Published : 19 Sep 2022 06:45 PM
Last Updated : 19 Sep 2022 06:45 PM
கல்கியின் பொன்னியன் செல்வனை இதுநாள்வரை மனத்திரையில் பார்த்தே கிறங்கிக்கிடக்கும் தமிழ்ச் சமூகம், விரைவில் வெள்ளித்திரையில் பார்த்து மயங்கக் காத்திருக்கிறது. இந்தியாவின் முக்கிய இயக்குநரான மணிரத்னத்தின் இயக்கத்தில், 'பொன்னியின் செல்வன் - பாகம் 1' வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் பாடல்களும், படத்தில் நடித்தவர்களின் அனுபவப் பகிர்வுகளும் இணையத்தையும், சமூக ஊடகங்களையும் முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. கடந்த 30 ஆண்டு காலமாக மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து என்ற மெகா கூட்டணி, இந்த முறை சற்று தடம் மாறியிருக்கிறது. இந்தப் பாடத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். இதனால், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்தான தேடல்களும் எதிர்பார்ப்புகளும் திரை ரசிகர்கள் மட்டுமின்றி இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல தரப்பிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகியுள்ள, 'பொன்னியின் செல்வம்-பாகம் 1' படத்தின் பாடல்களுக்கு,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் முதல் பாடலாக வெளிவந்த 'பொன்னி நதி பாக்கணுமே' பாடல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. "தீயாரி எசமாரி" கோரஸ் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தீயாய் பரவி கிடக்கிறது. இருந்தபோதும், இப்படத்தில் பாடல்களில் இடம்பெற்றுள்ள நல்ல தமிழ் சொற்கள் முறையாக உச்சரிக்கப்படவில்லை என்று குறைபட்டுக் கொள்பவர்களையும் காணமுடிகிறது.
இந்தப் பாடல் குறித்து பேசியிருக்கும் எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன், "இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து படத்தில் மொத்தம் 8 பாடல்களை எழுதியிருக்கிறேன். பொன்னி நதி பாடல், இந்தப் படத்திற்காக நான்காவதாக எழுதிய பாடல். இந்தப் பாடலை எழுத 30 நாட்கள் எடுத்துக்கொண்டது.
‘பொன்னி நதி’ - இந்த முதல் வார்த்தைக்காக மட்டும் ஒரு நூறு வார்த்தைகளுக்கு மேல் எழுதியிருந்தேன். அதேபோல், ‘செக்க செகப்பி’, ‘ரெட்ட சுழச்சி’ வார்த்தைகள் எல்லாம் ஆன் ஸ்பாட்ல எழுதிய வார்த்தைகள். இந்தப் படத்தின் பாடல்களுக்காக சங்க இலக்கிய காலம், சிக்கி முக்கி காலம், காப்பியக் காலம் என்று வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தப்பட்ட அழகிய சொற்கள் முதன்முதலாக சினிமா பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார்.
அதேபோல், இந்தப் பாடல் பதிவு முடிவுற்று பல நாட்களுக்குப் பின்னர் "காவிரியால் நீர்மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான்" தொகையறா சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கும்
"நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிற்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிற்கும்
பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிற்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிற்கும்"
இந்த வரிகள் சோழ சாம்ராஜ்ஜியத்தின் சமூக, பொருளாதார, கலை, இலக்கிய, வீரத்தை பறைசாற்றும் வகையில் எழுதியிருப்பது அனைவரையும் ஈர்த்திருக்கிறது.
தஞ்சைப் பற்றிய வந்தியத்தேவனின் பேராவலை வெளிப்படுத்தும் சொல்லாக "பொன்னி நதி" என்ற சொல் சரியாக இருக்கும் என்று எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் கணித்திருக்கிறார். காவிரி ஆற்றை "பொன்னி நதி" என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சோழ அரசுக்கு ஆபத்து ஏற்படும் நேரங்களில் எல்லாம், ராஜ விசுவாசிகளான பலர் தங்கள் இன்னுயிரை பலிகொடுக்கும் வழக்கம் 'நவகண்டம்' என்ற பெயரில் நடைமுறையில் இருந்துள்ளது. தங்களை பலிகொடுத்துக் கொள்ளும் அந்த ராஜ விசுவாசிகளின் நவகண்ட குறிப்புகளில் "பொன்னி மகன் பிளைக்க" என்ற வாசகம் இடம்பெற்றிருந்து கல்வெட்டுச் சான்றுகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
5 நிமிடம் வரக்கூடிய பாடலில் காவிரி பாய்ந்து வளம் சேர்த்த சோழ தேசத்தின் அழகை விவரிப்பது என்பது கடுகை துளைத்து கடலைப் புகுத்துவதற்கு இணையான பணிதான். என்றாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், ரவி வர்மாவின் ஒளிப்பதிவும், மணிரத்னத்தின் உயிரோட்டமான காட்சி அமைப்புகளும், நிச்சயம் இளங்கோ கிருஷ்ணனின் சொற்களுக்கு வளம் சேர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேது.
இணைப்பு: Ponni Nadhi - Lyric Video
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT