Published : 27 Oct 2022 03:13 PM
Last Updated : 27 Oct 2022 03:13 PM
ராமர் பாலம் இயற்கையாக உருவானதா அல்லது ராமரால் கட்டப்பட்டதா என்பதை நிரூபிக்கும் போராட்டமே 'ராம் சேது' படத்தின் ஒன்லைன். 2007-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள ராமர் பாலம் பகுதியைத் தோண்டி, கப்பல் செல்வதற்கான கால்வாய் அமைக்க இந்திய அரசு முடிவு செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் இந்திரகாந்திற்கு (நாசர்) சொந்தமான தனியார் நிறுவனத்திற்குக் கொடுக்கப்படுகிறது. ராமர் பாலம் ராமரால் கட்டப்பட்டதல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் குழு ஒன்றை அமைக்கப்படுகிறது. அந்த குழுவில் பிரபல அகழ்வாராய்ச்சியாளரான ஆர்யன் (அக்ஷய் குமார்) இணைக்கப்படுகிறார்.
இறுதியில் ராமர் பாலம் இயற்கையாக உருவானதா அல்லது ராமர் கட்டியதா என்பதை சொல்லும் படமே 'ராம் சேது'. இந்தியில் உருவாகி பான் இந்தியா முறையில் வெளியாகியுள்ள இப்படத்தை அபிஷேக் ஷர்மா இயக்கியுள்ளார். 'ஆர்ஆர்ஆர்' அடுத்தாண்டு வெளியாக உள்ள 'ஆதிபுருஷ்' வரிசையில் ராமர் பதிவின் நீட்சியாக 'ராம் சேது' வெளியாகியுள்ளது.
ஆர்யனாக நடித்துள்ள அக்ஷய் குமார் அகழ்வராய்ச்சியாளர் கதாபாத்திரத்திற்கு பொருந்திப் போகிறார். சீனியர் நடிகராக அவர் நடிப்பில் தேர்ந்தாலும், அவரது கதாபாத்திர வார்ப்பு சீரற்றத் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது. நாத்திகரான அவர், ஆத்திகராக மாறும் தருணங்கள் அழுத்தமாகப் பதிவு செய்யப்படவில்லை. வழக்கமான ஆத்திகர் பார்வையிலிருந்து படத்தை கொண்டு செல்லாமல் கடவுள் மறுப்பாளரைக் கொண்டு கதையை நகர்த்தும்போது மையமே தடுமாற்றத்தை கண்டுள்ளது. ஜாக்லீன் பெர்னான்டஸ் சக ஆராய்ச்சியாளராக வந்து செல்கிறார். அவருக்கும், நுஷ்ரத் பார்ச்சாவுக்கும் கதையில் பெரிய தேவை எதுவும் ஏற்படவில்லை. நாசர், சத்யதேவ் கதாபாத்திரங்கள் கவனிக்க வைக்கின்றன.
படம் தொடங்கியதும் சேது சமுத்திர திட்டம், ராமர் பாலம் குறித்த தகவல்கள் பார்வையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. முதல் அரைமணி நேரம் படத்தின் கருவுக்கான முன்னோட்டம் எங்கேஜிங்காகவே செல்கிறது. அதைத்தொடர்ந்து ராமர் பாலம் தொடர்பான ஆராய்ச்சி தொடங்கியதும் படம் தனது வேகத்தை குறைத்து காட்சிகளுக்கு மாற்றாக வசனங்களே நீள்கின்றன. அதுவும் கடலிலிருந்து அக்ஷய் குமார் நடந்து வரும் ஹீரோயிச காட்சி ஒன்றில் படுமோசமான கிராஃபிக்ஸுடன் செயற்கைத்தனம் தொக்கி நிற்கிறது.
படத்தின் தலைப்பும், ட்ரெய்லரும் ராமர் பாலம் ராமரால்தான் கட்டப்பட்டது என்பதை சொல்லியாகிவிட்டது. அதை எப்படி திரையில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்துவது என்பது தான் சவால் என்ற சூழலில், அதற்கான தர்க்க காட்சிகளும், சுவாரஸ்ய காட்சிகளும் படத்தில் பிரதிபலிக்கவேயில்லை. மாறாக, அடுத்து இதுதான் நடப்போகிறது என்பதை யூகிக்கும் வலுவற்ற திரைக்கதை பார்வையாளர்களுக்கு அயற்சியைத் தூண்டுகிறது.
இரண்டாம் பாதியில் இலங்கையில் பயணிக்கும் அக்ஷய் குமார் & கோ ஓரிரு இடத்தில் திருப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தாலும், ஒட்டுமொத்தமாக ட்ராவல் விலாக்கர்கள் போல சுற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். குறிப்பாக, படத்தில் இந்தக் கதாபாத்திரங்களெல்லாம் ஆதிக்கத்தை விட அறிவியலைத்தான் நம்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்த இயக்குநர் போராடியிருக்கிறார். ஆனாலும் அவரது போராட்டம் சுத்தமாக எடுபடவில்லை. ராமர் பாலம் கட்டியது தொடர்பான ஆதாரங்களை திரட்டும் காட்சிகள் நமக்கு விறுவிறுப்பையோ, ஆர்வத்தையோ தூண்டாமல் தேமேவென கடப்பது பெரும் துயரம். பழங்கால குகைகள், மிதக்கும் கல், ராவணன் வாழ்ந்த இடம் என அடுத்தடுத்து சொல்லி வைத்ததைப்போல அவர்கள் உடனுக்குடனே கண்டுபிடிப்பது திரைக்கதை எழுத்தின் அதீத பலவீனம்.
எல்லாவற்றையும் தாண்டி இறுதி அரைமணி நேரத்துக்கும் மேலான கோர்ட் ட்ராமா காட்சிகள் உண்மையில் சொற்பொழிவை கேட்ட உணர்வைத்தருகிறது. சுத்தமாக சுவாரஸ்யமற்று நகரும் அந்த நீ......ண்ட உரையாடல் படத்தை இன்னும் மோசமாக்குகிறது.
தவிர, தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் அசீம் மிஸ்ராவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை கூட்டுகிறது. ரசிக்கும் காட்சிகள் திரையை அழகாக்கினாலும், அதற்கான தீனி திரைக்கதையில் போதிய அளவில் இல்லாததால் வெறும் ஒரு வீடியோ என்ற ரீதியில் மட்டுமே காட்சிகள் எஞ்சி நிற்கிறன. டேனியல் பி ஜார்ஜின் பிண்ணனி இசை ஒருபுறமும், சீன்ஸ்கள் வேறோருபுறமுமாக பிரிந்து கிடப்பது இசையனுபவத்திற்கு நடுவேயிடப்பட்ட வேலி.
மொத்தத்தில் 'ராம் சேது' பிரசார பாணியை அடிப்படையாக கொண்டு சுவாரஸ்யமற்ற, பலவீனமான திரைக்கதை எழுத்தால் உருவாக்கப்பட்ட அக்ஷய் குமாரின் மற்றொரு படம் அவ்வளவே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT