Published : 22 Jul 2022 04:07 PM
Last Updated : 22 Jul 2022 04:07 PM
''ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்'' என்பது தான் படத்தின் ஒன்லைன்.
முகமூடி அணிந்த மர்ம கும்பலால் பெண் ஒருவர் கடத்தப்படுகிறார். எழுத்தாளர் ஒருவர் எழுதும் இந்தக் கதை நிஜத்திலும் அப்படியே அரங்கேறுகிறது. அவரது எழுத்துகள் உயிர்பெறுவது சுற்றியிருப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கடத்தப்படும் அந்தப் பெண் பெரிய இடத்து பெண் என்பதால் இந்தச் சம்பவத்தை பொதுவெளியில் தெரியாமல், அன்டர்கவர் அதிகாரி விக்ரம் குமார் (அருள்நிதி) மூலமாக டீல் செய்யப்படுகிறது.
இது தொடர்பான விசாரணை சூடுபிடிக்கவே, அந்தப் பெண் எதற்காக கடத்தப்பட்டார்? யாரால் கடத்தப்பட்டார்? எழுத்தாளர் எழுதுவது எப்படி நிஜத்தில் சாத்தியமாகிறது? - இப்படி பல விடைதெரியாத கேள்விகளுக்கு த்ரில்லர் பாணியில் விடை சொல்லும் திரைக்கதை தான் 'தேஜாவு'.
த்ரில்லர் படங்களை ஆதர்சமாக கொண்டு நடித்து வரும் அருள்நிதி, படம் தொடங்கி 20 நிமிடங்களுக்குப் பிறகே திரையில் தோன்றுகிறார். க்ளீன் ஷேவ், கண்ணாடி, அயன்செய்த சட்டை, மறந்தும் கூட மலராத முகம் என கறார் அதிகாரியாக கவனம் பெறுகிறார். மிகை நடிப்பின்றி, தேவையான மீட்டரில் கதாபாத்திரத்திற்கு தகுந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
'ரோஜா', 'ஜென்டில்மேன்' படங்களில் நடித்து புகழ்பெற்ற மதுபாலா டிஜிபி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ஆனால், ஒரு மாநில டிஜிபிக்கான நேர்த்தியும், அதற்கு உண்டான கம்பீரமும் அவரிடம் மிஸ்ஸிங். பொருத்தமில்லாத தேர்வும், சில இடங்களில் செயற்கை நடிப்பும் துருத்தல்.
தவிர காளி வெங்கட், ஸ்ம்ருதி வெங்கட், சேத்தன், ராகவ் விஜய் ஆகியோர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். எழுத்தாளராக வரும் அச்யுத் குமாரின் நடிப்பு ஈர்த்தாலும், எம்.எஸ்.பாஸ்கரின் டப்பிங் குரலால் அவ்வப்போது இரண்டு கேரக்டர்களை கண்முன் நிறுத்துகிறது.
அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். பொதுவாக சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் ஓர் உலகத்தை கட்டமைத்து அதற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்லும். விறுவிறுப்பான குழப்பான அந்த உலகில் எது வேண்டுமானாலும் நடக்கும். இறுதியில் அதற்கான உரிய நியாயத்தை சேர்த்து, பார்வையாளர்களை பரவசப்படுத்தி திருப்தியுடன் திரையரங்குகளிலிருந்து வெளியேற்றும் சக்தி படைத்தவை த்ரில்லர் ஜானர்கள். மக்களால் அதிகம் விருப்பப்படுபவையும் கூட.
அந்த வகையில் 'தேஜாவு' படத்தின் தொடக்கமே ஒரு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. வழக்கமாக இல்லாமல், 'எழுத்தாளரில் எழுத்துகள் உயிர்பெற்று நிஜத்தில் நடமாடுகின்றன' என்ற காட்சி ஆர்வத்தை கூட்டுகிறது. அதே டோனை இழுத்து கொண்டு திருப்பங்களை சுழல விட்டு முதல் பாதியில் விறுவிறுப்பை கூட்டுகிறார் இயக்குநர். கடத்தலையும் தாண்டி, எழுத்தாளரின் எழுத்துகள் உருப்பெறுவதற்கான காரணத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் பார்வையாளர்களிடையே மோலோங்குகிறது. அந்தவகையில் நல்ல தொடக்கம்.
இரண்டாம் பாதியில் முதல் பாதியில் நிலவிய சஸ்பென்ஸுக்கான நியாயங்களும், குழப்பங்களுக்கான விடைகளும் விடுவிக்கப்படும் என்பதால் அதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால், அதற்கான காரணங்கள் வலுவற்று, செயற்கைத்தன்மையுடன் இருந்தது படத்துடன் ஒன்றாமல் தடுத்து விடுகிறது. நிறைய லாஜிக் மீறல்களும், குழப்பங்களுக்கான விடைகளில் ஏற்படும் குழப்பங்களும் அயற்சியைத் தந்துவிடுகிறது.
குறிப்பாக பார்வையாளர்களை படத்துடன் ஒன்றவைக்கும் எமோஷனல் கனெக்ட் போன்ற உணர்வுரீதியாக உள்ளிழுக்கும் காட்சிகள் பெயரளவில் வைக்கப்பட்டதும், அந்த காட்சிகள் படம் பார்ப்பவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததும் பெரும் மைனஸ்.
படத்தில் ஜிப்ரானின் பின்னணி இசை சில காட்சிகளில் ஓகே என்றாலும், ஒட்டுமொத்தமாக இன்னும் கூடுதல் விறுவிறுப்பைக் கூட்ட உதவியிருக்கலாம். முத்தையாவின் ஒளிப்பதிவு ஒட்டுமொத்தமாக நிறைவைத் தருகிறது. அருள் இ சித்தார்த் தேவையற்ற காட்சிகளால் நீளத்தை கூட்டாமல் கச்சிதமாக வெட்டியது பலம்.
மொத்தத்தில் தேஜாவு வித்தியாசமான முதல் பாதியில் தொடங்கி, வேகத்தை குறைக்கும் இரண்டாம் பாதியை நெருங்கி, வழக்கமான இறுதிப்பகுதியை சென்றடைந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகளுடன் கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் நல்ல த்ரில்லர் படங்களுக்கான பட்டியலில் 'தேஜாவு' இணைந்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT