Published : 26 Jul 2022 04:02 PM
Last Updated : 26 Jul 2022 04:02 PM

யானை திரைப்பட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: மீனவ சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் யானை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், அதன் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்துக்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "யானை திரைப்படத்தில் ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாகவும், கூலிப்படையினராகவும் சித்தரித்துள்ளனர்.குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் படதச்தில் வரும் சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளன. கச்சத்தீவு பிரச்சினையும் இந்த படத்தில் கையாளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தங்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கின்றன.

உயிரைப் பணையம் வைத்து நடுக்கடலில் மீன் பிடித்து, ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் விளிம்புநிலை மக்களான மீனவர்க்ளை அவமதிக்கும் வகையில் உள்ள காட்சிகளுடன் படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும். இப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காணொலி காட்சி மூலம் ஆஜராவதில் இடையூறு ஏற்பட்டதால், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x