Published : 27 Sep 2022 10:00 PM
Last Updated : 27 Sep 2022 10:00 PM
நீலமற்ற வானும், அலைகளற்ற கடலும் சிறகுகளற்ற பறவைகளும் எப்படி சாத்தியமற்றதோ அதுபோலத்தான் இளையராஜாவின் இசையற்ற இரவுகள். அதுவும் மழைக்காலத்தின் ஈரமான நீள இரவுகளில், நம் மனதுக்கு நெருக்கமான நினைவலைகளில் நீந்தச் செல்வதில் இளையராஜாவுக்கும் அவரது இசைக்கும் எப்போதும் இறுக்கமான பங்கு இருக்கவேச் செய்கிறது.
பரபரப்பான 2K கிட்ஸ்களின் உலகத்தில் 80-ஸ் மற்றும் 90-ஸ் உலகத்தார் வாழ்வதற்கான தகவமைப்பை வசப்படுத்துவதில், இசைக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அதுவும் இளையராஜாவின் இசைக்கு அதீத பங்கு இருக்கிறது. எம்எஸ்வி காலம் தொடங்கி அனிருத் காலம் வரை ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டேயிருக்கும் அந்த இசையருவியின் சாரலில் நனையாதவர்களை கண்பது அரிது.
இரவுக்கும் இசைக்கும் இடையிலான நெருக்கம் உன்னதமானது. இளமைப்பருவமோ, முதுமைப்பருவமோ இரவுகள் இரக்கமற்றவை. குளிர்ந்த நிலாவை சுற்றி வெள்ளித்துண்டுகள் சிதறிக் கிடக்கும் வானம் ஒருபுறம். இரைச்சல்களற்ற நகர்ப்புறங்களில் நிலவும் நிசப்தம், கிராமப்புறங்களில் பூச்சிகள், வண்டுகள் எழுப்பும் ரீங்காரங்கள் என்று இரவுகள் எப்போதும் இம்சிக்கக்கூடியவை.
ஆழ்மனதின் அமைதியை கிளர்ந்தெழச் செய்யும் இந்த இரவுகளை சமாளிப்பதற்கு சரியான உளவியல் மருத்துவர் இசைஞானி இளையராஜா மட்டுமே. அந்த கணத்தில் நம் மனதுக்கு என்ன வேண்டுமோ அதனை சரியாக ஆய்ந்து, முறையான இசை மருத்துவக் குறிப்புகளுடன் நமக்கு சிகிச்சை அளிப்பதில் அவரது இசைக்கு நிகரானது எதுவுமே இருக்க முடியாது.
மனித உணர்வுகளும், உணர்ச்சிகளும் தனித்துவம் வாய்ந்தவை. அந்த உணர்வுகளை, உணர்ச்சிகளை நம் ஆழ்மனதின் அறியமுடியாத பாகங்கள் வரை சென்று சிலிர்க்க வைத்து சுகமான நினைவுகளாக மாற்றுவதில், இளையராஜாவின் இசைக்கோப்புகளுக்கும், அவரது இசை கருவிகளுக்கும் தனி இடம் உண்டு.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போகும் இந்தப் பாடல் வெளியான ஆண்டு 1979. கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், இப்போது கேட்டால்கூட இந்தப் பாடல் அத்தனை இனிமையானதாக இருப்பதற்கு காரணம் இளையராஜாதான். இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் பலரது ஆல்டைம் ஃபேவரைட் பட்டியலில் இடம்பெற்றுள்ள திரைப்படம்.
அந்தப் படத்தில் இடம்பெற்ற 'அழகிய கண்ணே உறவுகள் நீயே' பாடல் இன்றளவும் அனைவராலும் ரசித்து உருகும் பாடலாகவே இருந்து வருகிறது. பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுத, எஸ்.ஜானகி பாடியிருப்பார். மான்டேஜ் ஷாட்களாக வரும் பாடலில் இரண்டு குழந்தைகளின் தாயானவளின் ஆழ்மனது துயரங்களை, வலிகளை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் மகேந்திரன்.
எதிர்மறை எண்ணங்கொண்ட கணவனை தன் குழந்தைகளுக்காக சகித்துக் கொண்டு வாழும் மனைவியின் ஆழ்மனது துயரங்கள், ஏக்கங்கள், வலி, வேதனையென அனைத்தையும்,
"மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது" என்ற வரிகளில் சொல்லியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்.
இளையராஜாவின் உளவியல் மருத்துவ சிகிச்சையில், புல்லாங்குழலும், வயலின்களும் தவறாது இடம்பெறுபவை. இந்தப் பாடலில், புல்லாங்குழல் இசையால் மனதை வருடியிருப்பார். அதுவும் குறிப்பாக மூன்றாவது சரணத்தின் இடையிசையில் "ரிக்கார்டர்" என்ற குழலிசைக் கருவியை பயன்படுத்தியிருப்பார். அந்த இசை நம் மனதுக்கு அத்தனை ஆறுதலாக இருக்கும். இந்தப் படம் வந்தபோது, இளையராஜாவிடம் சுதாகர் என்பவர் குழலிசைக் கலைஞராக இருந்தார்.
மகிழ்ச்சியையும், துக்கத்தையும் எமோஜி பொம்மைகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்ளும் இன்றைய காலக்கட்டத்தில் மனித உணர்வுகளுக்கான மாண்பை கடத்தும் இதுபோன்ற பாடல்களைத் தந்துள்ள இளையராஜாவின் இசையிரவு நாளும் நீளும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT