Published : 23 Aug 2022 01:34 PM
Last Updated : 23 Aug 2022 01:34 PM
'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் மூலம் இயக்குநர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் மீண்டும் புதிய ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நாயகி துஷாரா, '''நட்சத்திரம் நகர்கிறது' நான் மிகவும் நேசித்து நடித்த படம், மாரியம்மாவாக எனக்கு லைஃப் தந்தவர் ரஞ்சித். ரெனே மூலம் அது தொடருமென நம்புகிறேன். இந்தப்படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம்'' என்றார்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசுகையில், ''என்னால் இதை நம்ப முடியவில்லை. விஸ்காம் படிக்கும் போது மெட்ராஸ் படம் பார்த்துட்டு ரஞ்சித் நம்பர் கண்டுபிடித்து பேசினேன். அப்போது அவருக்கு நான் யார் என்று கூட தெரியாது. ஆனால் நீண்ட நேரம் படம் குறித்து அவர் பேசினார். அவர் படத்தில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் ரஞ்சித்துக்கு நன்றி. படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் இனியன். இந்த கதாப்பாத்திரம் என்னோட நிஜ வாழ்க்கையைப்போலத்தான். எல்லோருக்கும் பிடிக்கும்'' என்றார்.
இசையமைப்பாளர் தென்மா பேசுகையில், ''சுயாதீன இசையமைப்பில் 15 வருடங்களாக இருக்கிறேன். பா.ரஞ்சித்தை சந்தித்த பிறகு வாழ்க்கை மாறிவிட்டது. இது என்னுடைய நான்காவது படம். ஆனால் ரஞ்சித் எனக்கு பெரிய அறிமுகம் கொடுத்து விட்டார். அவர் நிறைய பேருக்கு அறிமுகம் தந்துள்ளார். பாடகர் அறிவு மெயின் ஸ்ட்ரீமில் கொண்டாடப்படுவது அவரால் தான். என் இசையே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அது எல்லோருக்கும் பிடிக்காது. ஆனால் ரஞ்சித் தான் ஊக்கப்படுத்தினார். நிறைய புதுமுகங்கள் இதில் உழைத்துள்ளார்கள்'' என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ''அட்டகத்தி' பார்த்தபோது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக தெரிந்தது. அதே போல் தான் இந்தப் பட டிரெய்லர் பார்க்கும் போதும் இருந்தது. இதுவரை பேசத் தயங்கும் அல்லது பேச வேண்டாம் என நினைக்கும் உறவுகள் குறித்த விவாதத்தை, தமிழ் சினிமாவில் நிகழ்த்தும் படமாக இது இருக்கும். இது முக்கியமானதாக நான் கருதுகிறேன். ரஞ்சித் மீண்டும் புது ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார். அவரது முன்னெடுப்புக்கு வாழ்த்துகள்'' என்றார்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ''2007 காலகட்டத்திலிருந்து ரஞ்சித்தை தெரியும். ஒரு டாக்குமெண்ட்ரிக்கு ஸ்டோரிபோர்ட் செய்யத்தான் வந்தார். நான் படம் எடுத்த போது நானே அவரை அழைத்தேன். அவர் லிங்குசாமியிடம் தான் சேர்த்து விட சொன்னார். பாவம் என்னிடம் மாட்டிக்கொண்டார். ரஞ்சித் படங்களை பார்க்கிற போது பிரமிப்பாக இருக்கிறது. அவருக்குள் இவ்வளவு சிந்தனைகள் இத்தனை விசயங்கள், குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார். அவரது ஒவ்வொரு படமும் ஆச்சர்யம் தரும். இந்தப்பட ட்ரெய்லரே மிரட்டிவிட்டது. ஹாலிவுட் படம் போல் உள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT