Published : 01 Dec 2022 06:31 PM
Last Updated : 01 Dec 2022 06:31 PM
வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்க்கும் சிலருக்கு பரிசளித்தால் நீங்களும் ‘கோல்டு’ தான் என்கிறது படத்தின் ஒன்லைன்.
ஜோஷி (பிரித்விராஜ்) புதிய கார் ஒன்றை ஆர்டர் செய்து அதன் வருகைக்காக காத்திருக்கிறார். ஆனால், அந்த கார் டெலிவரிக்கு முன்னரே யாரோ ஒருவர் அவர் வீட்டு வாசலில் பொலேரோ வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுவிடுகின்றனர். என்ன செய்வதென்றே தெரியாமல் திகைக்கும் அவர், காவல் நிலையத்திற்கு சென்று புகாரளிக்கிறார். இதனிடையே, அந்த பொலேரோவுக்குள் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் இருப்பதை கண்டறியும் ஜோஷி, அதிலிருக்கும் ஸ்பீக்கர் ஒன்றை எடுத்து பயன்படுத்துகிறார். அப்போது எதிர்பாராத சம்பவம் நிகழ, ஜோஷி அதை எப்படி கையாள்கிறார்? அந்த வண்டியை அங்கே நிறுத்தியது யார்? - இப்படி பல கேள்விகளுக்கு அல்போன்ஸ் புத்திரன் தன் ஸ்டைலில் பதில் சொன்னால் அதுதான் ‘கோல்டு’.
‘பிரேமம்’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளம் - தமிழ் இருமொழிகளில் வெளியாகியுள்ள படம் ‘கோல்டு’. தனக்கென ஒரு தனித்துவ பாணியை தன் படங்களில் பிரதிபலிக்கும் அவர், இந்தப் படத்தில் அதை செயல்படுத்த தவறவில்லை. வழக்கமான திரைமொழியிலிருந்து விலகும் படம் வித்தியாசமான படத்தொகுப்பின் மூலம் ஈர்க்கிறது. ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்குமான காட்சி மாற்றத்தை தனக்கேயுண்டான ‘கட்ஸ்’ மூலம் கவனிக்க வைக்கிறார்.
மரக்கிளையில் சத்தமின்றி ஊடுருவும் புழுவைப்போல திரைக்கதையில் திணிப்பின்றி இழையோடும் ப்ளாக் காமெடி வகையறா நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. நகைச்சுவைக் காட்சிகளில் தன்னை தகவமைத்துக்கொள்ளும் கலைஞனாக கச்சிதமாக பொருந்துகிறார் பிரித்விராஜ். பதற்றம், பயத்துடன் கூடிய உடல்மொழியை சுமந்து, இடையிடையே நகைச்சுவை, ஒரு சில ஆக்ஷன் சீக்வன்ஸ் என அவரின் தேர்ந்த நடிப்பில் காட்சிகள் உயிர்பெறுகின்றன. சுமங்கலி உன்னிகிருஷ்ணனாக நடித்திருக்கும் நயன்தாரா பெரிய அளவில் முக்கியத்துவமில்லாத கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்கிறார்.
பிரித்விராஜின் உண்மையான அம்மாவாக நடித்திருக்கும் மல்லிகா சுகுமாறனின் கதாபாத்திர பொருத்தம் கச்சிதம். எப்போதும் தேநீர் கோப்பையுடனும், சமையலறையே கதியாக இருக்கும் கிடக்கும் அவரது கதாபாத்திரம் இந்திய அம்மாக்களின் பிரதிபலிப்பு. அஜ்மல், கிருஷ்ண ஷங்கர்,சபரீஷ் வர்மா, வினய் போர்ட், செம்பன் வினோத், ரோஷன் மேத்யூ, லாலு அலேக்ஸ், ஜாஃபர் இடுக்கி என படப்பிடிப்பை பார்க்க வந்த அனைவருக்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைத்திருப்பது போல மலையாள நடிகர் உலகமே படத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.
ராஜேஷ் முருகேஷன் பின்னணி இசையை தனது படத்தொகுப்புக்கு ஏற்றார்போல காட்சிகளுக்கிடையே தூவி மெருக்கேற்றியிருக்கிறார் அல்போன்ஸ். எறும்பைக்கூட பின்தொடர்ந்து கேமராவுக்குள் நுழைத்திருப்பது, சூரியனுக்கு வழிவிட்டு நகரும் மேகங்களையும், கேரள மண்ணின் சாயலையும் அதன் உயிர்ப்பு மாறாமல் பதியவைத்திருக்கும் ஆனந்த் சி.சந்திரன், விஸ்வஜித் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை மேன்மேலும் கூட்டுயிருக்கிறது.
இப்படியாக ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, விஎஃப்எக்ஸ், பின்னணி இசை என எல்லாவற்றையும் 7 ஆண்டுகளாக செதுக்கிய இயக்குநர் இறுதியில் கதையில் கவனம் செலுத்தவில்லை என்ற உணர்வை மொத்த படமும் உறுதிசெய்கிறது.
பொதுவாக மலையாள படங்கள் பயணச்சீட்டுக்கு பின்புறம் எழுதும் அளவிலான கதையை வைத்துக்கொண்டு, அதை திரைக்கதையில் மிரட்டி அழுத்தும் கூட்டுவது வழக்கம். அப்படி தொடங்கும் இப்படத்தின் திரைக்கதையும் ஓரிடத்தில் அழுத்ததை கூட்டும் என எதிர்பார்த்தபோது, ‘தேமே’ வென வெறும் நகைச்சுவைகளால் நகர்வது ஒருகட்டத்திற்கு மேல் அயற்சி. பார்வையாளர்களை கதைக்குள் இழுப்பதற்கான அழுகை, கோபம், விறுவிறுப்பு, பதற்றம், பயம் என்ற எந்த உணர்ச்சியும் திரைக்கதையில் இல்லாதது அதன் தொடர் ஓட்டத்தை பாதிக்கிறது.
மையக்கதை எனும் அச்சாணி பலவீனமாக காட்சியளிப்பதால் அதன் திரைக்கதை எனும் சக்கரம் பாதை தெரியாமல் தடுமாறியிருக்கிறது. அத்துடன் படத்தின் நீளமும் இணைய இறுதியில் கேமரா, எடிட்டிங்காலும் ஈடுக்கட்ட முடியவில்லை. படம் முடிந்த பின்பும் நிறைய கேள்விகளும் முழுமையற்ற உணர்வும் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. அதேபோல அடர்த்தியில்லாத கதையில் தேவைக்கதிகமான கதாபாத்திரங்கள் திகட்டல்.
மொத்தத்தில் எந்தவித கதையையும், அதையொட்டி நீளும் உணர்ச்சித் தாக்கங்களையும் எதிர்பார்க்காமல், தொழில்நுட்ப ரீதியான ரசனையை மட்டும் நம்பி செல்பவர்களுக்கு இந்த ‘கோல்டு’ 24 கேரட் தான். அழுத்தமான, அடர்த்தியான கதையையும், திரைக்கதையையும் எதிர்பார்த்துச் சென்றால் கோல்டு ஜொலிக்க வாய்ப்பு குறைவு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT