Published : 31 Jul 2022 03:47 PM
Last Updated : 31 Jul 2022 03:47 PM
நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் 'பரோஸ்' படத்தின் படிப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 3டியில் உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில் வெளியிடப்பட உள்ளது.
மலையாள சினிமாவின் முகமாக கருத்தப்படும் மோகன்லால் நடிகராக பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் 'பரோஸ்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. கரோனா காரணமாக படம் தாமதமானது. தொடக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பதாக இருந்தது பின்னர் மாற்றப்பட்டது. இதில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா (Paz Vega), ரபேல் அமர்கோ உட்பட பலர் நடிக்கின்றனர்.
ரபேல் அமர்கோ, வாஸ்கோடகாமாவாக நடிக்கிறார். நடிகை பாஸ் வேகா, செக்ஸ் அண்ட் லூசியா, ஆல் ரோட்ஸ் லீட்ஸ் டு ஹெவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளனர்.
ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்திருக்கிறார். 3டி-யில் உருவாகும் பரோஸ், அதிக பட்ஜெட்டில் உருவாகும் மலையாள திரைப்படம் என்கிறார்கள். இது பான் இந்தியா முறையில் வெளியிடப்படுகிறது.
போர்ச்சுகல், ஸ்பெயின், ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் கடல் வாணிபம் நடைபெற்ற வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT