Published : 23 Jul 2022 04:19 PM
Last Updated : 23 Jul 2022 04:19 PM
'கார்கி படத்தில் ஒரு வசனம் பேச கிட்டத்தட்ட 9 டேக் ஆனது. சாய் பல்லவியை பொறுத்தவரை அவர் வசனமில்லாமல் உடல் மொழியிலேயே நடிப்பவர்' என நடிகர் காளிவெங்கட் பாராட்டியுள்ளார்.
குழந்தைகள் மீதான பாலியன் வன்கொடுமைகளை மையமாக வைத்து இயக்குநர் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த படம் 'கார்கி'. கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய சாய் பல்லவி, ''நான் திரையரங்கிற்கு சென்று மக்களோடு படம் பார்த்தேன். அவர்கள் பாராட்டுவதை விட உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது'' என்றார்.
காளி வெங்கட் பேசும்போது, ''பெரிய படங்களுக்கு தான் இடைவேளையில் இருந்தே விமர்சனம் ஆரம்பித்து விடும். அந்த வரிசையில் கார்கி படம் இருப்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் ஒரு வசனம் பேச கிட்டத்தட்ட 9 டேக் போனது. ஒரு கலைஞர் தனது கதாபாத்திரத்தை எந்தளவுக்கு உள்வாங்கியிருந்தால் சாய் பல்லவி வசனம் இல்லாமல் உடல் மொழியிலேயே கூறியிருப்பார். அப்பாவை பார்க்க முடியாமல் நடந்து வரும் காட்சியில் அருமையாக நடித்திருப்பார். குறுகிய காலத்தில் இப்படம் அனைவரையும் சென்று சேர்ந்திருக்கிறது. எனக்கு கார்கி மிகவும் முக்கியமான படம்'' என்றார்.
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி பேசும்போது, ''கார்கி ஒரு வித்தியாசமான படம் என்று நான் சொல்லத் தேவையில்லை. இயக்குநர் கவுதமுக்கு இருந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். கதையை கூறியதும் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். உடனே நாளைக்கே படப்பிடிப்பு வந்து விடுங்கள் என்றார். இரண்டாம் நாள் படப்பிடிப்பில் ஏன் கவுதம் இப்படி அநியாயம் செய்கிறீர்கள். எனக்கு முழுதாக கதையே தெரியாது.
ஆனால், இரண்டாவது நாளே எப்படி க்ளைமாக்ஸ் காட்சியில் நடிக்க முடியும் என்று கேட்டேன். நான் சொல்லி தருகிறேன் என்றார். சாய் பல்லவியுடன் நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் தற்போது அழகான நடிகைகளுக்கு அப்பாவாக நடித்து வருகிறேன். முதலில் நயன்தாராவிற்கு அப்பாவாக நடித்தேன். இப்போது சாய்பல்லவிக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன். காளி வெங்கட் யார் என்பது அவர் நடிப்பில் உணர்த்தி விடுவார். அவர் நடிகர் அல்ல நட்சத்திரம்'' என்றார்.
திருநங்கை சுதா பேசும்போது, ''இந்த நேரத்தில் இயக்குநருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏன் திருநங்கையை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று யோசித்தேன். இப்படம் பார்த்த பிறகு எனது தோழிகள் பாராட்டினார்கள். என்னுடன் நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் பேசுவார்கள். ஆனால், இப்படம் வெளியான பிறகு கேரளாவில் இருக்கும் தூரத்து உறவினர்களும் என்னைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.
காளிவெங்கட் மாதிரி மனிதரை இனிமேல் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. எல்லோரும் சாப்பிட்டார்களா என்று பார்த்துவிட்டு தான் அவர் சாப்பிடுவார். ஆகையால், தான் அவர் நாயகன் ஆகியிருக்கிறார்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT