Last Updated : 05 Nov, 2022 04:09 PM

 

Published : 05 Nov 2022 04:09 PM
Last Updated : 05 Nov 2022 04:09 PM

காஃபி வித் காதல் Review: ஆம்... ‘நாங்க தியாகி பாய்ஸ்’!

ஒவ்வொருவரின் விருப்பங்களிலும் விளையாடும் விதி, இறுதியில் சர்ப்ரைஸ்களை சேர்த்தே கொடுத்தால் அது 'காஃபி வித் காதல்'. ஜீவா, ஜெய், ஸ்ரீ காந்த், திவ்யதர்ஷினி (டிடி) ஆகியோர் சகோதர, சகோதரிகள். இதில் ஜீவாவிற்கு காதல் தோல்வி ஏற்பட, அவர் வாழ்க்கையில் மற்றொரு காதல் துளிர்விடுகிறது. அதேபோல ஜெய்யும் தான் அறிந்திடாமல் கைவிட்ட காதலை நோக்கி திரும்பி ஓடுகிறார். ஸ்ரீகாந்த்திற்கு திருமணம் நடந்தும் சில போதாமைகளால் வேறொரு உறவை நாடுகிறார். இந்த மூன்று பேர் வாழ்க்கையிலும் விதி புகுந்து ஃபுட்பால் விளையாட, இறுதியில் அவரவர் எண்ணங்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேறியதா இல்லையா, இறுதியில் என்னதான் நடந்தது என்பதுதான் 'காஃபி வித் காதல்' படத்தின் திரைக்கதை.

சூடான காஃபி ஒன்றை தொடக்கத்தில் ஆவி பறக்க டேபிளுக்கு அருகில் கொண்டு வந்து வைத்து போல படத்தின் தொடக்கம் கதாபாத்திரங்களின் அறிமுகங்களாக திரையில் விரிந்தது. ஒரு நல்ல திரை விருந்துக்கு பார்வையாளர்கள் தயாராகிக்கொண்டிருக்கும்போது, திரைக்கதையில் தொய்வு தொடங்கியது. அதன் நீட்சி இடைவேளைக்கு முன்பு வரை நீடித்தது. இடையிடையே திணிக்கப்பட்ட பாடல்கள் கூடுதல் அயற்சி.

இடைவேளைக்கு முன்பு வரும் யோகிபாபு - ரெடின் கிங்ஸ்லி காம்போ காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஆசுவாசத்தை கொடுத்து இரண்டாம் பாதிக்கு தயார்படுத்தியது. அந்த காட்சிகள்தான் உண்மையில் சுந்தர்.சி படத்தை ஸ்டைலை நியாபகப்படுத்தின. இடையிடையே வரும், 'பொம்மை கையில இருக்கும்போது குழந்தைக்கு அருமை தெரியாது; அத யாராச்சும் கைப்பற்றிட்டா தான் பொம்மையோட அருமை தெரியும்', ‘வாழ்க்கை எல்லாருக்கும் ரெண்டாவது வாய்ப்பு தரும்’, ‘எப்பவும் ரெண்டாவது ஆப்ஷன் தேர்ந்தெடு; ஏன்னா முதல் ஆப்ஷன் பிடிச்சிருந்தா ரெண்டாவது ஆப்ஷனுக்கு போயிருக்கவே மாட்டியே’ போன்ற வசனங்கள் காட்சிகளுக்கு கணம் சேர்ந்தன.

படத்தில் நிறைய கதாபாத்திரங்களும், அவர்களின் காதலும், சிக்கலான திரைக்கதையும், அதனுடன் சேர்ந்த நீட்சியும் ஒட்டுமொத்தமாக மெகா தொடரை பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது. குறிப்பாக, சில சீரியஸ் காட்சிகள் நகைச்சுவையாக்கப்பட்டிருப்பது, அதன் தன்மையை குலைத்துவிடுவது, காட்சிகளுக்கான உறுதித்தன்மையில் தடுமாற்றம் இருப்பதை உணர முடிகிறது. படத்தில் பெரிய குடும்பம் இருந்தபோதும் சென்டிமென்ட் காட்சிகள் பெயரளவுக்கு கூட ஒட்டவில்லை.

ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த் மூவரும் திரையில் போட்டிப் போட்டுக்கொண்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். அவரவர் கதாபாத்திரத் தன்மைகளுடன் பொருந்தி, அதற்கான நியாயத்தை சேர்க்க தவறவில்லை. அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, திவ்யதர்ஷினி என ஏகப்பட்ட நடிகைகள் கதாபாத்திரங்களில் யாரும் பெரிய அளவில் மனதில் தேங்கவில்லை. யோகிபாபு - ரெடின் கிங்ஸ்லி காம்போவில் மிகச் சில இடங்களில் ரசிக்கவும் சிரிக்கவும் முடிந்தது.

படத்தின் ஆகப் பெரிய பிரச்சினை... எளிதாக கணிக்கக்கூடிய அதன் திரைக்கதை. சுவாரஸ்யமில்லாத, திரும்பங்கள் ஏற்படுத்தாத திரைக்கதை பார்வையாளர்களை எந்த வகையிலும் ஆச்சரிப்படுத்தவில்லை.

ஜெய், அம்ரிதாவிடம் தன் காதலை சொல்ல செல்லும் காட்சியில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் ஈர்க்கும் வகையில் இருந்தது. அதைத்தாண்டி பெரிய அளவில் பாடல்களும், இசையும் கவனம் பெறவில்லை. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் கலர்ஃபுல் காட்சிகள் திரையை அழகாக்கியிருக்கின்றன. ஃபென்னி ஆலிவர் தேவையற்ற காட்சிகளில் மட்டும் சுந்தர்.சியின் பேச்சை மீறி கட் செய்திருக்கலாம்.

மொத்தத்தில் அதிகப்படியான கதாபாத்திரங்களையும், கலர்ஃபுல் காமெடிக்கான ஸ்லாட்டும் கையில் இருந்து தொய்வான, யூகிக்கக்கூடிய திரைக்கதையால் 'காஃபி வித் காதல்' ஆறியிருக்கிறது. படத்தில் 'நாங்க தியாகி பாய்ஸ்' என ஒலிக்கும் பாடல் படம் முடிந்து வருபவர்களுக்கு மட்டும் 'நீங்க தியாகி பாய்ஸ்' என ஒலிப்பதை தவிர்க்க முடியவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x