Published : 01 Dec 2022 04:38 PM
Last Updated : 01 Dec 2022 04:38 PM

‘அன்பே சிவம்’ தயாரிப்பாளர் கே.முரளிதரன் மாரடைப்பால் காலமானார்

‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ கே.முரளிதரன் | கோப்புப் படம்

சி.எஸ். ஆறுமுகம்

‘அன்பே சிவம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரான கே.முரளிதரன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 65.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா ஆகியோரை வைத்து பல படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன். இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரரான இவர், வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார்.

குறிப்பாக, ‘அன்பே சிவம்’, ‘வீரம் வெளஞ்ச மண்ணு’, ‘மிஸ்டர்.மெட்ராஸ்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘அரண்மனை காவலன்’, ‘வேலுச்சாமி’, ‘ப்ரியமுடன்’, ‘பகவதி’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘உன்னை நினைத்து’ உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். பல படங்களை விநியோகமும் செய்திருக்கும் இவர் இறுதியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் ‘சகலகலா வல்லவன்’ படத்தை தயாரித்திருந்தார்.

அண்மைக்காலமாக படங்களை தயாரிக்காமல் ஒதுங்கியிருந்தார் முரளிதரன். இந்நிலையில், 30-ம் தேதி காலை, முரளிதரன், மனைவி ருத்ரா மற்றும் கும்பகோணத்தைச்சேர்ந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் ஸ்வீட் ரவி ஆகியோர், திருநள்ளார், பட்டீஸ்வரம், நாதன்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு சென்று விட்டு, அன்றிரவு அறையில் தங்கினார். தொடர்ந்து இன்று காலை, ஆலங்குடி குருபகவான் கோயிலுக்குச் சென்று விட்டு, நாச்சியார்கோயிலுக்கு 3 பேரும் வந்தனர். கோயில் மூலவர் அருகிலுள்ள கல்கருடன் பகவானைத் தரிசனம் செய்ய முயன்ற போது, திடீரென மயங்கி அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்தார் முரளிதரன். இதனையறிந்த அவருடைய மனைவி ருத்ரா, மக்கள் தொடர்பாளர் ஸ்வீட் ரவி மற்றும் அங்கிருந்தவர்கள், அவரை, கோயில் அருகிலுள்ள மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.

ஆனால், நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, அவரது உடலை, சென்னையிலுள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து திரைப்பட மக்கள் தொடர்பாளர் ஸ்வீட் ரவி கூறுகையில், ”முரளிதரன் கோயில்களுக்கு செல்வதற்காக அடிக்கடி கும்பகோணம் வருவதுண்டு. இன்று நாச்சியார்கோயிலில் உள்ள அவரது குலதெய்வ கோயிலான நாச்சியார்கோயில் தரிசனத்திற்கு சென்றபோது படியில் உட்கார்ந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு கோகுல், ஸ்ரீவத்சன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் இயக்குநர் சுந்தர்சியிடம், கோகுல் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார். இவரை திரைப்பட தயாரிப்பாளராக்கி அடுத்த படம் எடுக்க வேண்டுமென இவர், திட்டமிட்டிருந்தார். மற்றொரு மகன் ஸ்ரீவத்சன் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு எம்.எஸ் படிக்கிறார்” எனத்தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x