Published : 08 Aug 2022 12:06 PM
Last Updated : 08 Aug 2022 12:06 PM

அடிபொலி ஃபஹத் - ‘கும்பளாங்கி நைட்ஸ்’ காட்சி அனுபவத்துடன் ஒரு பிறந்தநாள் வாழ்த்து

சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்திற்குள் தன்னை முழுமையாக தகவமைத்துக்கொண்டு, அதற்காக தன்னை ஒப்புக்கொடுப்பவனே உண்மையாள திரைக் கலைஞனாக உருப்பெறுகிறான். அப்படிப் பார்க்கும்போது, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை முழுமையாக தன்னை ஒப்படைத்துவிட்டு, அதற்கான வடிவமைப்பை மேலும் மேலும் செதுக்கி மெருகேற்றும் ஒரு கலைஞனின் நடிப்பை அவரது பிறந்த நாளில் அறிந்து மீள்பார்வை செய்வது சாலச்சிறந்தது. அதன்படி 'கும்பளாங்கி நைட்ஸ்' படத்திலிருந்து ஃபஹத் எனும் நடிகனின் நடிப்பை மீளாய்வு செய்வோம்.

அந்த மொத்த சீனுக்குமான களம் ஒரு பாத்ரூம் தான். பெரும்பாலும் க்ளோசப் ஷாட்ஸ். கட்டை மீசையை சரிசெய்துகொண்டே, புன்முறுவலுடன் கண்களால் ஒட்டுமொத்த காட்சிக்கும் உயிர் கொடுத்திருப்பார் ஃபஹத். 'கும்ப்ளாங்கி நைட்ஸ்' படத்தில் அவருக்கான இன்ட்ரோ காட்சி அது.

பொதுவாக முக்கியமான நடிகர் ஒருவருக்கு வைக்கப்படும் காட்சியில், காலுக்கு ஒரு ஷாட், கைக்கு ஒரு ஷாட், கண்களுக்கு ஒரு க்ளோசப் என பிஜிஎம் தெறிக்க அந்த நடிகர் நடந்து வரும்போது திரையரங்கில் விசில் பறக்கும். ஆனால், இது எதுவுமே இல்லாமல் ஒரு நடிகரின் இன்ட்ரோ காட்சிக்கு விசில் பறக்கிறது என்றால், அது ஃபகத் ஒருவருக்குத்தான்.

எதாவது ஒரு கொடூரமான காட்சி மூலம் ஒருவரை எளிதாக எதிர்மறை / மோசமான கதாபாத்திரமாக எளிதில் சித்தரித்துவிடலாம். ஆனால், 'கும்பளாங்கி நைட்ஸ்' படத்தில் ஃபஹத்தை அப்படி சித்தரித்திருக்க வேண்டும். ஆனால், அவருடைய எந்த அத்துமீறலும் அதுவரை காட்டப்படவில்லை. ஆனால், இன்ட்ரோவுக்கு அடுத்த காட்சியில் ஃபஹத்தை மோசமானவராக காட்டவேண்டும். இந்தச் சூழலில், அருகே விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களின் ஃபுட்பால், ஃபஹத் அமர்ந்திருக்கும் புல்லட்டை பதம் பார்க்கிறது. ஒருபுறம் அந்த பந்தை எடுக்க வந்து நிற்கும் சிறுவன், மறுபுறம் ஃபஹத்தின் மனைவி, இடையில் பஹத். பார்க்கும் நமக்கு 'ஏதோ விபரீதம்' நடக்கப்போகிறது என்பதை அந்த காட்சியைத் தாண்டி, ஃபஹத்தின் முகபாவனை அத்தனை அழகாகப் பதிவு செய்யும்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த முக பாவனையிலிருந்து அப்படி மாற்றிக்கொண்டு சிரிப்பார். காட்சியின் தன்மையையும் சேர்த்தே மாற்றிவிடுவார். ஆக, ஒரு காட்சியை தன் முகபாவனைகளால் கட்டி இழுக்கும் கலைஞன் தான் ஃபஹத். குறிப்பாக அதே காட்சியில் அந்த சிறுவன் பந்தை எடுக்க வரும்போது புல்லட் உறுமும் சப்தத்துடன் ஃபஹத்தின் ரியாக்‌ஷன் அடிபொலி!

மொத்தப் படத்திலுமே அவர் வரும் காட்சிகள் நமக்கு ஒருவித பதற்றத்தைக் கொடுக்கும். அந்த கேரக்டரை அத்தனை அழுத்தமாக அவரைத் தவிர யாராலும் நடித்து கொடுத்திருக்க முடியாது என்ற அளவிற்கு மிரட்டியிருப்பார். குறிப்பாக அக்கா, தங்கை இருவரும் சமையலறையில் பேசிக்கொண்டிருக்கும் காட்சியில், 'எந்தானு' என ஒரு வித சிரிப்புடன் பாதி உடல் தெரிய, மறைந்திருந்து எட்டிப் பார்க்கும் காட்சி அல்டிமேட்!

அவர்கள் பதில் சொல்லும் வரை விடாமல், 'பறா' என சிரித்தப்படியே கேட்டுக்கொண்டிருப்பார். அவரின் அந்த ரியாக்‌ஷனுக்கு எப்படி பதில் மொழி கொடுப்பதென்று தெரியாமல் எதிரிலில் இருப்பவர்களின் நடிப்பை திக்குமுக்காடச் செய்திருப்பார்.

எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டுமே எடுத்துப் பார்த்தால், ஃபஹத் எனும் அசுரக் கலைஞனை அசால்ட்டாக அடையாளம் காண முடியும். மற்ற எல்லாரையும் ஓவர் டேக் செய்துவிட்டு அதகளம் செய்திருப்பார். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென கோபித்துக்கொண்டு மூலையில் போய் நின்றியிருப்பார். அதற்கு அடுத்த ஷாட்டில் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு ஒருவித சிரிப்புடன் 'உறங்கண்டே' என கூறி பயமுறுத்துவார்.

சண்டைப்போட வேண்டும்; ஆனால் இதுவரை சுமந்துவந்த அந்தக் கதாபாத்திர தன்மையை மாற்றக்கூடாது. அதே சிரிப்புடன் அடித்து துவம்சம் செய்வது, 'ஷம்மி ஹீரோ டா... ஹீரோ' என சொல்லிவிட்டு சுத்தியலை தூக்கி ஆட்டம் காட்டும் போக்கில் பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்திருப்பார்.

மொத்த சண்டைக்காட்சியிலும், ஷோபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாசியைக் கடந்து தன்னை கவனிக்க வைத்திருப்பார். அதற்கு அவரது கதாபாத்திரத் தன்மையைக் கடந்து நடிப்பின் அழுத்தம் முக்கியமான காரணம். இறுதியில் ஃபஹத்தை கட்டுப்படுத்த முடியாமல் வலையைப்போட்டு அவருக்கு மட்டுமல்லாமல், நடிப்புக்கும் கடிவாளமிட்டிருப்பார்கள்.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல 'கும்பளாங்கி நைட்ஸ்' ஒரு பதம்தான். அந்த வகையில் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பின் மூலமாக சர்ஃப்ரைஸ் கொடுத்துக் கொண்டேயிருக்கும் சேட்டனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x