Published : 20 Nov 2022 11:00 PM
Last Updated : 20 Nov 2022 11:00 PM
சென்னை: தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார். அவருக்கு வயது 91. இந்நிலையில், அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் முதுமை காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது சொந்த ஊரான திருவாரூருடன் இயற்பெயரான ஏசுதாஸின் பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் எனப் பெயர் வைத்துக் கொண்டு தான் பிறந்த மண்ணைப் பெருமைப்படுத்தியவர் ஆரூர்தாஸ் அவர்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரது பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய இவர், பாமரமக்கள் மனதிலும் “பாசமலர்” திரைப்பட வசனங்கள் மூலம் நீங்கா இடம் பெற்றிருப்பவர். அவரது கலைச்சேவையைப் பாராட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை இந்த ஆண்டு ஜூன் 3-ஆம் நாள் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் ஆரூர்தாஸ் அவர்களின் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன்.
தன் வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும், படங்களை பார்த்து ரசித்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும்.
கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT