Published : 23 Oct 2022 08:27 AM
Last Updated : 23 Oct 2022 08:27 AM
விளம்பரப் பிரியராக இருக்கும் காவல்துறை ஆய்வாளர் விஜய் பிரகாஷ்(கார்த்தி), தன்னையும் காவல் துறையையும் அடிக்கடி டிவிட்டர் டிரெண்டிங்கில் வைத்திருப்பவர். உளவுத்துறையின் முக்கிய ஃபைலை திருடியதாக சமூக ஆர்வலர் சமீரா தாமஸை (லைலா) தேடி செல்லும் கார்த்தி, அதைக் கண்டுபிடித்தால், இன்னும் அதிகமாக டிரெண்ட் ஆகலாம் என நினைக்கிறார். அதைப் பின் தொடரும்போதுதான், தண்ணீர் மாஃபியா, தேசத்துரோகி என முத்திரைக் குத்தப்பட்ட தன் தந்தை ‘சர்தார்’ யார் என்பது உள்பட பல விஷயங்கள் அவருக்குத் தெரிய வருகிறது. பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதுதான், படம்.
‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இதில், ஸ்பை த்ரில்லர் பின்னணியில் தண்ணீர் மாஃபியா பற்றி தரமாகச் சொல்லியிருக்கிறார். ‘ஒரே நாடு ஒரே குழாய்’ விஷயங்களும் தண்ணீர் தனியார்மயமானால், என்னென்னப் பிரச்னைகளைச் சந்திக்க நேரும் என்பதையும் ஒரு ‘ஸ்பை’யின் வாழ்க்கையோடு ‘ஹைஃபை’யாகச் சொல்லி‘திடுக்’கிட வைத்திருக்கிறார். அதற்கான அவரின் விரிவான கள ஆய்வு, வசனங்களாகவும் காட்சிகளாகவும் வெளிப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் மற்றும் பொலிவியா நாட்டில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் குறித்த வரலாற்றைப் பார்வை யாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, எச்சரிக்கை செய்திருப்பதைப் பாராட்டினாலும் கதையில் ஏராளமான விஷயங்களைத் திணிக்க முயன்றிருப்பது, உரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்படாதது, இரண்டாம் பாதியின் நீளம், தொக்கி நிற்கும் தர்க்கப் பிழைகள் ஆகியவற்றால்,‘சர்தார்’ தன் நோக்கத்தில் இருந்து தடுமாறி நிற்கிறது.
ஜாலியான இன்ஸ்பெக்டர், சீரியஸான உளவாளி என 2 வேடங்களிலும் வித்தியாசம் காட்டி பிரம்மாதப்படுத்தி இருக்கிறார், கார்த்தி. ராஷி கன்னாவை விரட்டி விரட்டி காதலிப்பது, தேசத் துரோகியின் மகன் என்பதைக் கேட்டு அவமானப்படுவது என விஜய்பிரகாஷ் ஒரு பக்கம் நடிப்பில் இயல்பு காட்டினாலும் ‘சர்தார்’ பாத்திரத்தின் நடிப்பிலும் உடல் மொழியிலும் இதுவரை பார்க்காத கார்த்தி, பளிச்சென்று தெரிகிறார். அவருக்காக திலீப் சுப்பராயன் அமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் ஜில்லிட வைக்கின்றன. ஆனால், எவ்வளவுதான் பயிற்சிப் பெற்றாலும் கைகள் நடுங்கும் ஒருவர், இவ்வளவு வலிமையாக ஆக்ஷனில் ஈடுபட முடியுமா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து, தண்ணீர் மாஃபியாவாக மாறும் பேராசைக் கொண்ட ரத்தோர் கேரக்டரில் கச்சிதமாகப் பொருந்துகிறார், சங்கி பாண்டே.அவர் நடிப்பும் தோற்றமும் அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறது. ஆனால் அவர்வசனங்களுக்கும் உதட்டசைவுக்கும் பொருத்தமே இல்லை.
வழக்கறிஞரான ராஷி கன்னாவுக்கு, கார்த்தியை காதலிப்பது, பின் அவருக்கு உதவுவதுதான் வேலை. ஆனால் மனதில் நிற்பது பிளாஷ்பேக்கில் வரும் ரஜிஷா விஷயன்தான். சின்ன சின்ன உடல் மொழியில் கவனம் ஈர்க்கிறார். நீண்ட காலத்துக்குப் பின் சமூக போராளியாக லைலாவைப் பார்ப்பது வித்தியாசமான அனுபவம்.
ஏஜென்ட்டுகள், கரப்பான்பூச்சி யூகி சேது, விக்டர் அவினாஷ், சித்தப்பா முனிஷ்காந்த், சிறுவன் ரித்விக், அரசியல்வாதி இளவரசு ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் சிறப்பாக ஒன்றி இருக்கிறார்கள். ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் கதைக்கு அதிகம் உதவி இருக்கின்றன.
உளவுத்துறை தொடர்பாக பல காட்சிகள் இருந்தாலும் அவற்றில் போதுமான சுவாரசியம் இல்லை. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், உள்ளடி அரசியல் ஆகியவை வசனங்களாகவே கடந்து போகின்றன. அதைச் சரியாகப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கிறது. இவற்றைச் சரி செய்திருந்தால் ‘சர்தார்’ இன்னும் ஈர்த்திருப்பான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT