ரிஷி சுனக், அக்ஷதா மூர்த்தியை ராமர் - சீதையாக ஜோடித்து ரீல்ஸ் வெளியிட்ட பாலிவுட் பாடகி
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், அவரது இந்தப் பதவி பிரிட்டனைவிட இந்தியாவில்தான் அதிகம் கொண்டாடப்படுகிறது; பேசப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், பிரிட்டனின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமர், இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமர் என்றெல்லாம் விதவிதமாக அவரைக் கொண்டாடுகின்றனர்.
ரிஷி சுனக்கின் மூதாதையர் இந்து மதம், காத்ரி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பண்டைய காலம் முதல் காத்ரி சமுதாயத்தினர் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக் இந்து மதத்தின் மீது தீவிர பற்று கொண்டவர். சிறு வயது முதல் அவர் சைவ உணவு வகைகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறார். இதுவரை மது அருந்தியது கிடையாது. வாரம்தோறும் திங்கள்கிழமை ரிஷி சுனக் விரதம் இருக்கிறார். இந்து மதத்தின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி வருகிறார். இவ்வாறாக ரிஷி சுனக் பற்றி பல்வேறு தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியை வித்தியாசமாகக் கொண்டாடியிருக்கிறார் பாலிவுட் பாடகி அலிஷா சின்னை. அவர் தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ரிஷி, அக்ஷதாவை ராமர், சீதா போல ஜோடித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். பின்னணியில் அவர் பாடிய சம்கேகா இந்தியா என்ற பாடல் ஒலிக்கிறது. இந்த வீடியோ 72 ஆயிரம் பார்வைகளையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
