Last Updated : 28 Jul, 2022 10:13 AM

5  

Published : 28 Jul 2022 10:13 AM
Last Updated : 28 Jul 2022 10:13 AM

முதல் பார்வை | தி லெஜண்ட் - மக்களை காக்க போராடுகிறார்... பார்வையாளர்கள் பிழைத்தனரா?

நிரிழிவு நோய்க்கு மருந்து கண்டுபிடித்து நாட்டுமையாக்க போராடும் நாயகனின் கதைதான் படத்தின் ஒன்லைன். புகழ் பெற்ற விஞ்ஞானி சரவணன் (அருள் சரவணன்) தனக்கு வரும் பல உயரிய பதவிகளை புறந்தள்ளிவிட்டு, தன் நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என எண்ணி சொந்த ஊர் திரும்புகிறார். அங்கு நிகழும் அவருக்கு நெருக்கமான ஒருவரின் இழப்பு, சரவணனை நீரிழிவு நோய்க்கான நிரந்தர மருந்தை கண்டுபிடிக்கத் தூண்டுகிறது. அதற்கான முயற்சியில் அவர் இறங்க, இறுதியில் அந்த மருந்தை அவர் கண்டுபிடித்தாரா? அதற்கு தடையாக இருக்கும் மருந்து மாஃபியா கும்பல் அவரை என்ன செய்தது? இதையெல்லாம் சமாளித்த டாக்டர் சரவணன் எப்படி 'தி லெஜண்ட்' சரவணன் ஆனார் என்பது தான் படத்தின் திரைகதை.

நாயகன் அருள் சரவணனை நம்பியே முழு திரைக்கதையும் நகரும் நிலையில் படத்திற்கு அவரது நடிப்பு நாடித்துடிப்பு போல. ஆனால், அதற்கு அவரது நடிப்பு ஒத்துழைக்கவில்லை. கண்ணீர் சிந்தி அழும் காட்சிகளிலும், எதிராளியிடம் கோபமாக வசனங்களை பேசும் காட்சியிலும், ரொமான்ஸ், காமெடி நடனம் என எல்லா இடங்களிலும் உணர்ச்சிகளின் வறட்சி தொக்கி நிற்பதை உணர முடிகிறது. எல்லா தருணங்களுக்கும் ஒரே மாதிரியான ரியாக்ஷன்கள் ஒரு கட்டத்தில் அயற்சியை கொடுக்கிறது.

நாயகிகள் ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி இருவரும் 'ஓகே' வான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காமெடியனாக வரும் நடிகர் விவேக் (அவரது இறுதிப்படம்) வழக்கமான தனது நடிப்பை வெளிப்படுத்த தவறவில்லை. அவருக்கு மட்டும் லைவ் ஆடியோ கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, விஜயகுமார், லிவிங்க்ஸ்டன், சுமன், மன்சூர் அலிகான், திவ்ய தர்ஷினி, முனிஷ்காந்த், அனைவரும் கதாபாத்திரத்துக்கு தகுந்த நடிப்பை பதிவு செய்துள்ளனர்.

ஜேடி - ஜெர்ரி இருவரும் இணைந்து படத்தை இயக்கியுள்ளனர். 'தி லெஜண்ட்' படத்தின் மிகப்பெரிய பிரச்சினை கோர்வையில்லாமல் நகரும் அதன் காட்சியமைப்புதான். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு முழுப் படமாக நகராமல், தனிதனி சீன்களாக நகர்கிறது. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத காட்சிகள், திடீரென ஜம்ப் ஆகும் கதை என படத்தின் முதல் பாதி எதை நோக்கி செல்கிறது என புரியவில்லை. வெறும் சீன்களை மட்டும் எழுதிவிட்டு பின்னர் அதை ஒட்டி திரைக்கதையாக்கிருப்பார்களோ என தோன்றுகிறது.

சூர்ய வம்சம் படத்தின் வாத்து சீன் வரும்போதே சற்று சந்தேகமாக இருந்தது. காரணம் இயக்குநர்கள் 19 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கும் படம் தி லெஜண்ட். துன்புறுத்தும் காமெடி காட்சிகள், 'அவன் சாதாரண ஆள் இல்ல' என்ற பில்டப் வசனங்கள், தேவையில்லாத பாடல்கள் என படம் முழுக்க சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இடையிடையே, நாசர் வேறு திரையில் தோன்று, 'வெல்டன் மை டீயர் பாய்' என 'பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' என்பதைப்போல நாயகனுக்கு அவ்வப்போது எனர்ஜி கொடுத்து செல்கிறார்.

ஒரு காட்சியில் நடந்து வரும் நாயகன் அதை கட் செய்தால் ஓடும் டிரைனில் இருக்கிறார். மணாலியில் இருப்பவர் திடீரென அவர் சொந்த கிராமத்தில் இருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது ஒருவேளை படம் சூப்பர் ஹீரோ படமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. எம்.ஜி.ஆரைப் போல சாட்டை எடுத்துக்கொண்டு தோன்றுவதும், ப்ரேமுக்கு ஒரு காஸ்டியூம் மாற்றுவதும், முழுக்க முழுக்க ஹீரோயிசத்தை மையப்படுத்திய ஓவர் டோஸ் திரைக்கதை முழுக்க செலுத்தப்பட்டுள்ளது.

ஹாரீஸ் ஜெயராஜின் கம்பேக் சண்டைக் காட்சிகளின் பின்னணி இசையில் ஆறுதலைக்கொடுத்தாலும், சென்டிமென்ட் காட்சிகளில், 'ஆஆஆ...' என நீளும் குரல் சீரியலுக்கான உணர்வைக்கொடுக்கிறது. 'வாடிவாசல்' 'மஸலோ மசலு' பாடல் சுமார் ரகம். வேல்ராஜ் ஒளிப்பதிவும், ரூபன் எடிட்டிங்கும் படத்திற்கு பலம். இருந்தாலும் ரூபன் தொடர்பில்லாத காட்சிகள் குறித்து இயக்குநரிடம் கேள்வி எழுப்பியிருக்கலாம்!

மொத்தத்தில் மருந்தை கண்டிபிடித்து மக்களை காப்பாற்ற நாயகன் போராடுகிறார். ஆனால் பார்வையாளர்களை காப்பாற்றுவது குறித்து அவர் சிந்திக்காதது வருத்தமே. இதன் மூலம் பார்வையாளர்களை 'தி லெஜண்ட்' ஆக்கியிருக்கும் விதத்தில் டைட்டிலுக்கு நியாயம் சேர்க்கிறது படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x