Published : 06 Aug 2022 10:07 AM
Last Updated : 06 Aug 2022 10:07 AM
மதம், அரசியல், மொழி உள்ளிட்ட அனைத்து தடைகளையும் தாண்டியது காதல் என்பதை சொல்ல முனையும் படைப்பு தான் 'சீதா ராமம்'.
தனது தாத்தா கொடுத்த கடிதம் ஒன்றை இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமியிடம் (மிருனாளின் தாக்கூர்) கொடுக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஆஃப்ரீனுக்கு (ராஷ்மிகா மந்தனா) வந்து சேர்கிறது. அதனால் சீதா மகாலட்சுமியைத் தேடி இந்தியா வருகிறார் ஆஃப்ரீன். அவரைத் தேடி அலையும் ஆப்ரீனுக்கு சீதா - ராம் காதல் கதை அறிமுகமாகிறது. யார் இந்த சீதா - ராம்? அவர்களின் காதல் கதை என்ன? அந்தக் கடித்தத்தில் என்ன இருக்கிறது? இறுதியில் அந்தக் கடிதம் சீதாவிடம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? - இவற்றைச் சொல்லும் படம் தான் 'சீதா ராமம்'.
ஒட்டுமொத்த படமும் சீதா - ராம் என்ற ராமயண ரெஃபரன்ஸை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் ராமனிடமிருந்து சீதைக்கு ஒரு செய்தியை எடுத்துச் செல்வதால், ஹனுமன் பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறார் ராஷ்மிகா மந்தனா. விஷுவலாக பார்த்தால் படம் ஓர் அலாதியான உணர்வைக் கொடுக்கிறது. காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும், படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்க வேண்டிய கருப்பொருளான காதலை இன்னும் ஆழமாக காட்சிப்படுத்தியிருக்கலாம். மாறாக, நாட்டுப்பற்றை கலந்து இரண்டு ட்ராக்குகளில் படம் பயணிப்பது காதல் காட்சிகளின் அழுத்தத்தை குறைத்துவிடுகிறது.
துல்கர் - மிருளாளினியின் கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாக பொருந்திப் போகிறது. இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கியிருக்கும் இப்படம் ஆங்காங்கே, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் வெளியான'மகாநடி'யின் நெடி இருப்பதை நுகர முடிகிறது. அங்கே சமந்தாவுக்கு பதிலாக இங்கே ராஷ்மிகா இருப்பதாக தோன்றினாலும், கதையோட்டம் அந்த எண்ணத்தை மாற்றிவிடுகிறது. படத்தின் ப்ளஸ், அதன் காதல் காட்சிகள். காதல் கோட்டை படத்தைப்போல கடிதப் போக்குவரத்து காதல், சில இடங்களில் ஈர்க்கும் அதன் வரிகள், அதையொட்டிய சில காட்சிகள், காஷ்மீர் குளிரில் பருகும் சூடான தேநீர்போல இதம். அதே சமயம், மதங்களைவிட மனிநேயம் தான் பெரியது என கூறும் படம், சில இடங்களில் மதம் குறித்த வெறுப்பு பிரச்சாரத்திற்கான கால்வாயையும் திறந்துவிடுகிறது.
அடிக்கடி வரும் பாடல்களும், பொறுமையாக நகரும் திரைக்கதையும் படத்தை பலவீனப்படுத்தினாலும், காதல் காட்சிகள் அதனை ஓவர் டேக் செய்துவிடுகிறது. குறிப்பாக நாயகியின் இன்ட்ரோ, சில எதிர்பாராத ட்விஸ்ட்டுகள், பிரிவுகள் தொடர்ந்து நிகழும் இணைவுகள் என ரசிக்கும்படியான காட்சிகள் நிறையவே இருக்கிறது. பாலியல் தொழிலாளி வீட்டில் நடக்கும் காட்சிகள் சென்டிமென்ட் டச். 20 வருடங்கள் கழிந்தும் மிருனாளினி தாக்கூர் அதே மேக்கப்புடன் இருப்பது, அரச குடும்பத்தின் பிந்தைய நிலை, படத்தின் நீளம், தேவையற்ற நாட்டுப்பற்று காட்சிகள் அயற்சி.
க்ளீன்ஷேவ், ஹென்சம் லுக் என சாக்லேட் பாயாக ஈர்க்கிறார் துல்கர் சல்மான். ராணுவ வீரராகவும், காதல் நாயகனாகவும் இரண்டு கதாபாத்திரத்திலும் பொருந்திப் போகிறார். ராமனுக்கு காத்திருக்கும் சீதையாக, காதலை விட்டு கொடுக்க முடியாத காதலியாக, எமோஷனல் காட்சிகளிலும் மிருனாளினி தாக்கூரின் நடிப்பு கதைக்கு உயிரூட்டுகிறது. இவர்களைத் தவிர்த்து, இதுவரை நடித்திராத புதிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தன்னா தேர்ந்த நடிப்பைத் தருகிறார். வெண்ணிலா கிஷோர் சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். தவிர கவுதம் வாசுதேவ் மேனன், சுமந்த், பிரகாஷ் ராஜ், தருண், பூமிகா என பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள்.
காதல் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு படத்தின் மிகப்பெரிய பலம் சேர்ப்பது பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகிய இருவரின் ஒளிப்பதிவு தான். காஷ்மீரின் குளிரை நமக்குள் கடத்திவிட்டு, ஸ்ரீநகர், இந்திய - பாகிஸ்தான் எல்லை, ஹைதராபாத் பேலஸ் என பல இடங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கின்றனர். அவர்களது கேமரா பதிவு செய்திருக்கும் காட்சிகளுக்காக படத்தை திரையரங்குகளில் பார்க்கலாம். பிரதானமாக இருக்கும் கலை இயக்கத்தின் பங்கு பிரமாதமாக திரையில் தெரிகிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.
மொத்தத்தில் காஷ்மீர், தீவிரவாதிகள், பாகிஸ்தான், ராமாயண ரெஃபரன்ஸ் என்பதையெல்லாம் தவிர்த்துவிட்டு காதலை மட்டும் வைத்து இன்னும் ஆழமாக எழுதியிருந்தால் நிச்சயம் ஒரு நல்ல காதல் படைப்பாக 'சீதா ராமம்' வந்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT