Published : 27 Nov 2022 02:05 PM
Last Updated : 27 Nov 2022 02:05 PM

இலங்கை அகதி மாணவர்கள் 153 பேரை படிக்க வைத்துள்ளேன் - நடிகர் கருணாஸ்

தனது சொந்தப்பணத்தில் 153 இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்துள்ளதாக நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கருணாஸ், “நான்கு நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்த சமயத்தில்தான் இயக்குநர் கிட்டு என்னை அழைத்து, மாவீரர் பிறந்தநாளில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தினால் நன்றாக இருக்கும் என கேட்டுக்கொண்டார். அப்படி குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த விழா. இந்த படத்தில் எனது மகனின் நண்பர் ஈஸ்வரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன். என் மகனும் அவருடன் இணைந்து இசையமைத்துள்ளனர் என்றாலும் அவர் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன்.

இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை கூற கடமைப்பட்டுள்ளேன். இங்கே தமிழகத்தில் விஸ்காம் படித்த மாணவர்களுக்கு படிப்பை முடித்தபின் நல்ல தளம் கிடைப்பதில்லை. வருடத்திற்கு 2500 மாணவர்கள் படித்துவிட்டு வெளிவருகின்றனர். இவர்களுக்கு உதவிசெய்ய வேண்டிய சினிமாவில் உள்ள தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் பஜ்ஜி, வடை சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

1985லிருந்து ஈழத்தமிழர்களுக்காக என்னால் இயன்றவரை ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது சொந்தப்பணத்தில் 153 இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்தேன் என்பதை பெருமையாக சொல்கிறேன். இன்று அவர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் கூட பணிபுரிந்து வருகிறார்கள். இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கி பின்னால் வரும் கென், ஈஸ்வர் போன்ற இளைஞர்களிடம் கொடுத்து விடுகிறேன். அவர்கள் அதை பார்த்துக்கொள்ளட்டும். இதுதான் என்னுடைய விஷன். இதற்கு எவ்வளவு செலவானாலும் பத்து பேரிடம் பிச்சை எடுத்தாவது அந்த பணத்தை கொடுப்பேன்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x