Published : 25 Sep 2022 07:43 PM
Last Updated : 25 Sep 2022 07:43 PM
'கவுசல்யா வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தால் அதற்கு நான் துணை நிற்பேன்'' என்று நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.
கோவையை அடுத்த வெள்ளலூரில் உடுமலைப்பேட்டை ஆணவப் படுகொலையில் பாதிக்கப்பட்ட கவுசல்யா அழகு நிலையத்தை இன்று திறந்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகை பார்வதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை பார்வதி, "கவுசல்யா போன்ற பெண்களுக்காக நான் இங்கே வந்திருக்கிறேன். காதலிப்பதற்கும் அவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கும் பெண்களுக்கு முழு உரிமை உண்டு. பெண்களின் உரிமையைச் சிலர் திருட பார்க்கிறார்கள்.
கவுசல்யா அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்து, நிஜ வாழ்க்கை ஹீரோவாக திகழ்கிறார். அவரது வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தால் அதற்கு நான் துணை நிற்பேன். ஆணவ படுகொலைகளுக்கு எதிராக வெளிவரும் படங்கள் வரவேற்கத்தக்கன. கவுகசல்யா வாழ்க்கை, பயணம், போராட்டங்கள் உள்ளிட்டவை குறித்து செய்திகள் படிப்பதன் மூலமாக அறிந்து கொண்டேன். வழக்கமாக இதுபோன்ற கடை திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு நான் செல்வதில்லை. ஆனால் இங்கு ஒரு புது வாழ்க்கையை துவங்குகிறார்கள். அதனைக் கொண்டாட வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
தமிழில் ஏன் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''காதல் கதைகளில் நடிக்க மட்டுமே அழைப்புகள் வருகிறது. திரும்பத்திரும்ப நான் காதலிக்கும் படியான பெண்கள் கேரக்டர்கள் கிடைத்தது. வித்தியாசமான கேரக்டர் எனக்கு கிடைக்கவில்லை. அதனால் மக்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் ப்ரேக் எடுத்துக் கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
கவுசல்யா வாழ்க்கையை படமாக்கினால் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “நான் நடிப்பேனா எனத் தெரியவில்லை. அப்படி ஒரு ப்ராஜ்க்ட் இருந்தால் என்னால் முடிந்த சப்போர்ட் பண்ணுவேன்” எனப் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT