Published : 21 Oct 2022 11:47 AM
Last Updated : 21 Oct 2022 11:47 AM
முற்போக்கான தந்தை சாதி, மதம் கடந்து காதலிக்கச் சொன்னதன்படி மகன் சாதி, மதம், நிறம், அப்படியே கன்ட்ரி அதாங்க நாடு கடந்து காதலித்தால் அதுவே ‘பிரின்ஸ்’.
முற்போக்குவாதியான கடலூர் தேவனகோட்டை உலகநாதன் (சத்யராஜ்), ஊருக்கெல்லாம் சாதி, மதம் குறித்து ரத்தம் சொட்ட வைத்து பாடம் எடுக்கிறார். அப்படிபட்டவரின் மகள் சொந்தத்துக்குள் திருமணம் செய்ததால் கேலிக்குள்ளான உலகநாதன், தனது மகன் அன்புவை (சிவகார்த்திகேயன்) சாதி, மதம் கடந்து காதலிக்கச் சொல்கிறார். கட் செய்தால் சுதந்திரத்துக்கு பின் இந்தியாவில் தங்கிய பிரிட்டிஷ் குடும்ப பெண் ஜெசிகா, எதிர்பாராத வகையில் அன்பு வேலை பார்க்கும் பள்ளியில் இங்கிலீஷ் டீச்சராக பணியில் இணைகிறார். தந்தையின் லட்சியத்துக்கேத்த பெண்ணாக வரும் ஜெசிகாவை கண்டதும் காதலிக்கும் அன்பு, அந்தக் காதலை எப்படிச் சொல்கிறார், தேச பக்தி அவர்கள் காதலுக்கு பிரச்சினையாக வர, அதில் இருந்து வெளிவந்து இருவரும் சேர்கிறார்களா, இல்லையா என்பதை திரைக்கதையாக காமெடி நெடியில் பேசுகிறது பிரின்ஸ்.
ஊரைவிட்டு ஓடிச்சென்ற காதலர்களால் சாதி ரீதியாக பிரிந்து சண்டை போடும் ஊர்காரர்களுக்கு கடிக்காமல் கருத்து கூறும் அப்பாவித்தனம் நிறைந்த ரிட்டயர்டு அரசு அதிகாரியாக சத்யராஜின் அறிமுதத்துடன் ஆரம்பிக்கும் படத்தின் முதல் காட்சி சிவகார்த்திகேயனுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் இன்ட்ரோ சாங், பெரிய அறிமுகம் இல்லாமல் விரிகிறது.
‘டான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன். ‘டான்’ படத்தில் ஸ்டூடன்ட் என்றால் இதில் டீச்சராக அவரின் ஆஸ்தான காமெடி களத்தில் தனக்கே உரித்தான பாணியில் அதகளம் செய்துள்ளார். கதாநாயகி மரியாவை கண்டதும் காதலிப்பதில் தொடங்கி, அந்தக் காதலை எதிர்க்கும் ஊர்க்காரர்களையும் தந்தையையும் அவர்களை தூண்டிவிடும் சிலரையும் சமாளிப்பது என சிவாவின் உழைப்பு படத்துக்கான ஆணிவேர். என்றாலும் அதுவரை செய்ததைவிட கிளைமாக்ஸில் செய்யும் கிரிஞ்ச் இல்லாத காமெடிகள் தியேட்டரில் சிரிப்பலைகளை கட்டுக்கடங்காமல் செய்கிறது. ‘டாக்டர்’, ‘டான்’ பட வரிசையில் தனக்கு கைவந்த காமெடி ஜானரையே மீண்டும் தேர்வு செய்து அப்பாவித்தனமான முகபாவனைகள், அதைத் தாண்டிய நடனம் என தான் ஒரு பக்கா கமர்ஷியல் + ஃபேமிலி என்டர்டெயினர் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார் சிவா.
ஜெசிகா பாத்திரத்தில் உக்ரைன் நடிகை மரியா. மரத்தை சுற்றி டூயட் பாடும் பாத்திரமாக இல்லாமல் கதையின் ஓட்டத்துக்கு ஏற்ப இவரின் பாத்திர வடிவமைப்பும் அதற்கான அவரின் நடிப்பும் சரியாக பொருந்தியுள்ளது. எனினும், தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் கதாநாயகிகளிடம் வெளிப்படும் எமோஷனல், கோபம் போன்ற சீன்களில் மரியா சிறிய தடுமாற்றம் கண்டாலும் கதையின் ஓட்டம் அதை மறக்கடிக்கிறது.
உலகநாதனாக சத்யராஜ். படத்தின் மிகப்பெரிய தூண் இந்த கேரக்டர். தனக்கு தெரியாதது இல்லை என்பது போல் மேதாவியாக காண்பிக்க முற்பட்டு பல இடங்களில் கேலிக்கு உள்ளாக்கப்படும் பாத்திரம் இது. இந்த தன்மைக்கு ஏற்ற ரியாக்ஷன் கொடுத்து அசாதாரணமாக நடித்து படம் முடித்து வெளியே வந்தாலும் உலகநாதன் பாத்திரத்தை மறக்க முடியாமல் செய்து சீனியர் நடிகராக ஜொலித்துள்ளார் சத்யராஜ்.
இந்த மூவரை தாண்டி பிரேம்ஜி, சுப்பு பஞ்சு அருணாச்சலம், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், ப்ராங்கஸ்டர் ராகுல், ஃபைனலி பாரத் என சில பாத்திரங்கள் கதையை கடத்த உதவியிருக்கின்றன. அதேநேரம், கெஸ்ட் ரோல் செய்திருக்கும் ஆனந்த்ராஜ், சூரி பாத்திரங்கள் தேவையற்றவை.
ஜாலியான படத்துக்கு அதற்கேற்ற இசையை கொடுத்துள்ளார் தமன். பின்னணி இசை மட்டுமல்ல, ஜெஸ்ஸிக்கா ஜெஸ்ஸிக்கா.. who am i?, பிம்மிலிக்கா பிலாப்பி என துள்ளல் பாடல்களை கொடுத்து படத்தை கமர்ஷியலாக ஜொலிக்க வைத்துள்ளார். கலஃர்புல் படங்கள் என்றாலே மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு என்பது தமிழ் திரையுலகில் எழுதப்படாத விதி என்பது போல் உள்ளது. அதை இப்படமும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலே சொன்னது போல் கெஸ்ட் ரோல் செய்திருக்கும் ஆனந்த்ராஜ், சூரி பாத்திரங்களும், சில காட்சிகளும் தேவையற்றவை என்றே எண்ண வைக்கின்றன. திரைக்கதையை நகர்த்த அவர்களின் காட்சிகளை வலிய திணிக்கப்பட்டதுபோல் உள்ளது. காமெடியாக செல்லும் கதையில் சென்டிமென்ட்க்கான திணிப்பு காட்சிகள் மற்றும் சிவா - மரியா காதலுக்கான காரணம் சரியாக இருந்தாலும் காதல் டக்கென வந்துவிடுவது போன்றவை ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
படத்தின் கதை ஒன்லைனாக பார்த்தால் இதில் எங்கே கதை என்றே எண்ண வைக்கும். அப்படியான ஒருகதையை காமெடி ட்ராக் நிறைந்த திரைக்கதையால் அப்பாவித்தனங்கள் நிறைந்த காதாபாத்திரங்களால், வசனங்களால் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிப்புடன் எங்கேஜிங்காக கொண்டுச் சென்றதற்காக இயக்குநர் அனுதீப்பிற்கு வாழ்த்துச் சொல்லலாம். தெலுங்கு இயக்குநராக இருந்துகொண்டு தெலுங்கு சாயலே இல்லாமல் முழுக்க ஒரு தமிழ் சினிமாவாக எடுத்திருக்கிறார். ஆங்கிலேயர்கள் என்றாலே கெட்டவர்கள் என்கிற ஸ்டீரியோ டைப்பும், நாட்டுப்பற்றக்கான அளவுகளோலும் எள்ளி நகையாடி காமெடி மூலம் உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குநர் அனுதீப்.
தேசபக்தியை விட மனிதமே முக்கியம் என்பதை வலியுறுத்திய வகையிலும், போரினால் ஏற்படும் இழப்புகளை பேசிய வகையிலும், தேசபக்தியை கேடயமாக பயன்படுத்தும் குரூப் ஒரு டிராமா ட்ரூப் என்று சுட்டிக்காட்டிய வகையிலும், இவற்றையெல்லாம் 2k கிட்ஸ்களுக்கு இணக்கமான நடையில் திரையில் கொண்டுவந்த விதத்திற்காகவும் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படம் முக்கியத்துவம் பெறுகிறது.
கரோனா காலகட்டத்தில் துன்பங்களில் இருந்த மக்களை ‘டாக்டர்’ படம் மூலம் தியேட்டருக்கு மீண்டும் அழைத்துவந்து சிரிக்க வைத்தவர் சிவகார்த்திகேயன். அதே பாணியை இப்போது பிரின்ஸிலும் கடைப்பிடித்து மீண்டும் மக்களை சிரிக்க வைத்துள்ளார்.
மொத்தத்தில், எதையும் எதிர்பார்க்காமல் ஜாலியாக குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாட நினைப்பவர்களுக்கு ஏற்ற படமாக தியேட்டரில் காமெடி சரவெடியாக வெடிக்கிறது பிரின்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT