Published : 25 Dec 2022 07:14 AM
Last Updated : 25 Dec 2022 07:14 AM
மருத்துவரான கணவர் ஜோசப் (வினய்) கரோனாவால் இறந்ததும் அவர் மனைவி சூசனுக்கும் (நயன்தாரா) மகள் அனாவுக்கும் (ஹனீயா நஃபீஸ்), சூசனின் தந்தை ஆர்தர் (சத்யராஜ்)தான் ஆறுதல். அவர், இவர்களிடம் வீடியோ காலில் அவ்வப்போதுபேசிவருகிறார். இந்த நேரத்தில் சூசனுக்கும் அனாவுக்குமே கரோனா பாசிட்டிவ் வந்துவிட, வெவ்வேறு அறைகளில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அப்போது அனா செய்யும் ஒரு செயலால் அவரைத் தேடி வந்து ஒட்டிக்கொள்கிறது ஒரு முரட்டுப் பேய். யாரும் உதவி செய்ய இயலாத பொதுமுடக்கக் காலத்தில் அந்த அடங்கா பேயை எப்படி விரட்டி, தன் மகளை சூசன் மீட்கிறார் என்பதுதான் கதை.
கரோனா காலகட்டத்தில் ஜூம் மீட்டிங், வீடியோ கால் வியாபாரம் என கற்றுக்கொண்ட நமக்கு அதேமுறையில் பேய் விரட்டும் வேலையை சொல்லி இருக்கிறது, படம். ஏற்கனவே‘மாயா’, ‘கேம் ஓவர்’ படங்களில் அதிகமாக பயங்காட்டிய இயக்குநர் அஸ்வின்சரவணன், இதிலும் அந்தப் பயத்தையே தர முயன்றிருக்கிறார். அவரின்முந்தைய படங்களின் கதையில் இருந்த அழுத்தமும் பார்வையாளர்களை ஈர்க்கும் திரைக்கதையும் இதில் கொஞ்சம் ‘மிஸ்சிங்’.
மகளுக்குப் பிடித்திருக்கும் பேயை விரட்டுவதுதான் கதை என்பதாலும் அதற்கான காட்சிகள், பல ஹாரர் படங்களில் பார்த்தது என்பதாலும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆரம்பத்தில் சுவாரஸ்யமாகச் செல்லும் கதை, பேய் விஷயத்துக்குள் வந்ததும் சுருண்டுவிடுகிறது. ஆனால், கடைசி 20 நிமிடக் காட்சிகள், படமாக்கப்பட்ட விதத்தில் படபடப்பையும் பீதியையும் தந்துபோகிறது.
அதற்கு, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவும் அவர்பயன்படுத்திய லைட்டிங்கும் ரிச்சர்ட்கெவினின் படத்தொகுப்பும் பிரித்விசந்திரசேகரின் பின்னணி இசையும், சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரனின் ஒலி வடிவமைப்பும் அழகாக உதவி இருக்கின்றன. என்றாலும் அது மட்டும் போதாதே!
மகளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதைப் புரிந்து தவிக்கும்போதும், அவளை மீட்கப் போராடும் ஒரு தாயின் மனநிலையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார், நயன்தாரா. அவர் மகளாக நடித்திருக்கும் ஹனீயா நஃபீஸ், தெய்வத்தை நம்பும் தந்தை சத்யராஜ், கொடுமையான பேயை விரட்டும் மும்பை பாதிரியார் அனுபம் கெர், நயன்தாராவின் கணவராக வரும் வினய் உட்பட அனைவரும் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.
‘ஆன்லைன் மூலம் பேயோட்டுதல்’ என்ற புதுமையில், இன்னும் வலுவான கதையை அமைத்திருந்தால் பார்வையாளர்களுடன் ஆழமாக ‘கனெக்ட்’ ஆகியிருக்கும் இந்த ‘கனெக்ட்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment