Published : 29 Oct 2022 05:04 PM
Last Updated : 29 Oct 2022 05:04 PM
தனக்கு ‘மயோசிடிஸ்’ எனப்படும் ஆட்டோ இம்யூன் பாதிப்பு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், 'இதுவும் கடந்து போகும்' என அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகை சமந்தாவின் 'யசோதா' ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் ட்ரீப்ஸ் ஏற்றிக்கொள்ளும் வகையில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “யசோதா ட்ரெய்லருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் அளிக்கும் இந்த அன்பும், ஆதரவும் தான் வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. குணமடைந்த பிறகு இதனைப் பகிரலாம் என நினைத்தேன். ஆனால், இது சரியாக நான் எதிர்பார்த்ததை விட சிறிது காலம் கூடுதலாக எடுக்கிறது. இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன்.
நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனக்கு உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்துள்ளன. என்னால் இன்னும் ஒரு நாளை கூட கையாள முடியாது என்று உணர்ந்தாலும், எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. நான் குணமடையும் நாளை நெருங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும்'' என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT