Published : 23 Jul 2022 06:14 PM
Last Updated : 23 Jul 2022 06:14 PM

“நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்...” - திரைப் பயணம் குறித்து அபர்ணா பாலமுரளி

"நான் இந்தத் துறையில் நுழைந்தபோது எனக்கு எதுவும் தெரியாது. இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது'' என்று தேசிய விருது வென்றுள்ள நடிகை அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 'சூரரைப்போற்று' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்போது, அவர் 'இனி உத்திரம்' படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். இந்தப் படம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. தேசிய விருது அறிவிப்பு வெளியானதையடுத்து, படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர். ''என் சினிமா பயணம் வீணாகிவிடுமோ என பயந்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. தேசிய விருது அறிவிப்பை அறிந்து திக்குமுக்காடியிருக்கிறேன். 'சூரரைப் போற்று' படத்தின் இயக்குநருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். சுதா கொங்கரா எனக்கு பின்னால் உறுதியாக நின்றார். இந்தப் படம் வெளியாகும்போது, கரோனா காலமாக இருந்ததால் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எங்களுக்குள் இருந்தது.

ஆனால் இப்போது நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். எனது சினிமா பிரவேசம் எதிர்பாராதது. 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் எனக்கு கிடைத்த கதாபாத்திரத்தைப் போல நிறைய நல்ல படங்களில் தரமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அனைவருக்கும் மிக்க நன்றி. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் இந்த உலகத்தில் இல்லை.

நான் இந்தத் துறையில் நுழைந்தபோது எனக்கு எதுவும் தெரியாது. இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். காலை வீட்டை விட்டு வெளியேறும்போதே சற்று பதற்றத்துடன் இருந்தேன். இயக்குநர் சுதா கொங்கரா என் மீது நம்பிக்கவைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்தார்.

மதுரை வழக்கில் பேசி நடிக்க பலர் உதவி செய்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா, இயக்குநர் சுதா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் உட்பட படக்குழுவுக்கு நன்றி'' என தெரிவித்தார்.

'சூரரைப் போற்று' படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் அபர்ணா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x