Published : 07 Aug 2022 05:08 PM
Last Updated : 07 Aug 2022 05:08 PM
''இந்தி திணிப்பைத்தான் எதிர்கிறோமே தவிர, இந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என நாம் சொன்னதில்லை'' என இந்தி படத்தை வெளியீடுவது தொடர்பான கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடுகிறது. இந்தப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில், ஆமீர்கான், நாகா சைதன்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், 'இந்தி எதிர்ப்பை பதிவு செய்யும் தமிழகத்தில் இந்தி படத்தை வெளியீடுவதால் வரும் எதிர்கருத்துகளை எப்படி எதிர்கொள்வீர்கள்' என கேட்டதற்கு, உதயநிதி ஸ்டாலின் ''எப்போதும் 'இந்தி தெரியாது போடா' என்பது இந்தி திணிப்புக்கு எதிரானது தான்.
மொழியைக் கற்றுக்கொள்ளக்கூடாது என எப்போதும் நாம் சொன்னது கிடையாது. உங்களுக்குத் தேவைப்பட்டால் நீங்கள் கற்றுகொள்ளலாம். ஆனால், நீங்கள் கற்றுக்கொண்டது தான் ஆக வேண்டும் என யாராவது திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை. இது ரெட் ஜெயண்டின் முதல் ஹிந்தி படம். தெலுங்கு படத்தை வெளியிட்டிருக்கிறோம். மொழியைத் தாண்டி, எனக்கு ஆமீர்கானின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.
அவரின் எல்லா படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் இந்திய வரலாறு நிறைய இருக்கிறது. அது தொடர்பாக நானும், ஆமீர்கானும் நிறைய பேசினோம். இது ஒரு ஃபேன் பாய் தருணமாக கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்'' என்றார்.
பான் இந்தியா குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ஆமீர்கானிடம் கேட்டதற்கு, ''இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு நாடு. ஒவ்வொரு மொழிகளிலும் நமக்கு ஒரு ஜாம்பவான்கள் உள்ளனர். வெவ்வேறு மொழிகளில் நல்ல படங்கள் வருவது மிகவும் சிறப்பானது. நாட்டின் பல்வேறு மொழிகளில், பிராந்தியங்களிலிருந்து வெளியாகும் படங்களை நான் விரும்பி பார்க்கிறேன். அது ஆரோக்கியமானது. கேரக்டரை உள்வாங்கி கொள்வது சவாலாக இருந்தது. வெவ்வேறு காலக்கட்டத்தில், வெவ்வேறு வயதுடையவராக நடிப்பதும் சவாலாக இருந்தது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT