Last Updated : 08 Sep, 2022 04:16 PM

 

Published : 08 Sep 2022 04:16 PM
Last Updated : 08 Sep 2022 04:16 PM

கேப்டன் Review: ஏலியன்கள் தாக்கிய ஆர்யாவே தப்பித்துவிட்டார். ஆனால்..?

ஏலியன்களுக்கும் மனிதர்களுக்குமான போரில் இறுதியில் வென்றது யார் என்பதுதான் 'கேப்டன்'. செக்டார் 42 என்ற மனித நடமாட்டமே இல்லாத வனப்பகுதியை மனிதர்கள் உலவும் பகுதியாக மாற்ற நினைக்கிறது அரசு. அதற்காக அனுப்பப்பட்ட ராணுவக் குழு ஒன்று மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அதையடுத்து வெற்றிச்செல்வன் (ஆர்யா) தலைமையிலான மற்றொரு குழுவும் அப்பகுதிக்கு அனுப்பபடுகிறார்கள். அங்கே ஏலியன்களின் ஆதிக்கம் இருப்பதை அந்தக் குழு உறுதி செய்கிறது. இறுதியில் அப்பகுதியில் உள்ள ஏலியன்கள் கொல்லப்பட்டதா, வெற்றிச்செல்வன் தலைமையிலான குழுவுக்கு கொடுக்கப்பட்ட மிஷன் வெற்றியடைந்ததா என்பது தான் படத்தின் கதை.

கம்பீரமான உடல், மிகையில்லாத நடிப்பு, குழுவை விட்டுகொடுக்காத பண்பு என வழக்கமான தன்னுடைய நடிப்பை இந்தப் படத்திலும் பதிய வைக்கிறார் ஆர்யா. இருந்தாலும், 'சார்பட்டா பர்ம்பரை' படத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்த ஆர்யாவுக்கு இந்தப் படத்தில் அப்படியான நடிப்புக்கு தீனிப்போடும் காட்சிகள் பெரிய அளவில் இல்லை. ஐஸ்யவர்யா லக்‌ஷ்மி பெயரளவில் வந்து செல்கிறார். வெறும் காதலுக்காக மட்டுமே பயன்படுத்தபடும் ஒரு கதாபாத்திரம்.

ஆர்யா மீது அவருக்கு காதல் வர சொல்லும் காரணம் படுமோசம். விஞ்ஞானி கதாபாத்திரத்தில் சிம்ரன். அவரது கதாபாத்திரத்தை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம். பின்புலம் சரியாக இல்லாமல், அந்தக் கதாபாத்திரம் குழப்பமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி தன்னுடைய நடிப்பில் கவனம் ஈர்க்கிறார் சிம்ரன். இவர்களை தவிர்த்துவிட்டு காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல்நாத், ஆதித்யா மேனன் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

'மிருதன்', 'டிக்டிக்டிக்', 'டெடி' படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். 'மிருதன்' படத்தின் மூலம் ஜாம்பிஸை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தவர். தற்போது 'கேப்டன்' படம் மூலம் ஏலியன்ஸை அழைத்து வந்துள்ளார். புது முயற்சி வரவேற்க வேண்டியது. ஆனால், ஹாலிவுட்டில் அடித்து துவைத்து காய வைத்த கதையை எடுத்து அயன் செய்து நமக்கு கொடுக்க முயன்றிருக்கிறார்.

இருப்பினும் அந்த அயர்னிங்கில் பல சுருங்கங்கள் வெளிப்படையாக தெரிகின்றன. இந்தச் சூழலுக்கு தகுந்தாற்போல படத்தை எளிமையாக்க முயன்றதெல்லாம் சரி. ஆனால், அந்த எளிமையை விஎஃப்எக்ஸில் காட்டியதுதான் பிரச்சினை. மோசமான விஎஃப்எக்ஸ் காட்சிகள் படத்திற்கான ஆன்மாவை குலைப்பதோடு பார்வையாளர்களுக்கு சுத்தமாக ஒட்டவேயில்லை. படத்தின் உயிரே ஏலியன்ஸும், அதையொட்டி நிகழும் கதையும் தான் எனும்போது, அதை சீர்குலைத்திருப்பது பெரிய மைனஸ்.

அத்தனை மோசமான காட்டுப் பகுதியில் ஆர்யா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவே திரும்பத் திரும்ப பயணிப்பது, இந்திய ஆர்மியில் ராணுவ வீரர்களுக்கு பஞ்சமா என்ற கேள்வியை எழுப்புகிறது. படத்தில் சுவாரஸ்யம் என்றால், அது அந்த எலியன் மட்டும்தான். அதைத்தாண்டி காட்சியமைப்பில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. நாயகனுக்கும் வேற்று கிரக உயிரனத்திற்கும் இடையிலான காட்சிகள் விறுவிறுப்பை கூட்ட தவறிவிட்டன.

அதேபோல, நாயகனின் குழு எதிர்கொள்ளும் சவால்கள் பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அந்த வேற்று கிரக உயிரினம் இங்கே வந்ததற்கான காரணம் சொல்லப்படாதது, குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் அதுவரை பில்டப் கொடுத்திருந்த வித்தியாசமான உயிரினம் காட்டும்போது ஏமாற்றம் மேலொங்குவது, அதைத் தொடர்ந்து வரும் மோசமான விஎஃப்க்ஸ் கொண்ட சண்டைக்காட்சிகள் பெரும் பலவீனம்.

தேவையில்லாத காதல் காட்சி போல, பாடல்களும் தேவையில்லாமல் திணிக்கப்பட்டது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. டி.இமான் பின்னணி இசை இன்னும் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம் என தோன்ற வைக்கிறது. யுவா ஒளிப்பதிவும், 1 மணி நேரம் 50 நிமிடத்துக்குள் படத்தை கட் செய்து கொடுத்த பிரதீப் ராகவ்வின் பணி படத்துக்கு பலம்.

மொத்தத்தில் ‘கேப்டன்’ தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி என்றாலும், எதிர்பார்த்து வரும் பார்வையாளர்களுக்கு விறுவிறுப்போ சுவாரஸ்யமோ இல்லாமல் வெறும் வேற்று கிரக உயிரினத்தை பார்க்க வேண்டுமென்றால் படத்திற்கு செல்லலாம். இன்னும் சொல்லப் போனால் படத்தில் ஏலியன் தாக்கிய ஆர்யாவே உயிர் பிழைத்துவிடுகிறார். ஆனால் ஆடியன்ஸ்?!

விமர்சனத்தை வீடியோ வடிவில் காண :

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon