Published : 05 Nov 2022 10:24 PM
Last Updated : 05 Nov 2022 10:24 PM

''நான் ஒரு கன்னடர், ஆனால் நானும் ஒரு இந்தியன்'' - நடிகர் யாஷ்

‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர், கன்னட நடிகர் யாஷ். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்குப் பல வாய்ப்புகள் வந்துள்ளன. எனினும், தனது அடுத்தப் படத்தை அறிவிப்பதில் இன்னும் தாமதம் காட்டிவருகிறார்.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் யாஷிடம், நீங்கள் பான்-இந்தியன் ஸ்டாராக மாறியுள்ள கன்னட நடிகரா இல்லை கன்னட சினிமாவில் நடிக்கும் பான்-இந்தியன் ஸ்டாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த யாஷ், "நான் ஒரு கன்னடர், அதை மாற்ற முடியாது. ஆனால் நானும் ஒரு இந்தியன். நம் நாட்டில் நாம் இந்தியர்கள். எனவே, கலாச்சாரத்தில் நாம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறோம். கர்நாடகாவில் பொதுவாக துளு கலாச்சாரம் உள்ளது. ஆனால், வட கர்நாடகத்தில் அது வேறாக இருக்கும். இதுபோன்றவையே நமது பலம். இது ஒருபோதும் நமது பலவீனமாக மாறிவிடக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை சினிமா ஒரு தொழில். அதை வடக்கு, தெற்கு என பிரிக்கக்கூடாது. இதுபோன்ற பேச்சுக்களில் இருந்து மக்கள் கடந்துவந்துவிட்டனர். அவர்கள் யாரும் இப்போது பாலிவுட் ஸ்டார், மற்ற மொழிகளின் ஸ்டார் எனப் பார்ப்பதில்லை" என்று பேசியுள்ளார்.

முன்னதாக, ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் அடுத்த பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வந்த அழைப்பை யாஷ் நிராகரித்தார். தயாரிப்பாளர் கரண் ஜோஹர் 2 முறை சந்தித்துப் பேசியும், யாஷ் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x