருந்தனர். கன்னட மொழி பாடலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராமர்கள் பலரும் நடனமாடி தங்களது ரீல்ஸ்களைப் பதிவிட்டிருந்தனர்.

Bullet Song - இயக்குநர் லிங்குசாமி எழுதி இயக்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் தி வாரியர். கடந்த ஜூலை 14-ம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் இடம்பெற்ற "Come on baby lets go on the bullet" பாடல் போதும் போதுமெனும் அளவிற்கு பிரபலம். சிறு குழந்தைகள் முதல் இளம் வயதினர் வரை பிரசித்திப் பெற்ற இந்த பாடலுக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, மற்ற பிற மாநிலங்களைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் யூஸர்களும், இந்த பாடலுக்கு ஒரு ஆட்டத்தைப் போடாமல் இல்லை. இந்தப்பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Thandanaanandha - கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் அன்டே சுந்தரநிகி. இசையமைப்பாளர் விவேக் சாகர் இசையில் வெளிவந்த Thandanaanandha-Promo song இல் இடம்பெற்றிருந்த ஒரு இடையிசை அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. ரொம்ப ஸ்லோ பீட்டில் வரும் அந்த இசைக்கு பலரும் நடனமாடி ரீல்ஸ்களைப் பதிவிட்டு மகிழ்ந்தனர். இன்னும் சிலர், வேறொரு பாஃஸ்ட் பீட்டை அந்த காட்சியமைப்பிற்கு மிகப் பொருத்தமாக அமைத்து, சற்று கூடுதல் வேகத்துடன் நடனமாடியும் பதிவிட்டிருந்தனர். நஸ்ரியா பஃஹத், நானியின் டான்ஸ் மூவ்மென்ட்ஸ்களையும் தாண்டி, அவர்களது காஸ்ட்யூம்களும் இன்ஸ்டாகிராமர்களை வெகுவாக ஈர்த்திருந்ததைக் கவனிக்க முடிந்தது.

Megham Karukatha - இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இசையமைப்பாளர் அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதுவும் தனுஷ், நித்யாமேனன் யாருமற்ற சாலையில் இரவு நேரத்தில் ஆட்டம் போடும், மேகம் கருக்காதா பாடல் இணையம் முழுக்க வைரலாகி நிரம்பி வழிந்தது. குறிப்பாக இன்ஸ்டாகிராமர்கள் பலரும், பாடலின் இடையில் வரும் அந்த இசைக்கு ஏற்ப தங்களுக்கு தோதான இடங்களில் எல்லாம் நடனமாடி ரீல்ஸ்களை பதிவிட்டு, கண்களால் பேசிய பாஷையால் இன்ஸ்ட்கிரமே கிறங்கியிருக்கும்.

Ma Ma Mahesha- இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் சர்காரு வாரி பட்டா. தமன் இசையில் வெளிவந்த இந்தப் படத்தில், இடம்பெற்ற மம் மம் மம் மம் மகேசா பாடல் இன்ஸ்டா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்கான நடனமும் ரசிகர்களை வெகுவகா ஈர்த்திருந்தது. இந்தப் பாடலுக்கு நடனமாடி தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ்களை பதிவிட்டதன் மூலம் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியிருந்தனர்.

Ra Ra Reddy I'm Ready - இயக்குநர் எம்.எஸ்.ராஜசேகர ரெட்டி இயக்கத்தில் ஆகஸ்ட் மாதம் வெளியான தெலுங்குத் திரைப்படம் மச்ரேலா நியோஜகவர்கம். இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த Ra Ra Reddy I'm Ready பாடல் பலரையும் ஈர்த்திருந்தது. குறிப்பாக பாடலின் இறுதியில் வரும், ஜெயம் படத்தில் இடம்பெற்ற "Ranu Ranu Antundi Chinnadho" இடங்கள்தான் இன்ஸ்டாகிராமில் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தியிருந்தது. ஆடமுடியாதவர்கள்கூட எப்படியாவது இந்த இடத்திற்கு மட்டுமாவது ஆடி ஒரு ரீல்ஸை பதிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடனமாடி பதிவிட்டிருந்த ரீல்ஸ்களை இன்ஸ்டாவில் காணமுடிந்தது.

Private Party - இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான தமிழ் திரைப்படம் டான். இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம இணையத்தில் வைரலானவை. குறிப்பாக, படத்தின் இசையமைப்பாளரும் ஜொனிதா காந்தியும் சேர்ந்து பாடிய மாடர்ன் ரதியே பாடல்தான் பலரை ரிபீட் மோடில் ஆட்டம் போட வைத்த பாடல். இந்தப் பாடலின் முடிவில் வரும் இடையிசைக்கு பலரும் படத்தில் வரும் அதே ஸ்டெப்ஸ்கைளை போட்டு, இன்ஸ்டாவில் ரீல்ஸாக பதிவிட்டு, தங்களது வாழ்நாள் சேமிப்பாக பாதுகாத்து வருகின்றனர்.

Two Two Two - இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தமிழ் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும், சுனிதா சவுகானும் சேர்ந்து பாடிய டூ டூடூ டூடூ டூட்டுடூ பாடல் இன்ஸ்டாவில் பலரால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்தப் பாடலுக்கும் பலரும் நடனமாடி தங்களது ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவேற்றியிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x