Published : 21 Oct 2022 05:58 PM
Last Updated : 21 Oct 2022 05:58 PM
ஒவ்வொரு மனிதனும் தனக்கென அடையாளத்தை தேடிக்கொண்டிருக்க, தனக்கான அடையாளங்கள் மறைக்கப்பட்டு வாழும் ஓர் உளவாளியின் வாழ்க்கையே 'சர்தார்'. 'நாலு பேருக்கு செய்யும் உதவி குறைந்தது 40 ஆயிரம் பேருக்காவது தெரிய வேண்டும்' என்ற விளம்பர எண்ணத்தோடும், நாகரிக சமூகத்தின் டிரெண்டிங் மோகத்துடனும் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய பிரகாஷ் (கார்த்தி) பாதுகாப்புக்கு செல்லும் இடத்தில் முக்கியமான ஃபைல் காணாமல் போகிறது. இந்திய உளவுத் துறை அளவுக்கு தீவிரமாக பேசப்படும் இந்த விவகாரத்தில் காணாமல் போன ஃபைலை கண்டுபிடித்தால் இன்னும் டிரெண்ட் ஆகலாம் என்கிற நினைப்பில் விஜய பிரகாஷ் விசாரணையில் இறங்குகிறார். அப்படி தேடிச் செல்லும்போது நடக்கும் எதிர்பாரா சம்பவங்கள் விஜய பிரகாஷின் பிளாஷ்பேக் வாழ்க்கையையும், அதில் மறைக்கப்பட்டுள்ள உண்மையையும், ரியல் 'சர்தார்' யார் என்பதையும் வெளிக்கொண்டு வருகிறது என்பதே 'சர்தார்' படத்தின் திரைக்கதை.
இயக்குநர் பிஎஸ் மித்ரன் படத்துக்காக எடுத்துக்கொண்ட மையக்கருவான தண்ணீர் அரசியல் குறித்து பேசும் விஷயங்கள் மிக முக்கியம். புனைவாக இருந்தாலும் அதில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் மூலம் குடிக்கும் தண்ணீர் உலகில் எவ்வாறு அரசியலாக்கப்படுகிறது, எப்படி வியாபாரமாக்கப்படுகிறது என்பதை தோலுரித்து காட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குநர். இவற்றோடு தேசத்துக்காக அடையாளங்களை தொலைத்து மறைமுகமாக வாழும் உளவாளிகள் சந்திக்கும் இன்னல்களையும், ராணுவ வீரர்களுக்காக இணையாக மதிக்கப்பட வேண்டிய உளவாளிகளின் தியாகங்களும் உழைப்புகளும் எவ்வாறு மலிவான அரசியல்களால் தேசத் துரோகமாக மாற்றப்படுகிறது என்பதையும் பேச நினைத்துள்ளார். தமிழ் சினிமாவில் இதுவரை ராணுவ வீரர்களை மட்டுமே கொண்டாடிவந்த நிலையில் உளவாளிகளின் வாழ்க்கையையும் மக்கள் மத்தியில் காண்பித்தது புது முயற்சி.
மித்ரன் நினைத்த உளவாளி மற்றும் 'விளம்பர பிரியர்' இன்ஸ்பெக்டர் பாத்திரங்களுக்கு இரட்டை வேடம் மூலம் உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி. ‘சிறுத்தை’ படத்துக்குப் பிறகு இரட்டை வேடம். அதிலும் இன்ஸ்பெக்டர் கேரக்டர் சிறுத்தை போலீஸை நியாபகப்படுத்த முயன்றுள்ளது. ஆனால், சிறுத்தையில் இருந்த போலீஸ் கார்த்தியின் கம்பீரம் இதில் மிஸ்ஸிங். ஜாலியாக ஆரம்பித்தாலும் விஜய பிரகாஷ் பாத்திரத்தின் தன்மை போகப் போக கம்பீரத்தையும் உற்சாகத்தையும் இழந்து பாடத்தின் முதல் பாதியை அயர்ச்சியாக்குகிறது. அதேநேரம், உளவாளி கார்த்தியின் கேரக்டருக்கு இயக்குநர் கொடுத்துள்ள வடிவமைப்பும், அதற்காக கார்த்தி காட்டிய மென்கெடல்களும் ரசிக்கும்படியாக உள்ளன.
ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் என படத்தில் இரண்டு கதாநாயகிகள். இரண்டு பேருக்குமே சம பங்கான ரோல். மனதில் நிற்கும்படியான பாத்திரமாக இல்லையென்றாலும் கிடைத்த வாய்ப்புக்கு ஏற்றவாறு இருவருமே நடித்துள்ளனர். நடிகை லைலா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சிறிதுநேரமே வந்தாலும் வழக்கத்திற்கு மாறான லைலாவாக முக்கிய ரோலை கையாண்டுள்ளார். இவர்களை விடுத்து முனீஷ் காந்த், சங்கி பாண்டே, இயக்குநர் பாலாஜி சக்திவேல் போன்றோர் சிறிய பாத்திரங்களில் தோன்றியிருந்தாலும் சிறுவனின் ரித்விக் நடிப்பு கவனம் ஈர்க்க வைத்துள்ளது.
ஜிவி பிரகாஷின் இசையில் ஏறுமயிலேறி பாடலை தவிர மற்ற பாடல்களும் பின்னணி இசையும் பெரிதாக கவரவில்லை. ஆக்ஷன் படத்துக்கான பின்னணி இசையாக இருந்தாலும் தனித்து நிற்கவில்லை. அதேநேரம் ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு சண்டை, பிளாஷ்பேக் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள் என படத்துக்கான பக்கபலமாக அமைந்துள்ளது.
படத்தின் இன்னொரு பலம் வசனங்கள். நான்கு பேர் சேர்ந்து எழுதியுள்ள, 'நான் இல்லன்னா அம்மா என்ன பண்ணுவ்வாங்கன்னு பேசுனேன்.. அம்மா இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு பேசல', 'தப்ப சரி பண்ணணும் நினைக்கிறவங்களுக்கு மன்னிப்பு தேவையில்லை' போன்ற வசனங்கள் ரசிகருக்கு படத்துடன் கனெக்ட் செய்ய உதவியுள்ளது.
முதல் பாதியில் ஒரு வழக்கமான கமர்ஷியல் படத்தின் பாதையில் பயணித்து டெம்பிளேட் என்றாலும் மனதில் ஓட்டாத இன்ட்ரோ பாடல், ஃபைட் என குறிக்கோள் இல்லாமல் செல்லும் திரைக்கதை இடைவேளை நெருங்கும்போது சூடுபிடிக்கிறது. ரியல் 'சர்தார்' கேரக்டர் வரும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு ஏற்றப்பட்டாலும், தலையை சுற்றி காதை பிடிக்கிற விதமாக பாகிஸ்தானை இழுத்தது, தேசிய பாதுகாப்பு ஆலோசகரை எளிதாக கடத்துவது போன்ற குறைகள் படத்தின் தடைக்கல்லாக அமைந்துள்ளது. போதாக்குறைக்கு தண்ணீர் அரசியலை பேசுகிறோம் என்கிற போர்வையில் நீர் மேலாண்மைக்கு பாடம் எடுப்பது போன்ற காட்சிகளால் படத்தின் நீளத்தை அதிகரிக்க வைத்து ரசிகர்களை சோதிக்க தவறவில்லை.
மொத்தத்தில், மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய விஷயங்கள், கருத்துகள், படத்தின் நீளத்தையும் சில குறைகளையும் மறக்கடித்தால் 'சர்தார்' ரசிகர்களுக்கு வித்தியாசமான தீபாவளி விருந்தாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT