Published : 14 Oct 2022 06:18 PM
Last Updated : 14 Oct 2022 06:18 PM
'ஜெய்பீம்', 'கேஜிஎஃப் 2' படங்களை பின்னுக்குத் தள்ளி கன்னட படமான ‘கந்தாரா’ ஐஎம்டிபி தளத்தில் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது.
சமீபத்தில் பெரிய திரையில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள கன்னட திரைப்படம் 'காந்தாரா' (Kantara). பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக கந்தாரா வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.
நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதை உடன் படத்துக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இதை உணர்ந்த படக்குழு படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாக அறிவித்திருந்தது. அந்த வகையில் படம் நாளை (அக்டோபர் 15) திரையரங்குகளில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங்கில் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் இருந்தது. அதாவது, ஐஎம்டிபியில் 'ஜெய்பீம்' படத்தின் ரேட்டிங் 8.9. இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங்காக இந்தப் படம் கருதப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக 'கேஜிஎஃப் 2' திரைப்படம் 8.4 ரேட்டிங்குடன் இரண்டாவது இடத்தில் பிடித்திருந்தது. அடுத்ததாக ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' 8 ரேட்டிங்கில் இருந்தது.
இந்நிலையில், இவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி 9.5 ஐஎம்டிபி ரேட்டிங்குடன் முதலிடம் பிடித்துள்ளது 'காந்தாரா'. இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங் கொண்ட படமாக இது கருதப்படுகிறது. ஐஎம்டிபி ரேட்டிங் என்பது பார்வையாளர்களால் கொடுக்கப்படும் விமர்சன மதிப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT