Published : 26 Sep 2022 02:14 PM
Last Updated : 26 Sep 2022 02:14 PM

‘அஜித், விஜய் இருவரையும் வைத்து படம் இயக்கத் தயார்’ - வெங்கட் பிரபு

'அஜித், விஜய் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து இயக்கத் தயார்' என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் குறும்பட போட்டிகளுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடுவர்களாக இயக்குநர் வஸந்த், இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கினார்கள். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெங்கட்பிரபு, ''எனக்கு தெலுங்கு தெரியாது. ஆனால், தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

தமிழ் நடிகர்கள் பலரும் அந்த படத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கில் இயக்கியதில் பல அனுபவங்கள் கிடைத்தது. சினிமாவிற்கு மொழி முக்கியமல்ல என்பதற்கு முருகதாஸ் மற்றும் பிரபுதேவா மாஸ்டர் சிறந்த உதாரணம். இந்தியே தெரியாமல் படம் எடுத்து வெற்றி பெற்றார்கள். ஆங்கிலம் சரியாக தெரியாமல் பாலிவுட் படம் வரை செல்கிறார்கள். ஆகவே, சினிமாவிற்கு மொழி தடையில்லை.

குறும்படம் இயக்குவது மிகவும் கஷ்டம் என்று கூறினார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன். என்னைப் போன்ற இயக்குநர்களுக்கு குறும்படம் இயக்குவது கஷ்டம் தான். ஏனென்றால், 3 நிமிடங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டும்.

அஜித், விஜய் ஒப்புக் கொண்டால் இருவரையும் வைத்து இயக்குவதற்கு தயாராக உள்ளேன். சிம்புவை உயிரோட்டமுள்ள கதாபாத்திரமாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் காட்டியிருப்பார். அப்படத்தை பார்த்து விட்டு சிம்புவை பாராட்டினேன். நாம் எப்போது அடுத்தப் படம் எடுக்க போகிறோம் என்று கேட்டார். அதற்காக சூழல் வரும்போது நிச்சயம் எடுப்போம் என்று கூறினேன். மேலும், எனக்கு மட்டுமில்லை எல்லா இயக்குநர்களுக்குமே ஒரு படத்தைவிட அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு இயக்குநருக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. 82 வயதிலும் படம் இயக்குகிறார்கள்.

கோவா படத்திற்கு ஹாலிடே என்று டேக் வைத்தோம். மங்காத்தா படத்திற்கு கேம் என்று வைத்தோம். அப்படியே மாநாடு படத்திற்கு பாலிட்டிக்ஸ் என்று வைத்தோம். எல்லா படங்களுக்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மற்றும் டேக் வைப்பது வெங்கட்பிரபுவின் பாணி என்றானதால். அதைப் பின்பற்றி வருகிறேன்.

திரையங்கிற்கும், ஓடிடிக்கும் போட்டியே கிடையாது. திரையரங்கம் செயல்படாத கரோனா காலகட்டத்தில் பணத்தை செலவழித்து வட்டி அதிகமாகிக் கொண்டே இருக்கும்போது ஓடிடி-யில் வெளியிட்டோம். ஆகையால், இதுவும் பொழுதுபோக்கே தவிர போட்டி கிடையாது.

விக்ரம் படம் விரும்பி பார்த்தேன். ஓடிடி-யில் வெளியான சுழல் தொடர்கதையை விரும்பி பார்த்தேன். சமீபத்தில் பிடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவை பிடித்திருந்தது. அதேபோல், 'திருச்சிற்றம்பலம்' நன்றாக இருந்தது. நித்யாமேனன் சிறப்பாக நடித்திருந்தார்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x