Published : 29 Sep 2022 03:14 PM
Last Updated : 29 Sep 2022 03:14 PM

‘ஆதார்’ பட இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

'ஆதார்' பட இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு பட தயாரிப்பாளர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கருணாஸ், ரித்விகா நடிப்பில், ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'ஆதார்'. படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை தமிழக முழுவதும் வெளியிட்ட சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், '' ‘ஆதார்’ படத்தை பற்றி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியான அனைத்து விமர்சனங்களையும் வாசித்தேன். பார்த்தேன். பிரமித்தேன். இதன் காரணமாக எழுந்த உந்துதலால் நன்றி அறிவிக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தேன்.

திரைக்கதை எழுதும் போது எத்தகைய உணர்வுடன் எழுதினேனோ... அது துல்லியமாக விமர்சனத்தில் இடம்பெற்றிருந்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படைப்பாளிகளான நாங்கள் சில ஆண்டுகள் உழைத்து திரைக்கதை எழுதி, அதனை படைப்பாக வெளியிடுகிறோம். அதனை இரண்டு மணி நேரம் மட்டுமே பார்த்துவிட்டு, எப்படி இவ்வளவு துல்லியமாக விமர்சிக்க முடிகிறது என்ற ஆச்சரியம் என்னுள் இன்னும் இருக்கிறது.

குறிப்பாக இப்படத்தின் திரைக்கதைக்குள் மறைமுகமாக இடம்பெறும் ரவி என்னும் கதாபாத்திரம், யூசுப் பாய் எனும் அருண் பாண்டியனிடம் முதல் பாதியில் ஒரு காட்சியும், இரண்டாவது பாதியில் ஒரு காட்சியும் மட்டுமே இடம்பெற்றிருக்கும். உச்சகட்ட காட்சியில் அந்த கதாபாத்திரத்திற்குரிய வசனங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். திரைக்கதைக்கு வலுவாக அமைந்திருக்கும் இந்தக் கதாபாத்திரங்களையும், விமர்சனத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்ததை பார்த்து வியந்தேன். பெருமிதமாகவும் இருந்தது.

ஏனைய திரைப்படங்களின் விமர்சனத்தை போல் அல்லாமல், ‘ஆதார்’ திரைப்படத்திற்கான விமர்சனங்கள் நன்றாக இருந்தன. இதனை தொகுத்து ஆல்பமாக வெளியிடலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் ‘ஆதார்’ திரைப்படத்தின் விமர்சனத்தில் இருக்கும் துல்லியமான விவரங்கள் இதற்கு முன் எந்த திரைப்படத்தின் விமர்சனத்திலும் இடம்பெறவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளரிடமும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களுக்கும் இது போன்ற விமர்சனங்கள் வந்ததில்லை.

கடந்த 22 ஆண்டு கால திரையுலக பயணத்தில், உங்களுடைய விமர்சனமும், ஆதரவும், அன்பும் என்னை படைப்பாளியாக வளர்த்துக் கொண்டு வருகிறது. என்னுடைய ஐந்தாண்டு கால உழைப்பை ‘ஆதார்’ படத்தில் முதலீடு செய்திருக்கிறேன். இதனால் சிறிய அச்சமும் என்னுள் இருந்தது. படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள், இது தரமான படைப்பு என அதன் தனித்துவத்தை அடையாளப்படுத்தி பாராட்டி, என்னை அடுத்த கட்ட இலக்கை நோக்கி பயணிக்க வைத்திருக்கிறார்கள்'' என்றார்.

இதனிடையே ‘ஆதார்’ படத்தின் வெற்றியைப் பாராட்டி, அப்படத்தின் இயக்குநரான ராம்நாத் பழனிக்குமாருக்கு, தயாரிப்பாளர் சசிகுமார் கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x