Published : 11 Jul 2022 11:45 AM
Last Updated : 11 Jul 2022 11:45 AM
'கடுவா' படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய வசனத்திற்காக நடிகர் பிருத்விராஜ் மற்றும் இயக்குநர் ஷாஜி கைலாஷ் ஆகியோர் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்த திரைப்படம் 'கடுவா'. இப்படம் கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், அர்ஜுன் அசோகன் உட்பட பலர் நடித்திருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப்பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தப்படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை காயப்படுத்தும் வகையிலான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான கண்டனங்களும் எழுந்தன. படக்குழுவினருக்கு மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், படத்தின் இயக்குநர் ஷாஜி கைலாஷும் பிருத்விராஜும் அந்த வசனங்களுக்காக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக இயக்குநர் ஷாஜி கைலாஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 'கடுவா படத்தில் இடம்பெற்றுள்ள அந்த வசனம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களை காயப்படுத்துவதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நாங்கள் அந்த வசனத்தை உள்நோக்கத்துடன் வைக்கவில்லை. வில்லனின் கொடுமையை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வசனம் சேர்க்கப்பட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த வார்த்தைகள் உங்களுக்கு ஏற்பட்ட வலியைத் தீர்க்காது என்பது தெரியும். இந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார். இதனை ஷேர் செய்து நடிகர் பிரித்விராஜும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT