Published : 23 Jul 2022 03:05 AM
Last Updated : 23 Jul 2022 03:05 AM
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்திவரும் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் அக்ஷய்குமார் உடன் பங்குபெற்ற நடிகை சமந்தா, விவாகரத்து தொடர்பாக பேசியுள்ளார்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 10 ஆண்டுகளின் நட்பு காதலில் முடிந்தது என அறிவித்த இருவரும், சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். ஆனால், திடீரென இருவரும், ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல, பிரிகிறோம்’ என்று கடந்த ஆண்டு அக்டோபரில் தனித்தனியாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர்.
அது முதல் இவர்களது பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், எதனால் இவர்கள் பிரிந்தனர் என யாரும் கூறவில்லை. இதுகுறித்து பல சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரவர்களுக்கு தெரிந்த, தகவல்களைக் கூறி வந்தனர். இதனிடையே, சமீபத்தில் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்திவரும் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் அக்ஷய்குமார் உடன் பங்குபெற்ற நடிகை சமந்தா, விவாகரத்து தொடர்பாக பேசியுள்ளார்.
"திருமண வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழல் ஏற்படும்போது பிரிவதை தவிர வேறு வழி இருக்காது. பிரிகின்ற முடிவை எடுத்தபோது முதலில் கடினமாகதான் இருந்தது. ஆனால், அது சரியான தீர்வாகவே அமைந்தது. இப்போது நன்றாக உள்ளது. இயல்பான நிலைக்கு வந்துவிட்டதாக உணர்கிறேன். மேலும், முன் எப்போதும் இல்லாத அளவு வலிமையோடு இப்போது இருக்கிறேன். இந்த வாழ்க்கை முறை எனக்கு வசதியாகவே உள்ளது" என்று சமந்தா விவாகரத்து தொடர்பாக மனம் திறந்தார்.
அப்போது குறுக்கிட்ட கரண் ஜோஹர், நாக சைதன்யாவுக்கும் உங்களுக்கும் இடையே கசப்பான எண்ணங்கள் இருந்ததா என கேள்வி எழுப்ப அதற்கு "கூர்மையான பொருட்களை மறைத்துவைத்துள்ள ஒரு அறையில் இருவரையும் அடைத்து வைத்தால் எப்படியிருக்கும் அது போன்ற உணர்வு அப்போது இருந்தது. இப்போதும்கூட அந்த உணர்வு உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாறி இணக்கம் வரலாம்" என்று பதில் கொடுத்தார் சமந்தா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT