Published : 16 Dec 2022 08:16 PM
Last Updated : 16 Dec 2022 08:16 PM
The Fam (La mif)| Dir: Fred Baillif | Switzerland | 2021 | 112' | CFS - santham 6.00 PM: டீனேஜ் பெண்கள் சிலரை சமூக சேவையாளர்களுடன் கூடிய குடியிருப்பு பராமரிப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு குடும்பமாக பாவிக்கப்பட வேண்டும் என்பது காப்பக நிர்வாகத்தின் கட்டளை. குழந்தைகளைப் பொறுத்தவரை அவரவர் போக்கில் உரிய சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்பதை ஏனோ அவர்கள் மறந்துவிட்டனர்.
இந்த சிறார் அமைப்பின் பிற்போக்குத்தனமான ஒழுக்கவிதிகள் குடும்பம் போன்ற ஒருவித நட்புக்கு வழிவகுக்காமல் பகைமைக்கே வழிவகுக்கிறது. ஒழுக்கக்கேடான பாதைகளுக்கும் வித்திடுகிறது. ஒரு சம்பவம் அதிகப்படியான எதிர்வினைகளின் சங்கிலியைத் தூண்டிவிட எதிர்பாராத பதட்டங்களையும் நெருக்கங்களையும் உருவாக்குகிறது. இதனால் பாடம் கற்றுக்கொள்வது குழந்தைகள் அல்ல... பிற்போக்குத்தனமான சில சமூக சேவையாளர்கள்தான் என்பதை தி பேம் திரைப்படம் நன்கு எடுத்துக்காட்டுகிறது.
இப்படத்தை மிகுந்த பொறுப்புணர்வோடு இயக்கியுள்ள இயக்குநர் ஃப்ரெட் பெய்லிஃப் 2000 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் உள்ள சமூக ஆய்வுகள் நிறுவனத்தில் பட்டம் பெற்று சுவிட்சர்லாந்தில் சுயமாகசெயல்பட்டு வருபவர். அவர் 2002 ஆம் ஆண்டு முதல் ஆவணப்படத்தில் நிபுணத்துவம் பெற்றார். அதன்பின்னர் 2015லிருந்து புனைகதையிலான திரையாக்கங்களை வெளியிடத் தொடங்க அது பரவலான கவனத்தையும் பெற்றது.
Before Now and Then (Nana) | Dir: Kamila Andini | Indoneisa | 2022 | 103' |WC - Santham 3.00 pm: இந்தோனேசியாவில் 60களில் நடைபெற்ற கம்னியூசப் போராட்டங்களுக்கு எதிராக அன்றைய சுகுரோவின் ராணுவம் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த வரலாற்றை இத்திரைப்படம் பேசகிறது. அத்தகைய ஒரு கலவரத்தில்தான் தனது கணவனை நானா பிரிந்துவிடுகிறாள். கலவரம், வன்முறைகளுக்கு இடையில் பாதுகாப்பான ஒரு இடத்தைத் தேடுகிறாள்.
மேற்கு ஜாவா தீவு கூட்டத்தைச் சேர்ந்த சுண்டான் இனத்தின் பணக்காரனுக்கு 2வது மனைவியாக நானாவுக்குவாழும் நிலை ஏற்படுகிறது. ஆடம்பரமும் வசதி வாய்ப்புகளும் மிக்க அந்த வீட்டில் அவளுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கிறது. ஆரம்பத்தில் பிடித்திருந்தாலும் அந்த பணக்காரனின் ஆணாதிக்கப் போக்கும் வீட்டின் மாறுபட்ட சூழல்களும் அவளுக்கு பிடிக்கவில்லை. இந்த புதிய சூழல் அவளுக்கு என்றோ வாழ்ந்த மீண்டும் கிடைக்காத அற்புதமான நாட்களை பழைய அழகிய நினைவுகளை மீட்டுத் தந்துகொண்டேயிருக்கிறது.
அந்த நினைவுகள் மீண்டும் உள்நாட்டுப் போர் உருவான இன்றைய நிகழ்காலத்தில் ஒரு சர்ரியலிச காட்சிகளாக பிரதிபலித்துக் கொண்டே இருக்கின்றன. தற்போது வாழும் வீட்டில் நிலையை புரிந்து இன்றைய கணவனின் முதல் மனைவியுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்கிறாள்......அது அவளுக்கு ஆசுவாசமாக இருக்கிறது. இந்நிலையில்தான் பல உண்மைகள் அவளுக்கு தெரியவருகிறது... இப்படத்தின் இயக்குநர் கமிலா ஆண்டினி, தனது முதல்படமான 'தி மிர்ரர் நெவர் லைஸ்' படத்திற்காக உலகம் முழுவதும் சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அள்ளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கக்கங்களுக்காக மட்டுமே அதிகம் செய்திகளில் இடம் பிடிக்கும் இந்தோனேசியா எவ்வளவு பேரழகு மிக்க நிலப்பரப்புகளை கொண்டுள்ளது என்பதை இயக்குநர் கமிலா ஆண்டினி நமக்கு இப்படத்தின்மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
Broker (Beurokeo) | Dir: Hirokazu Koreeda | South Korea | 2022 | 129' | WC - Anna Cinema 12.45 PM: வாழ்வின் நெருக்கடிகளை தேர்ந்த திரைக்கதையில் தருபவர் ஹிராகாசு கொரீடா. இவரது ஷாப்லிப்டர்ஸ் திரைப்படம் ஏற்கெனவே திரைப்பட விழாக்களை ஒரு கலக்கு கலக்கியது. கிட்டத்தட்ட அவ்வகையான புரோக்கர் படமும் எளிய மனிதர்களின் பணத் தேவைகளை முன்னிட்டு ஏற்படும் சின்னச் சின்ன தவறுகளில் ஈடுபட்டு சிக்கும் சூழ்நிலைகளை ஆழமாகப் பேசுகிற படம்தான்.
தேவாலயத்தில் தன்னார்வலர்காக பணிபுரியும் இருவருக்கு அன்றாட வாழ்க்கையின் செலவுகளை சமாளிக்க பணம் தேவைப்படுகிறது. இதற்காக அவர்கள் எதையாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். நம் ஊரில் தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் போன்ற அந்த ஒன்று தேவாலத்தில் நிறுவப்பட்டுள்ளது. அங்கு கிடைக்கும் ஆதரவற்ற குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அவர்கள் விற்க முயற்சிகளை செய்கிறார்கள். தேவாலய கண்காணிப்பு கேமராவை நீக்கிவிட்டு குழந்தையை எடுக்கிறார்கள். அதற்கான ஒரு தம்பதியையும் சந்திக்கிறார்கள். ஆனால் அவர்களை இரு துப்பறியும் நபர்கள் பின்தொடர்கிறார்கள். புரோக்கர் திரைப்படம் மனிதநேயத்தின் மகத்தான தருணங்களை படம்பிடித்துள்ளது. இந்தத் திரைப்படம் 2022 கேன்ஸ் திரைப்பட விழாவில் பால்ம் டி'ஓருக்குப் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
Tchaikovsky's Wife (Zhena Chikovskogo) Dir: Kirill Serebrennikov Russia, France, Switzerland /2022/ 143'| WC - Anna Cinema 3.30 pm
ரஷ்யாவின் நவீன பியானோ இசைக் கோர்வையை உருவாக்கியதில் பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி முக்கிய பங்கு உண்டு. எத்தகைய கவலையில் இருந்தாலும் அதை மறக்கடிக்ககூடிய அற்புத சிம்பனியை அவர் உருவாக்கித் தந்திருக்கிறார். அதில் மனதை பறிகொடுத்த அன்டோனினா மிலியுகோவா என்ற பெண்ணின் வாழ்க்கையை இத்திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது. சுயசரிதைக் கதை என்றால் அப்படியே ஏ டூ இசட் எடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதற்கு ரஷ்ய திரைப்படங்கள் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக இருக்கின்றன. முக்கியமான ஆளுமைகளின் சில நாட்களை எடுத்துக்கொண்டால்கூட போதுமானது. உலகின் மிகச் சிறந்த பியானோ இசை மேதைகளில் ஒருவராகத் திகழும் பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கியின் இசை அற்புதமானது. ஆனால் அவரது இதயம்... அன்பு உறவுகளை அரவணைக்கிற குணம் நிச்சயம் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்கிறது இத்திரைப்படம்.
ஆண்டு 1872, அன்டோனினா என்ற மாணவி பியோத்தர் சாய்கோவ்ஸ்கியின் இசையின் அபிமான ரசிகை. அவரை சந்திக்கவும் ஆசைப்படுகிறார், ஒரு விருந்தில் அவர் வெளியேறுவதற்கு முன்பு அவருக்காக காத்திருந்து சிறிய தருணத்தில் பழகும் வாய்ப்பைப் பெறுகிறார். அடுத்து வருவது, அன்டோனினா தனது தீவிரமான ரசிப்புத்தன்மையை ஆர்வத்தை வெளிப்படுத்த உரிய தருணங்களை உருவாக்கிறாள். அவரது ஈர்ப்பைக் கவர தனிப்பட்ட, அன்பான கடிதங்களை எழுதி அனுப்புகிறாள். அவர்கள் இருவருக்கும் இடையேயான சந்திப்பில், அன்டோனினா சாய்கோவ்ஸ்கியின் மீதான தனது காதலை ஒப்புக்கொண்டாள், மேலும் அவர் அவளை தனது மனைவியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முன்மொழிகிறாள்... அதன்பிறகு அவ்வாறே நடக்கிறது.
கலைஞர்களின் மனநிலையை நிச்சயம் யாராலும் புரிந்துகொள்ளமுடியாது. அன்டோனியாவினாலும் புரிந்துகொள்ளமுடியவில்லை. இசைக்கலைஞர் இறக்கும்வரையிலும் கூட அவரது காதலை அவள் பெறமுடியவில்லை. அதற்குக் காரணம் அவருக்கு பெண்கள் மீது நாட்டமில்லை.. மாறாக நேர்மாறான நாட்டமே அவருக்கு உண்டு என்ற மானுடவியல் சார்ந்த ஓர் உண்மையையும் இப்படம் பேசத் தவறவில்லை. இப்படத்தில் அன்டோனினாயாக நடித்த அலியோனா மிகைலோவா நடிப்பு மிகவும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. என்றாலும் 2021 கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவுக்கான வல்கன் விருதை இப்படம் வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT