Published : 25 Oct 2022 12:58 AM
Last Updated : 25 Oct 2022 12:58 AM

மனைவி சாக்‌ஷி எழுதிய கதை, தமிழில் படமாக தயாரிக்கும் தோனி- அறிவிப்பு வெளியீடு

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சாக்ஷியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பு துறையில் தனக்கென தனித்துவமான நற்பெயரையும் பெற்றுள்ளது. ' வுமன்'ஸ் டே அவுட் ' என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.

இந்திய அளவில் பிரபலமான நட்சத்திர கிரிக்கெட் வீரராக தோனி திகழ்ந்தாலும், அவருக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான பந்தம் பிரத்யேகமானது. சிறப்பானது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. இந்த படம், தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் நிர்வாக இயக்குநரான சாக்ஷியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல். மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

தமிழில் மட்டுமின்றி அறிவியல் புனைவு கதை, குற்றவியல் நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் பல வகையான அற்புதமான மற்றும் அர்த்தமுள்ள உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்களை உருவாக்கவும் மற்றும் தயாரிப்பதற்காகவும், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், ''சாக்‌ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன். இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன்.” என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x