Published : 07 Aug 2022 03:25 PM
Last Updated : 07 Aug 2022 03:25 PM
ஆமீர் கானின் 'லால்சிங் சத்தா' திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ரூ.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேசமயம் அக்சய் குமாரின் படம் ரூ.3 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.
ஹாலிவுட்டில் வெளியாகி ஆஸ்கர் விருதுகளை குவித்த 'ஃபாரஸ்ட் கம்ப்' படம் 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. பான் இந்தியா முறையில் வெளியாகும் இந்தப் படத்தில் நடிகர் ஆமீர்கான் - கரீனா கபூர் இருவரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே முன்பதிவின் மூலம் ரூ.8 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு, கபீர் கான் இயக்கத்தில் வெளியான '83' திரைப்படம் இந்த சாதனையை படைத்தது. 'லால் சிங் சத்தா' படம், பஞ்சாப்பில் அதிகளவு படமாக்கப்பட்டு, அந்த மக்களை பிரதிபலித்த போதிலும், அவர்கள் முன்பதிவில் போதிய ஆர்வம் காட்டவில்லை. மாறாக, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் படத்திற்கான முன்பதிவு சூடுபிடித்துள்ளது.
இதே நாளில் ஆக்சய்குமார் நடிப்பில் உருவான 'ரக்சா பந்தன்' படமும் வெளியாக உள்ளது. ஆனால், இந்தப் படத்திற்கான முன்பதிவு சற்று மந்தமான நிலையில் தான் தொடங்கியிருக்கிறது. ரூ.3 கோடி அளவில் தான் அக்சய்குமார் படத்திற்கான முன்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம், அவரின் முந்தைய படங்களான 'சாம்ராட் பிருத்விராஜ்', 'பச்சன் பாண்டே' படங்களில் படுதோல்வியே எனக் கூறப்படுகிறது.
இரண்டு முக்கியமான நடிகர்களின் படங்கள் மோத உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரக்சா பந்தன் மற்றும் சுதந்திர தின விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளதால் இரண்டு படங்களின் வசூலும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அக்சய் குமார் கூறுகையில், ''இது ஒரு சிறப்பான வாரம். இரண்டு, மூன்று விடுமுறைகள் வர உள்ளன. இந்த வாரத்திற்கான இரண்டு படங்களும் நல்ல முறையில் மக்களிடையே சென்று சேரும் என நினைக்கிறேன். கரோனா தொற்று கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த சூழலில், ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் வெளியாவது தவிர்க்க முடியாதது'' என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT