Published : 20 Aug 2022 07:23 AM
Last Updated : 20 Aug 2022 07:23 AM
உணவு டெலிவரி செய்யும் திருச்சிற்றம்பலம் என்கிற திருவை (தனுஷ்) பலம் என்று அழைக்கிறார்கள் அனைவரும். எந்த லட்சியமும் இல்லாமல் இருக்கும் அவர் வாழ்க்கை, அவர் பெயரையே கொண்ட தாத்தா சீனியர் திருச்சிற்றம்பலம் (பாரதிராஜா), தனக்குப் பிடிக்காத போலீஸ் அதிகாரி அப்பா நீலகண்டன் (பிரகாஷ்ராஜ்), பால்யத் தோழி ஷோபனா (நித்யா மேனன்) ஆகியோருடன் சென்று கொண்டிருக்கிறது, இயல்பாக. இதற்கிடையே அவருக்கு இரண்டு பெண்கள் மீது காதல் வருகிறது. அவை தோல்வியில் முடிய, அவர் அடுத்து என்ன செய்கிறார், அவருக்குப் பிடிக்காத அப்பா எப்படி பிடித்தவராகிறார் என்பதுதான் படம்.
ஒரு எளிய கதையை, சுவாரஸ்யமான திரைக்கதையால் வலிமையானதாக மாற்ற முடியும் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறது ’திருச்சிற்றம்பலம்’. யூகிக்கக் கூடிய முடிவுதான் என்றாலும் இரண்டரை மணி நேரம் அமர வைத்துவிடுகிற இயக்குநர் மித்ரன் ஜவஹரின் ஃபிரெஷ்சான யோசனைகளுக்காகவும் திறமையான நடிகர்களைச் சரியாகப் பயன்படுத்தி இருப்பதற்காகவும் வாழ்த்தலாம் அவரை. தனுஷின் பயம் போக்க வைக்கப்பட்டிருக்கிற கிளைக்கதை கூட படத்துக்கு வலு சேர்ப்பது அழகு.
ஏற்கனவே சில படங்களில் நடித்திருக்கும் அதே கேரக்டரைதான் இதிலும் செய்திருக்கிறார் தனுஷ். தாத்தாவையும் அவர் ஆலோசனையையும் கிண்டலடித்துக் கொண்டே தோழமையாக இருப்பது, தோழியுடன் ஜாலி கேலி, கோபக்கார அப்பாவுடன் மோதல், நிராகரிக்கப்படும் காதல் ஏமாற்றத் தவிப்பு என, ஹீரோயிசம் இல்லாத அசல் பக்கத்துவீட்டு பையனை அப்படியே முன் நிறுத்துகிறார். பல இடங்களில் சிறு அசைவுகளின் மூலம் தான் தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார்.
படத்தை மொத்தமாகத் தாங்கிப்பிடிப்பது, பால்ய தோழி நித்யா மேனன்தான். அவர் வரும் காட்சிகள் அழகாகவே மாறிவிடுகிறது. தனுஷுக்கும் அவருக்குமான நட்பில், சினிமாத்தனம் இல்லாத யதார்த்தம். மனதில் ஆசையை வைத்துக்கொண்டு அதை வெளிக்காட்டாமல் அவர் செய்யும் செல்ல சேட்டைகளும் சில்லறை சிரிப்புகளும் ரசிக்க வைக்கின்றன என்றால், எப்போதும் உடனிருக்கும் தோழனை பிரிந்து அவர் செல்லும்போது கலங்க வைக்கிறார்.
பெண்கள் இல்லாத நிலையில், வேலைகளைப் பிரித்துக்கொள்ளும் ஆண்கள் வீட்டின், ஓய்வுபெற்ற, மகிழ்ச்சியான, தாத்தாவை ஞாபகப்படுத்துகிறார் பாரதிராஜா. மகனுக்கும் பேரனுக்கும் இடையில் அல்லாடும் அவரின் உடல் மொழியும் பேரனுக்கு வாழ்வைப் புரிய வைக்கும் அவர் பாவனைகளும் சிறப்பு.
கோபக்கார அப்பா பிரகாஷ் ராஜ், தனது இயலாமையை மிகைப்படுத்த முயற்சிக்காமல் மகனிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். ’காதலா, நீ என்னை தப்பா புரிஞ்சிட்டிருக்கே’ என்கிற ஸ்கூல் ’கிரஷ்’ ராஷி கண்ணாவுக்கும், ’நாம ஏன் டச்சுல இருக்கணும்?’ என்று கேட்கிற கிராமத்து பிரியா பவானி சங்கருக்கும் அதிக வேலையில்லை என்றாலும் மனதில் நிற்கிறார்கள்.
அனிருத் இசையில், ’தாய்க்கிழவி’ ஆட்டம்போட வைக்கிறது. ’மேகம் கருக்காதா பெண்ணேபெண்ணே’ பாடலும் அதற்கான நடனமும் மனதை வருடுகிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கதையை அழகாக இழுத்துச் செல்கிறது.
அப்பாவுக்கும் மகனுக்குமான பத்துவருட பகைக்கான காரணம் வலுவானதாக இல்லை. தாத்தாவும் பேரனும் மது அருந்தும் காட்சிகள் தேவையில்லாத திணிப்பு என்பது உட்பட சில இடங்களில் மிஸ்சான கன்டினியூட்டியையும் சரி செய்திருந்தால், இந்த ஃபீல்குட் ’பலம்’, இன்னும் பலமாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...