Published : 16 Nov 2022 03:03 PM
Last Updated : 16 Nov 2022 03:03 PM
“எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித் திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது” என ‘நான் மிருகமாய் மாற’ படம் குறித்து சசிகுமார் தெரிவித்துள்ளார்.
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நான் மிருகமாய் மாற' திரைப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், “இயக்குநர் சத்திய சிவாவின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையை கையாள எண்ணினார்.
அதாவது இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களை வைத்து மட்டுமே இசையை உருவாக்க வேண்டும் என நிர்பந்தம் வைத்தார். இதனைப் புரிந்து கொள்ள தொடக்கத்தில் சிரமம் இருந்தாலும், பின்னர் அவர் கூறிய வண்ணமே இசை அமைத்துக் கொடுத்தேன்” என்றார்.
நடிகர் சசிகுமார் பேசுகையில், “காமன் மேன்’ என்று இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்தத் தலைப்பு மாற்றப்பட்டு ‘நான் மிருகமாய் மாற’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும். எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித் திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.
இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப் பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம். படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT