Published : 14 Jul 2022 07:36 PM
Last Updated : 14 Jul 2022 07:36 PM
ரூ.1,050 கோடி கொடுத்தால் பிக்பாஸின் 16-வது சீசனை தொகுத்து வழங்குகிறேன் என நடிகர் சல்மான் கான் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கேட்ட டிவி நிர்வாகம் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எல்லா மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியைக்காண பிரத்யேக ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது இந்தி பிக்பாஸ் தற்போது 16-வது சீசனை எட்டியுள்ளது. இதில் கடந்த 13 ஆண்டுகளாக 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை இந்தியில் தொகுத்து வழங்கி வருகிறார் சல்மான் கான்.
இந்த ஆண்டு 16-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார். அவர் பலமுறை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், டிவி நிர்வாகம் அவரை விடுவதாக இல்லை. விரைவில் இந்தி 'பிக்பாஸ்' 16-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், வரும் சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தனது சம்பளத்தை மூன்று மடங்கு அதிகரிக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் சல்மான் கான் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தான் கேட்ட சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே நிகழ்ச்சி இம்முறை தொகுத்து வழங்குவேன் என கன்டிஷனாக சொல்லிவிட்டாராம்.
முந்தைய சீசன் அதாவது 15-வது சீசனுக்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கான் பெற்ற சம்பளம் ரூ.350 கோடி. அதைவிட மூன்று மடங்காக தற்போது ரூ.1050 கோடியை சம்பளமாக கேட்டிருக்கிறாராம் சல்மான் கான். இதைக்கேட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய சல்மான் கான், ''ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து வெளியேறத் திட்டமிடும்போது, தயாரிப்பாளர்கள் என்னை சம்மதிக்க வைக்கிறார்கள். மேலும், அதனால் மீண்டும் நான் தொகுப்பாளராக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது'' என்று பேசியிருந்தார். ஒருவேளை நிகழ்ச்சியிலிருந்து விலகுவதற்காக இவ்வளவு தொகையை கேட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT