Published : 07 Aug 2022 06:58 AM
Last Updated : 07 Aug 2022 06:58 AM
உறவுகள் யாருமற்ற ராணுவ வீரர் ராமுக்கு (துல்கர் சல்மான்), சீதா மகாலட்சுமி (மிருணாள் தாக்குர்) என்ற பெயரில் இருந்து காதல் கடிதங்கள் வருகின்றன. தன்னை ராமின் மனைவி என்று சொல்லிக்கொள்ளும், அந்த முகவரி இல்லாத கடிதத்தின் விலாசத்தை தேடி கண்டுபிடிக்கிறார் ராம். வீட்டை மீறி திருமணம் நடக்கிறது.
இந்நிலையில், பயங்கரவாதியைக் கொல்வதற்காக, நாட்டின் எல்லை தாண்டுகிறார் ராம். அவர் திரும்பி வந்தாரா? சீதாயார்? என்பது பிளாஷ்பேக்கில் விரிய, காதல் மனைவிக்காக 20 ஆண்டுகளுக்கு முன் ராம் எழுதிய கடிதத்தை கொடுக்க வரும் அஃப்ரீத் யார்? என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது ‘சீதா ராமம்’.
ஓர் இனிமையான காதல் கதையை,ராணுவப் பின்னணியில் சுகமாக செதுக்கியுள்ளார் இயக்குநர் ஹனு ராகவபுடி. அதற்கு ஆழமாக உதவுகிறது, ஆச்சரியமான திருப்பங்கள் கொண்ட அவரது திரைக்கதை. முதல் பாதி சற்று நெளிய வைத்தாலும் இரண்டாம் பாதி, இழுத்துப் பிடித்து அமரவைத்துவிடுகிறது.
ரொமான்டிக் ஹீரோ கதாபாத்திரத்தில் தன்னை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் துல்கர். மனிதாபிமானம் உள்ள ராணுவ வீரராகவும், முன்பின் தெரியாதகாதலி சீதாவை நினைத்து ஏங்குவதிலும், அவரை கண்டதும் பொங்கும் காதலைபுன்னகையில் சிந்துவதும், வருவதாகசொல்லிச் சென்று வராமல்போன சீதாவுக்காக சோகம் நிறைந்து சுழல்வதுமாக ராமாகவே மாறியிருக்கிறார் துல்கர்.
துல்கரின் காதலியாக மிருணாள் தாக்குர். இருவருக்குமான கெமிஸ்ட்ரி கச்சிதம். பாகிஸ்தானை சேர்ந்த அஃப்ரீத்தாக ராஷ்மிகா. வித்தியாசமான கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக்கி இருக்கிறார்.
மேஜர் செல்வனாக கவுதம் வாசுதேவ் மேனன், பிரிகேடியர் விஷ்ணுவாக சுமந்த்,ராஷ்மிகாவின் தாத்தாவாக சச்சின் கடேகர், பாலாஜியாக தருண் பாஸ்கர், நாடகநண்பர் வெண்ணிலா கிஷோர் என அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.
விஷால் சந்திரசேகரின் பாடல்கள் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை, கதையோடு கைபிடித்து இழுத்துச் செல்கிறது. மதன் கார்க்கியின் வசனம், படத்துக்கு பலம். பி.எஸ்.வினோத், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, காஷ்மீரின் குளிரை அதே ஜில்லோடு நமக்கும் கடத்துகிறது.
காஷ்மீருக்கு வரும் நூர்ஜஹான், ஏன் பொட்டு வைத்திருக்க வேண்டும்? 20 ஆண்டுகளுக்கு பின் உண்மையைச் சொன்னாலும், அது தனக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பது, மீண்டு வந்த பிரிகேடியருக்கு தெரியாதா? யாரோ ஓர் இளைஞனுடன் சுற்றும் இளவரசியை, ஊரில் ஒருவருக்கும் தெரியாமல் போவது எப்படி? என்பது போன்ற கேள்விகள் பல்லில் பட்டகல்லாக கூசினாலும், பாயசத்தில் முந்திரியாக ருசிக்கிறது இந்த ‘சீதா ராமம்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT