Published : 25 Sep 2022 05:52 AM
Last Updated : 25 Sep 2022 05:52 AM

ட்ரிகர்: திரை விமர்சனம்

காவலர்களைக் கண்காணிக்கும் அண்டர்கவர் குழுவில் இணைகிறார், பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி பிரபாகரன் (அதர்வா). குழந்தை கடத்தல், போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களைச் செய்யும் மைக்கேல்(ராகுல் தேவ் ஷெட்டி) அவர் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். இவரால் பாதிக்கப்பட்டவர்தான், பிரபாகரனின் தந்தை சத்தியமூர்த்தி (அருண் பாண்டியன்). தனக்கு வேண்டிய குழந்தையை மைக்கேல் குழு கடத்திவிட, அவர்கள் திட்டத்தை முறியடிக்கக் களமிறங்குகிறார் பிரபாகரன். பிரபாகரனை குடும்பத்துடன் அழிக்க, களமிறங்குகிறார் மைக்கேல். யார் வெல்கிறார்கள் என்பது மீதி கதை.

காவல்துறை, குற்ற வலைபின்னல் மோதலை மையமாகக் கொண்ட வழக்கமான ஆக்‌ஷன் கதைக்கு, திரைக்கதையில் புதுமை சேர்த்திருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன். அது படத்தின் பெரும்பகுதியை பரபரப்புடன் நகர்த்த கைகொடுத்திருக்கிறது. அண்டர்கவர் அதிகாரியாக தன் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத சூழலில் இருக்கும் நாயகன், சிறையில் இருந்தபடி தன் அடையாளத்தை மறைத்து குற்றங்கள் நிகழ்த்தும் வில்லன், இருவருமே புத்திசாலிகளாகவும் வலிமையானவர்களாவும் இருப்பது ஆக்‌ஷன் திரைக்கதையின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றுகின்றன.

ஆனால், படத்தில் இருக்கும் தாறுமாறான தர்க்கப் பிழைகள் முழுமையாக ரசிக்கத் தடையாக அமைகின்றன. வில்லன்களின் திட்டங்கள் அனைத்தையும் ஹேக்கிங் மூலமாகவே நாயகன் தெரிந்துகொள்வதால் பல காட்சிகள், நம்பகத் தன்மையும் சுவாரசியமும் இல்லாமல் கடக்கின்றன.

அருண் பாண்டியனின் பின்னணி, விட்டு விட்டு சொல்லப்படுவதால் குழப்பம். இதனால் படத்தின் சென்டிமென்ட் காட்சிகளும் உரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

துடிப்புமிக்க இளம் காவல்துறை அதிகாரியாக அதர்வா, வழக்கம்போல் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். நாயகியாக தான்யா ரவிச்சந்திரனுக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவராக அருண் பாண்டியன் கவனம் ஈர்க்கிறார். கெட்டப், உடல்மொழி, நடிப்பு என அனைத்திலும் மிரட்டியிருக்கிறார் ராகுல் தேவ் ஷெட்டி.

அண்டர்கவர் காவல் அதிகாரியாக சின்னி ஜெயந்த், தன் நடிப்பின் மாறுபட்ட பரிமாணத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜிப்ரானின் பின்னணிஇசை திரைக்கதைக்குப் பரபரப்புக் கூட்டுகிறது.

ஒட்டாத சென்டிமென்ட் காட்சிகள் உட்பட சில குறைகள் இருந்தாலும் பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லராக இந்த ‘ட்ரிகர்’ சரியாகவே அழுத்தப்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x