Published : 04 Sep 2022 09:51 AM
Last Updated : 04 Sep 2022 09:51 AM
கருத்தியலுடன் கூடிய வணிக சினிமாவை திரையில் பரிமாறுவதில் வல்லவர் வெற்றிமாறன். யதார்த்தத்துக்கு நெருக்குமாக எளிய மக்களின் பின்னணியை காட்சிப்படுத்திய படைப்பாளி குறித்து பார்ப்போம்.
எளிய மக்களின் வாழ்க்கையையும் அதிலுள்ள சிக்கல்களையும் அசலாக வார்த்தெடுத்து பிரதிபலிப்பது ஒரு படைப்பாளியின் சமூக பொறுப்பு. அந்த பொறுப்புடன் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளருக்கு வணிகரீதியாக பொருளீட்டி கொடுக்க வேண்டிய கடமையும் படைப்பாளிக்கு தொற்றிக்கொள்கிறது. இதனை சரியாக கையாளும் இயக்குநர்கள் சமகாலத்திலும், காலம் கடந்தும், அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் ஜனரஞ்சக சினிமா ரசிகர்கள் மனதிலும் தேங்கி நிற்கிறார்கள். அப்படியான படைப்பாளிகள் வரிசையில் வெற்றிமாறனை உங்களால் தவிர்த்து விட முடியாது. அவரது படங்களை எடுத்துக்கொண்டால் அவை கன்டென்ட் + வணிகத்தை ஈடுக்கட்டும் சமனில் பயணிக்க கூடியவை.
அப்படி பார்க்கும்போது வெற்றிமாறனின் முதல் படமான 'பொல்லாதவன்' படத்தில் காதல் இருக்கும்; குத்துப் பாடல் இருக்கும்; ரொமான்ஸ், காமெடி என வெகுஜன மக்களுக்கான தீனி இருக்கும். அதேசமயம் அதன் அடுக்குகளில் நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் சேர்த்தே பிரதிபலிக்கப்பட்டிருக்கும். அந்த சமயம் 'பல்சர்' வண்டியை வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு மிடிக்கிள் க்ளாஸ் இளைஞனின் பெருங்கனவு. அதற்கான போராட்டம், அது பறிக்கப்போடும்போது ஏற்படும் வலி, இதனூடாக நகர்ந்து செல்லும் அப்பா - மகன் உறவு என யதார்த்ததுக்கு நெருக்கமான சாமானியர்களுக்கான சினிமாவாக 'பொல்லாதவன்' திரையில் விரிந்திருக்கும்.
'ஆடுகளம்' படத்தை எடுத்துக்கொண்டாலும் துறுத்தாத மதுரை ஸ்லாங்கில் அந்த மண்ணுக்குண்டான வாசத்தின் புழுதியை பறக்க விட்டு சேவல்களுக்கு நிகழும் மோதல்களில் மனித மோதல்களும், உணர்வுச்சிக்கல்களும் தத்ரூபமாக்கப்பட்டிருக்கும். இலக்கிய படைப்புக்கு நிகரான அதன் காட்சிமொழியும், திரைக்கதை சுவாரஸ்யமும் வணிக சினிமா ஆடுகளத்தில் களமாடி வெற்றி கண்டது. 'வெற்றி மாறன்' எனும் படைப்பாளிக்கு இரண்டு தேசிய விருதுகளுடன் தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்றுகொடுக்க காரணமாயிருந்த களம் அது.
வெற்றிமாறனின் சிறப்பே போகிற போக்கில் படங்களை எடுத்து குவிக்காமல் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் படத்துக்காக உழைத்து அதனை சிற்பமாக்கி செதுக்குவதுதான். 2011-ம் ஆண்டு 'ஆடுகளம்' படத்திற்கு பிறகு 2016 'விசாரணை'. உண்மையில் 'விசாரணை' படத்தில் பார்ப்பதற்கு மன திடகாத்திரம் தேவைப்படுகிறது. மளிகை கடையில் வேலை பார்க்கும் எளிய பின்னணியைக் கொண்ட இளைஞர்களின் வாழ்க்கையை சிதைக்கும் அதிகார அமைப்பின் கதை. ரத்தமும் சதையுமான கதையில் சமரசம் இருக்காது. அது நேரடியாக பார்வையாளர்களுடன் உரையாடிக்கொண்டே அதிகார அமைப்பின் அடுக்குகளை கேள்வி எழுப்பும். சிதைக்கப்படும் எளிய மக்களின் வாழ்வாதாரங்களை சமரசமில்லாத காட்சிமொழியால் தீட்டியிருப்பார் வெற்றிமாறன். அதிகார அமைப்பை 'விசாரணை'க்குட்படுத்தும் இந்தப் படம் தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்பு.
‘வடசென்னை’யில் நிலவும் ரவுடியிசம், அந்த ரவுடியிசம் உருவாவதன் பின்னால் இருக்கும் சமூக, அரசியல், பொருளாதார காரணிகள், அவற்றால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வில் நிகழும் தாக்கங்கள், நில அரசியல் என வட சென்னையின் எல்லைகளை எட்டியிருப்பார். குறிப்பாக சிறையில் சரிந்து விழும் சாமியானா கூரைக்குக் கீழே நடக்கும் கும்பல் மோதல் காட்சி அட்டகாசமான திரைமொழியாக பாராட்டப்பட்டது. சிக்கலான திரைக்கதையை அடுக்கிய விதத்தில் மிரட்டியிருப்பார். இப்போது முழுமையான ஓர் இயக்குநராக தன்னை பரிணமித்திருந்தார் வெற்றிமாறன்.
'படிப்ப யாராலும் எடுத்துக்க முடியாது. படிச்சிட்டு அதிகாரத்துல போய் உட்காரு. அதிகாரத்துக்கு வந்ததுக்கு அப்றம் அவங்க உனக்கு பண்ணத நீ திருப்பி அவங்களுக்கு பண்ணாத' என்ற முதிர்ச்சியே 'அசுரன்' படத்தின் ஆன்மா. ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்தும் இடம் அது. எதிர்கோஷ்டி மீது நமக்கே அவ்வளவு கோபம் இருக்கும்போது, அந்த கோபத்தின் வடிகாலை கல்விக்கான தளமாக மாற்றியிருந்தது போக்கு தமிழ் சினிமாவின் முக்கியமான க்ளைமாக்ஸ் முகமாக அறியப்பட்டது.
வெகுஜன சினிமாவாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்த அந்தப் படம் மூலமாக அந்த அழுத்தமான கருத்தும் சென்றடைந்தது. கன்டென்ட் + கமர்ஷியல் படங்களுக்கான வலிமையான புள்ளி இது. மாற்று சினிமா படங்கள் அதற்கான பார்வையாளர்களுடன் சுருங்கிவிடும். வெறும் வணிகரீதியான கமர்ஷியல் படங்கள் காதல், 4 சண்டை, 2 ரொமான்ஸ் என வற்றிவிடும். இவை இரண்டையும் சேர்த்து சொல்ல வரும் வலிமையான கருத்தை திரையில் பரிமாறினால் அது வணிக ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் மிகப்பெரிய டார்கெட் ஆடியன்ஸை சென்று சேரும் என்பதில் மாற்றமில்லை.
அப்படியான பேலன்சிங் இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வரும் வெற்றிமாறனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT