Published : 23 Aug 2022 12:04 AM
Last Updated : 23 Aug 2022 12:04 AM
"எண்ணி ஏழு நாள்" என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தநிலையில் லிங்குசாமி தரப்பில், இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னைப் பற்றிய செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல்ஸ் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கில் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி:
கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், "எண்ணி ஏழு நாள்" என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் நிதி பெற்றிருந்தது.
இந்த கடன்தொகையை திரும்பச் செலுத்தவில்லை. இதனையடுத்து பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, இயக்குநர் லிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்தன. இதையடுத்து, இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT