Last Updated : 04 Oct, 2022 09:16 PM

 

Published : 04 Oct 2022 09:16 PM
Last Updated : 04 Oct 2022 09:16 PM

சினிமாபுரம் - 3 | ஆத்தா உன் கோயிலிலே: மானத்தை பெண்களில் தேடிய கிராமத்தின் கோரமுகம்

பச்சைப் புல்வெளிகளும், காய்ந்து வெளிறி இருக்கும் புதர்காடுகளும் ஒரு கிராமத்தின் தவிர்க்க முடியாத நிலவெளிகள். இன்பம் துன்பம் என்ற வாழ்க்கையின் இரண்டு பக்கங்களை வெளிப்படுத்தி நிற்கும் அந்த நிலப்பரப்பில் இருக்கும் ஊர் "தலைக்கல்"லு தொடங்கி குளத்துக்கரையில் ஓங்கி நிற்கும் ஒற்றை ஆலமரம் வரை அனைத்துக்கும் பல கதைகள் இருக்கும். பெரும்பாலும் அந்தக் கதைகள் எல்லாம் அதே ஊரில் வாழ்ந்த யாரோ ஒருவரின் வீரத்தையோ அல்லது பெரும் சோகத்தைப் பற்றியதாகவோ தான் இருக்கும். இப்படியான கதைகளில் மிகவும் முக்கியமானது கன்னிச்சாமி கதைகள்.

இதில் "கன்னி" என்ற வார்த்தையே பல விஷயங்களை நமக்குச் சொல்லிவிடும். கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு கன்னி பெண்தெய்வம் இருக்கும். வீட்டுப் பெரியவர்களிடம் அது பற்றிக் கேட்டால், "ரொம்ப காலத்துக்கு முன்னாடி இந்த வீட்டுல இருந்த கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு மேல அடுத்தத் தெருக்காரங்க கண்ணுப்பட்டதால, அந்தப் பொண்ணு வங்கொலையா செத்துப்போச்சு. அப்போ இருந்து அந்த மகராசி சாமியா இருந்து இந்தக் குடும்பத்தை காப்பாத்திட்டு வர்றா. எந்த சந்தோஷத்தையுமே அனுபவிக்காம கன்னியாவே செத்துப் போனதனால நாம அதை கன்னி தெய்வம்னு சொல்றோம். எங்க காலத்துக்கு பிறகு நீங்க தான் அதை கும்பிட்டு அது மனசு கோணாம பாத்துக்கணும்" என்பார்கள்.

வீட்டுக்கு இருப்பது போல ஊருக்கு பொதுவாய் சில கன்னி தெய்வங்களும் இருக்கும். அவை பெரும்பாலும் அவர்களின் உண்மையான பெயர்களில் அம்மன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும். இந்த அம்மன்கள் வங்கொலைாயாக செத்துப் போனவைகள் இல்லை, கொல்லப்பட்டவை. ஊரில் கடைபிடிக்கப்பட்டு வரும் அடக்குமுறைகளை மீறியதற்காக ஊர் தண்டனையாக கொலை செய்யப்பட்டு பயம் காரணமாக பின்னர் சாமி ஆக்கப்பட்டிருப்பார்கள்.

ஆத்தா உன் கோயிலிலே: இப்படி சாதியின் மானத்தை காப்பாற்றுவதற்காக உறவுக்காரர்களாலேயே விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டு பின்னர் ஊர் மக்களால் கடவுகளாக வழிபடப்படும் ஒரு கன்னிப் பெண்ணின் கதையைச் சொல்லும் படம் தான் 'ஆத்தா உன் கோயிலிலே' திரைப்படம். ஊர் அடங்கி வெகு நேரமான இரவில் ஊரிலிருந்து தனித்திருக்கும் அந்தக் கோயிலுக்கு "லாந்தர்" அல்லது "அரிக்கேன்" விளக்கு கட்டிய மாட்டுவண்டி ஒன்று வருகிறது. வண்டியில் இருந்து கையில் பெண் குழந்தையுடன் தம்பதி ஒன்று இறங்குகின்றது. கோயிலுக்கு வரும் அவர்களை ஒரு பெரியவர் எதிர்கொண்டு விசாரிக்கிறார். அதற்கு அந்தத் தம்பதி, அந்த ஊரைச் சேர்ந்த அவர்கள் இருவரும் சாதிக் கட்டுப்பாடுகளை மீறி காதலித்து, தற்போது நிற்கும் கோயிலில் இருக்கும் மருது என்பவரின் உதவியுடன் வைத்து கலப்புத் திருமணம் கொள்கிறார்கள்.

அவர்களுக்கு இப்போது பெண் குழந்தை பிறந்திருப்பதால் அதற்கு பெயர் வைக்க சொந்த ஊருக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள். என்ன பெயர் என அந்த பெரியவர் கேட்க அம்மன் பெயர்தான் "கஸ்தூரி" என்கிறாள் குழந்தையின் தாய். இதைக் கேட்கும் அந்தப் பெரியவர் கஸ்தூரி... கஸ்தூரி... என குழந்தையிடம் சொல்லி அதனை ஆசீர்வதித்துவிட்டு பழைய நினைவுகளில் மூழ்குகிறார். யார் அந்த கஸ்தூரி, அவளை ஏன் காதலர்கள் சாமியாக கும்பிடுகிறார்கள் என நீளுகிறது திரைப்படம்.

அந்த ஊரில் பண்ணையார் அந்தஸ்தில் வாழும் உயர்சாதி குடும்பம் ஒன்றின் இளையவர் (தம்பி) ராமைய்யா, அவரது மகள் கஸ்தூரி. ராமைய்யா தன் அண்ணன் அண்ணியுடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார். அண்ணன் சொல்லைத் தட்டாத ராமைய்யா தன்னுடை மகளையும் அப்படியே வளர்க்கிறார். இவர்களது வீட்டில் வேலை செய்யும் பண்ணையாள் மருது. வளர்ந்து பருவமடையும் கஸ்தூரியை அவர்களின் சாதி வழக்கப்படி முறைமாப்பிள்ளைக்கு கட்டிவைக்க பெரியவர்கள் முடிவு செய்கின்றனர். யாருக்கும் அடங்காமல் ரவுடியாக சாதி பெருமை பேசி திரியும் அவனை திருமணம் செய்ய கஸ்தூரி விரும்பவில்லை. தன் வீட்டில் வேலை செய்யும் மருதுவை விரும்புகிறாள். அதனைத் தனது குடும்பத்தினரிடமும் தெரியப்படுத்துகிறாள். பல தடைகளை மீறி குடும்பத்தினரின் சம்மதத்துடன் மருது, கஸ்தூரியை திருமணம் செய்கிறான்.

சாதித்தூய்மை பேணுவதில கறாராக இருக்கும் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் அழகர்சாமி, தன்னுடைய சாதியைச் சேர்ந்த கஸ்தூரியின் பெரியப்பாவை அழைத்து, அந்தச் சாதியைச் சேர்ந்த மற்ற பிரதிநிதிகளின் முன்னிலையில் அவரை கட்டயாப்படுத்தி சாதிப் பெருமையை காப்பாற்ற கஸ்தூரியை விஷம் வைத்து கொன்றுவிடும் படி கூறுகிறார். அதுவும் திருமணமான அன்றே புதுமணத் தம்பதிகள் ஒன்றிணைவதற்கு (ரத்தத் தூய்மை பேணுவதற்காக) முன்பாகவே கொன்றுவிடச் சொல்கிறார்கள். அந்தப் பெரியவரும் அதற்கு சம்மதித்து கஸ்தூரியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுவிடுகிறார். விஷயம் கேள்விப்பட்டு மருது எப்படியும் தன் மனைவியைக் காப்பாற்ற வருவான் என்பதால் அவன் வண்டிகட்டுதற்கு ஊரில் யாரும் உதவக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அதுபோலவே ஊரார் அனைவரும் தங்களின் வீட்டுக் கதவுகளை அடைத்து மருதுக்கு உதவ மறுத்து விட, காப்பாற்ற நாதியில்லாமல் மருதுவின் மடியில் தன் உயிரை விடுகிறாள் கஸ்தூரி. பின்னர் அந்த ஊர் கஸ்தூரியை சாமியாக்கி வணங்கி தங்களின் கொலை பாவத்தைப் போக்கி கொள்கிறது.

கிளை கதையும் கிராமத்து மனிதர்களும்: முந்தைய கதை "ஃப்ளாஷ்பேக்" கதையாகவே சொல்லப்பட்டிருக்கும். படத்தின் கிளைக் கதையாக சாதிக் கட்டுப்பாடுகளை மீறி விரும்பும் இளம் ஜோடியின் காதல் ஒன்று சொல்லப்பட்டிருக்கும். ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவர் அழகர்சாமியின் மகன் பாண்டி. பட்டணத்தில் படித்துவிட்டு ஊர் திரும்பியிருக்கும் அவன், அந்த ஊரின் செருப்பு தைக்கும் தொழிலாளி காளியப்பனின் மகள் ஈஸ்வரியை காதலிப்பான். இந்தக் காதல் ஊர் கன்னிச்சாமியான கஸ்தூரியின் கணவன் மருதுவுக்கும், பாண்டியன் தந்தை அழகர்சாமிக்கும் தெரிய வருகிறது.அழகர்சாமியின் சாதி வெறியை மீறி மருது இளம் காதலர்களை எப்படி சேர்த்து வைத்தான் என்பது உபகதையாக நீளும். படத்தின் தொடக்க காட்சிகளில் ஈஸ்வரி, பாண்டியைச் சீண்டும் காட்சிகள் இன்றைய ரசனைக்கு செயற்கைத் தனமாகத் தெரிந்தாலும் அன்றைய ஆண் - பெண் உறவில் இருந்த சரசம் இல்லாத சகஜநிலை அந்தக் காட்சிகளில் கையாளப்பட்டிருக்கும்.

கிராமங்களின் நுணுக்கமான கலாசாரங்களை சாதியப் பெருமைகளாக மிகைப்படுத்தி பேசுவதற்கு முன்பு வந்த படம் என்பதற்கு ஈஸ்வரியின் அப்பா காளியப்பனை காட்சிபடுத்தியிருக்கும் விதம் ஒரு சாட்சி. கதைப்படி அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. சாராயம் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி, பண்ணையாரின் ஏவல் வேலைகளுக்கு கைகட்டி நிற்கும் க்ளிஷேவாக அவரைக் காட்டாமல் அவரும் அந்தக் கிராமத்தின் கவுரவமான குடிமகன் என காட்டியிருக்கும் இயக்குநரை தாராளமாய் பாராட்டலாம். பெரும்பாலான தமிழ் சினிமா விளிம்புநிலை மக்களை குறிப்பாக பட்டியல் இன மக்களை அடிமைத்தனத்தை விரும்பி ஏற்கும் பாத்திரங்களாகவே காட்சிப்படுத்தி இருக்கும்.

யதார்த்தம் அப்படி இருக்கவில்லை. அந்த மக்களுக்குள் காதல், காமம், வீரம் போன்ற எல்லா உணர்வுகளும் இருக்கும். தற்கால தமிழ் சினிமா அந்த காதலின் மெல்லிய பக்கங்களை தற்போது பேசத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், தொண்ணூறுகளிலேயே இயக்குநர் அதை பேசியிருக்கிறார். பதின்ம வயது (டீன்ஏஜ்) மகளுடன் ஒற்றை அறை வீட்டில் வசிக்கும் காளியப்பன், மனைவியுடன் தனித்திருக்க விரும்பும்போது தனது ஆசை மகளை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அதற்கென பிரத்யேக குறியீட்டு மொழியை சொல்லி ஆசையை வெளிப்படுத்துவது, மகள் பருவமடையும்போது சினிமா பாடல் பாடும் குமரிகளை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு தோள் துண்டை மாராப்பு சேலையாக்கி மகளுக்காக நலுங்குப்பாட்டு பாடுவது என தன்னுடைய லிட்டில் பிரின்ஸுக்கான தந்தையாக விளிம்பு நிலை தந்தைகளும் இருக்கிறார்கள் என்பதை காளியப்பன் காட்டியிருப்பார்.



கட்டியம் கூறி கதை சொல்லுதல்: கடந்த 1991-ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருக்கிறார். தன்னுடைய முதல் படமான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் கையாண்டிருந்த கட்டியம் கூறி கதையைத் தொடங்கும் யுக்தியை இந்தப் படத்திலும் கையாண்டிருப்பார். என் ராசாவின் மனசிலே படம் மதுரை மாவட்டம் பண்ணைபுரம் பக்கத்திலே இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் நடந்த கதை என ராஜ்கிரணின் குரலில் மாயாண்டி சோலையம்மா கதையிது என சொல்லி படம் தொடங்கும். ‘ஆத்தா உன் கோயிலிலே’ படம் அவரின் அதே மதுரை மாவட்டத்தில் மல்லிங்காபுரம் என்னும் கிராமத்தில் நடந்ததாக எழுத்திலும், வாய்ஸ் ஓவரிலும் சொல்லித் தொடங்கியிருப்பார். பார்வையாளர்களை கதைக்குள் இழுக்கவும், படத்துடன் ஆத்மார்த்தமாக இணைக்கவும் உதவிய இந்த யுக்தி கதைமாந்தர்களைப் போல தங்கள் பகுதிகளில் உள்ள சாமிகளையும் பொருத்திப் பார்க்கவும் உதவியது.

குற்ற உணர்வு தீர்வு இல்லை: தென்மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் அம்மனுக்கு நடக்கும் திருவிழா ஒன்று காதல் கொலைகளின் கதைகளுக்கு ஒருபானை சோற்றுப் பதம். அந்த திருவிழா நள்ளிரவில் மட்டும்தான் நடக்கிறது. திருவிழாவில் ஊரிலுள்ள எல்லோர் வீட்டிலும் இருந்தும் மண்ணால் செய்யப்பட்ட பொன்னியம்மன் சிலையை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு போய், அவளை கொலை செய்துவிட்டதற்காக மன்னிப்புக் கேட்டு அழுது தங்களின் குற்ற உணர்வினை போக்கிக் கொள்வதே திருவிழாவில் உச்சம். அது என்ன கதை என்கிறீர்களா... உயர் சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தி அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள சாதியை மீறிய அப்பெண்ணை ஏற்றுக்கொள்ளாத ஊர் கட்டுப்பாடு கன்னியாய் அவளை அடித்துக் கொன்று விடுகிறது. பிறகு பயத்திலும் குற்ற உணர்வில் இறந்து போனவளை அம்மனாக்கி அவளிடமே அருள் வேண்டி தலைமுறை தலைமுறையாய் குற்றஉணர்விலிருந்து அந்தக் கிராமம் தப்பித்துக் கொள்கிறது.

இதேபோன்றதொரு காதல் கொலை கதைதான் வடக்கு நோக்கி மட்டுமே இருக்கும் ஒரு அம்மனுடையதும். பட்டியல் இன ஆணை திருமணம் செய்துகொண்ட இடையர்குல பெண்ணை அந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் கொலை செய்து பின்னர் சாமியாக்கி விடுகிறது. இந்தக் கதைகள் எல்லாம் சின்னச் சின்ன உதாரணங்கள்தான். இப்படி ஊருக்கு இரண்டொரு சாமிகள் கட்டாயம் இருக்கும். இவர்களின் கதைகள் அவர்களை வாழ விடாத குற்ற உணர்வின் வெளிப்பாடு மட்டும் இல்லை. அது ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் வீரியமான ஒற்றைக் குரல்கள். கலகக் குரல்கள்.

எதிர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்: இந்த நீண்ட கதைகள் விதிமீறியவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்ற கோர உண்மை இன்றும் தொடர்ந்து வருவதையே உணர்த்துகிறது. கஸ்தூரி அம்மன் வடக்கு நோக்கி இருக்கும் அம்மன் என்று சாதியின் விதியை மீறியவர்களை காணாமல் போக செய்த கொடுவாளின் ரத்த தாகம், இளவரசன், சங்கர், முருகேசன் கண்ணகி என நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால், அந்த தலைமுறையிடம் இருந்த ஏதோ ஒன்று இன்றைய தலைமுறையிடம் இல்லை அல்லது அப்போது இருந்ததை விட மூர்க்கமாக மாறியிருக்கிறது. அன்று கொலை செய்தற்கான குறைந்தபட்ச குற்ற உணர்வு இருந்தது. இன்று அது புனிதம் பேணும் பெருமையாக கவுரவக் கொலைகள் என்று பட்டம் சூட்டி நிற்கிறது. அன்று குற்ற உணர்வில் கடவுளாக்கி கும்பிட்டவர்கள் அந்த கலகக் குரலை ஏற்றுக்கொண்டு பழகியிருந்தால் கவுரவக் கொலைகள் என்ற பதமே உருவாகியிருக்காது.

கஸ்தூரி அம்மன் தொடங்கி காதலுக்காக கொல்லப்பட்ட எந்தப் பெண் கடவுளுக்கும் தன் மக்களின் மீது குற்ற உணர்வைத் திணிக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்திருக்காது. மாறாக, தங்களின் விருப்பதை கொலை பாதகமாக பார்க்காமல் அந்த எதிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே விரும்பி இருப்பார்கள். அதனால்தான் ஊராரின் குற்ற உணர்வினைச் சொல்லும் தங்களுடைய கதைகளில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தாங்களின் எதிர்குரலையும் உரக்கவே பதிவு செய்கிறார்கள். அந்த உண்மைதான் காலம் கடந்தும் அந்தக் குரலை இன்னும் ஒலிக்கச் செய்கிறது. இனிவரும் தலைமுறை அந்த எதிர்குரலை அறிந்து ஏற்றுக்கொள்பவர்களாக வளரட்டும்

மனதை உருக்கும் ஒத்தையடி பாதையிலே: படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ஒத்தடியடி பாதையிலே’ பாடல் தேவாவின் இசையில் ஒரு மைல் கல். ஒரு சில பாடல்கள் மட்டுமே கேட்கும் முதல் நெடியில் இருந்து கேட்பவர்களை கட்டிப் போட்டு மீண்டும் மீண்டும் அசைபோட வைக்கும். கேட்கும் நொடியில் நமது ஒட்டுமொத்த சோகமும் ஒத்தயடி பாதையாய் நீளும். அதே வேளையில் பாடல் முடியும் போது அத்தனை சோகத்தையும் வடித்தெடுத்துப் போகும் வித்தையையும் தேவா இந்தப் பாடலில் நிகழ்த்தியிருப்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x