Last Updated : 06 Dec, 2022 07:29 PM

 

Published : 06 Dec 2022 07:29 PM
Last Updated : 06 Dec 2022 07:29 PM

பழைய பன்னீர்செல்வமா வரணும்... - விஜய் சேதுபதியின் ‘கம்பேக்’குக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

நடிகர் விஜய் சேதுபதியின் சமீபத்திய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெரிய அளவில் பூர்த்தி செய்யவில்லை என்பதற்கு அண்மையில் வந்த ‘டிஎஸ்பி’ படம் உதாரணம். இடையில் சில படங்கள் வரவேற்பை பெற்றாலும் ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகான அவரது பட வரிசை குறித்து பார்ப்போம்.

2018-ம் ஆண்டிலிருந்து எடுத்துக்கொண்டால், ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’, ‘ஜூங்கா’, ‘செக்கச்சிவந்த வானம்’ படங்களின் தோல்விகளுக்கிடையே அவருக்கு கைக்கொடுத்தது ‘96’, ‘பேட்ட’, ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்கள். இதில் ‘96’ படத்தைத் தவிர்த்து, மீதி இரண்டு படங்களும் அவர் நாயகனாக நடிக்காதவை. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு பிறகான படங்களை எடுத்துக்கொண்டால், ‘சிந்துபாத்’, ‘சங்கத்தமிழன்’ ‘மார்கோனி மத்தாய்’ (மலையாளம்) படங்கள் வரவேற்பை பெறாத நிலையில், ‘கா.பெ.ரணசிங்கம்’ ஆறுதலைப்பெற்றது.

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகான விஜய் சேதுபதியின் பட வரிசைகளை எடுத்துக்கொள்வோம். அதன்படி 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் விஜய் சேதுபதிக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ‘பவானி’ என்ற பவர்ஃபுல் கேரக்டரை விஜய் சேதுபதிக்கு பரிசளித்து ஆண்டை தொடங்கிவைத்தது. அதன்பிறகு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘லாபம்’ படம் வெளியாகி தோல்வியடைந்தது. அதே ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி அவரது நடிப்பில் வெளியான ‘துக்ளக் தர்பார்’ படமும் தோல்வியடைந்தது.

அந்தக் காலக்கட்டத்தில் விஜய் சேதுபதியின் படங்களின் ரிலீஸ் அப்டேட் நாளுக்கொரு செய்தியாய் வெளியானது. அத்தனை படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அப்படி செப்டம்பர் 10 ‘துக்ளக் தர்பார்’ என்றால், அடுத்த வாரம் அதாவது செப்டம்பர் 17 அன்று ‘அனபேல் சேதுபதி’ வெளியானது. ஆனால் வரவேற்பை பெறவில்லை. இதனிடையே அவர், ‘உப்பென்னா’ தெலுங்கு படத்தில் வில்லனாகவும், ‘கடைசீல பிரியாணி’ படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்.

அடுத்து 2022-ம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ மீண்டும் விஜய் சேதுபதிக்கு இந்தாண்டிற்கான நல்ல தொடக்கத்தை கொடுத்தது .அதன் பிறகான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் பெரிய அளவில் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெறவில்லை. எதிர்மறை கதாபாத்திரத்தில் ‘விக்ரம்’ படத்தில் மிரட்டியிருந்தார். தொடர்ந்து ‘மாமனிதன்’, தற்போது வெளியான ‘டிஎஸ்பி’ படங்கள் அவரது ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் ஏமாற்றம் அளித்து வருகிறது.

‘விக்ரம் வேதா’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என எதிர்மறை கதாபாத்திரங்களில் ஜொலிக்கும் அளவிற்கு நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பது மேற்கண்ட படங்கள் உணர்த்துகின்றன. அவரது ரசிகர்களில் சிலர் கதாபாத்திரமாக கச்சிதம் காட்டும் விஜய் சேதுபதி, நாயகனாக நடிக்கும் படங்களில் தேர்ந்த கதைகளில் நடித்து ‘கம்பேக்’ கொடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், வில்லன் மற்றும் கதாபாத்திரமாக விஜய் சேதுபதி நடிக்கும் படங்களுக்கே வசூலும், கூட்டமும் கூடுவதாக தெரிவிக்கின்றனர். எப்படியிருந்தாலும் அவர் வில்லனாக நடிக்கும் ‘ஜவான்’ படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x