Published : 01 Aug 2022 12:54 PM
Last Updated : 01 Aug 2022 12:54 PM

செஸ் ஒலிம்பியாட் புறக்கணிப்பு - என்ஜாய் எஞ்சாமி புகழ் அறிவின் வைரலாகும் பதிவு

'என்ஜாய் எஞ்ஜாமி' பாடல் தொடர்பாக அப்பாடலை எழுதி, இசையமைத்து பாடிய அறிவின் சமீபத்திய பதிவு பெரும் விவாதத்தை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு என்ஜாய் எஞ்ஜாமி சுயாதீன பாடல், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில் பாடகர்கள் அறிவு, தீ குரலில் வெளியாகியது. இப்பாடல் வெளியானது முதலே இணையத்தில் டிரெண்டாகி பெரும் வெற்றி பெற்றது. இதுவரை இப்பாடலை 42 கோடிக்கும் அதிகமானவர்கள் யூ -டியூப்பில் கண்டுகளித்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அப்பாடலை பாடகி தீ பாடி அசத்தியிருந்தார். எனினும் இப்பாடலின் முக்கிய அங்கமாக கருதப்படும் சுயாதீன பாடல் கலைஞரான அறிவு செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பலரும் என்ஜாய் எஞ்சாமி பாடலின் வெற்றிக்கு காரணமாகி இருந்த அறிவு புறக்கணிப்படுகிறாரா? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழும்பியிருந்தனர்.

முதல்முறை அல்ல: பிரபல இதழான ரோலிங் ஸ்டோன், இதழில் என்ஜாய் எஞ்சாமி பாடலும், நீயே ஒலி ஆகிய பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்தது. அந்த அட்டை படத்தில், பாடகி தீ மற்றும் ஷான் வின்சென்ட் டீ பால் ஆகியோரின் படங்கள் இடம்பெற்று இருந்தன.ஆனால் என்ஜாய் எஞ்ஜாமி பாடல் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அறிவின் புகைப்படம் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்குப் பிறகு அறிவின் புகைப்படம் தனியாக வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் அறிவு பங்கேற்காதது சர்ச்சையாக எழுந்துள்ளது. இந்தச் சூழலில் சர்ச்சைகளுக்கு முதல் முறையாக விளக்கமளித்துள்ளார் அறிவு.

இதுகுறித்து அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ ’என்ஜாய் என்சாமி’ பாடலை நான் இசையமைத்து, எழுதி, பாடியிருக்கிறேன். யாரும் எனக்கு பாடலுக்கான மெட்டும் வழங்கவில்லை, பாடலுக்கான வரிகளையும் வழங்கவில்லை. இப்பாடலின் வெற்றிக்காக கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாது, மனஅழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்தேன். இந்த பாடல் குழுவின் பங்களிப்பால் நிகழ்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த பாடல் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் இது வள்ளியம்மாள் அல்லது நிலமற்ற தேயிலை தோட்ட அடிமைகளாக இருந்த என் முன்னோர்களின் வரலாறு அல்ல என்று கூறமுடியாது. எனது ஒவ்வொரு பாடலும் ஒடுக்கப்பட்ட மக்களின் காயங்களை கொண்டுள்ளது. ’என்ஜாய் என்சாமி’ பாடலைப்போல..

இந்த மண்ணில் 10000 நாட்டுறப் பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும் முன்னோர்களின் மூச்சுக் காற்றை, வலியை, காதலை, வாழ்க்கையை சுமந்துள்ளன. இவை அனைத்தும் அழகான பாடல்கள் வழியே உங்களிடம் தற்போது பேசப்படுகிறது. ஏனெனில் நாங்கள், ரத்தமும், வியர்வையும் மெல்லிசை பாடல்களாகவும், கலைகளாகவும் மாறிப்போன தலைமுறையினர். இந்தப் பாடல்களில் மூலம் நாங்கள் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம்.

உங்கள் திறமையை நீங்கள் உறங்கும்போது யார் வேண்டுமானாலும் திருடிச் செல்லலாம். ஆனால் நீங்கள் விழித்திருக்கும்போது அதை யாரும் களவாட முடியாது. ஜெய் பீம்..

உண்மை இறுதியில் வெல்லும் ” என்று பதிவு செய்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon